‘கபடி’ விளையாட்டை ஊக்குவிக்க வேண்டும்


‘கபடி’  விளையாட்டை  ஊக்குவிக்க வேண்டும்
x
தினத்தந்தி 25 May 2017 8:30 PM GMT (Updated: 2017-05-25T18:08:38+05:30)

இந்தியாவுக்கு புகழ் சேர்த்துவரும் விளையாட்டு என்றால், அதில் முன்னணியில் இருப்பது ‘கபடி’ தான்.

ந்தியாவுக்கு புகழ் சேர்த்துவரும் விளையாட்டு என்றால், அதில் முன்னணியில் இருப்பது ‘கபடி’ தான். ‘கபடி’ என்று இன்றைய காலக்கட்டங்களில் சொன்னாலும், அது தோன்றும்போது ‘சடுகுடு’ என்ற பெயரில்தான் அதுவும், தமிழ்நாட்டில் தான் தோன்றியது. தமிழன் ஆதிகாலத்தில் இருந்தே ‘சடுகுடு’ தான் விளை யாடினான். இதை ஏழைகளின் விளையாட்டு என்று கூட கூறலாம். காரணம், வேறெந்த விளையாட்டு என்றாலும் சரி, அதற்கு கொஞ்சமாவது பணம் செலவழித்து வலையோ, மட்டையோ, பந்தோ மற்றும் சாதனங்களோ வாங்கவேண்டிய கட்டாயம் இருக்கிறது. ஒரு காசு கூட செலவழிக்காமல் விளையாடக் கூடிய விளையாட்டு என்றால் அது கபடிதான்.

தமிழ்நாட்டில் இந்த விளையாட்டை ஊக்குவித்தது, தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் தான். ஊர் ஊராக ‘சடுகுடு’ விளையாட்டை விளையாடுவதற்கு ஊக்கமளித்து, வெற்றிபெறும் அணிகளுக்கு பரிசு தொகையும் தனது கையில் இருந்தே வழங்கினார். தமிழ்நாட்டில் மட்டுமே பெயர் பெற்றிருந்த ‘சடுகுடு’ விளையாட்டை, ‘கபடி’ என்ற பெயரில் உலக புகழ் வாய்ந்த விளையாட்டாக மாற்றியது அவரது மகனான மறைந்த ‘தினத்தந்தி’ அதிபர் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் தான். இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவராக இருந்த அவர், 1990–ம் ஆண்டில் சீன தலைநகர் பீஜிங்கில் நடந்த ஆசிய விளையாட்டு போட்டியின்போது கபடியையும் ஒரு விளையாட்டாக சேர்க்க அரும்பாடுபட்டார். அப்போது அவருடைய நண்பரான துபாய் மன்னரும் இதற்கு உறுதுணையாக இருந்து, அந்த ஆண்டு முதல் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ‘கபடி’ ஒரு விளை யாட்டாக அங்கீகரிக்கப்பட்டது. 90–ம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டியில் கபடி விளையாட்டில் இந்திய அணி தங்கப்பதக்கம் வென்றது. அப்போது முதல் தொடர்ந்து 7 போட்டிகளில் இப்போது வரை இந்தியாதான் தங்கப்பதக்கம் பெற்றுவருகிறது. கபடி விளையாட்டை, ஆசிய விளையாட்டு போட்டியில் சேர்த்ததால்தான், இந்தியாவுக்கு ஒரு தங்கப்பதக்கம் நிச்சயம் என்ற நிலை உருவாகியிருக்கிறது. இது மட்டுமல்லாமல், 2010–ம் ஆண்டு முதல் கபடி விளையாட்டில் பெண்கள் அணியும் சேர்க்கப்பட்டு, அதிலும் கடந்த 2 போட்டிகளில் இந்தியா தங்கப்பதக்கம் பெற்றுள்ளது.

இவ்வாறு கபடி விளையாட்டை இன்னும் ஊக்குவித்து, ஒலிம்பிக்போட்டியில் சேர்ப்பதற்கும் முயற்சிகள் எடுக்க வேண்டிய நேரத்தில், தமிழ்நாட்டில் பல இடங்களில் கபடி போட்டிகள் நடத்துவதற்கு போலீசார் அனுமதி மறுத்து வருவதாக, கடந்த நான்கைந்து ஆண்டுகளாகவே குறை கூறப்பட்டு வருகிறது. இதையொட்டி, கடந்த 2013–ம் ஆண்டு சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில் நீதிபதி ராஜா, அனைத்து போலீஸ் அதிகாரிகளும் கபடி போட்டிகளை நடத்துவதற்கு அனுமதி மறுக்கும் நடவடிக் கைகளில் ஈடுபடக்கூடாது. கோர்ட்டின் இந்த உத்தரவை போலீஸ் டி.ஜி.பி., அனைத்து நகர போலீஸ் கமி‌ஷனர் களுக்கும், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளுக்கும் உத்தர வாக பிறப்பிக்கவேண்டும் என்று கூறியிருந்தார். ஆனாலும், இந்த உத்தரவு சரியாக போய்ச் சேரவில்லையோ, என்னவோ தெரியவில்லை. இன்னும் பல இடங்களில் திரு விழாக்கள் போன்ற நேரங்களிலும், உள்ளூர் கபடி கிளப்கள் நடத்தும் கபடி போட்டிகளுக்கும் அந்தந்த ஊர் போலீசார் அனுமதி மறுத்துவரும் நிலை தொடர்ந்து இருந்து வருகிறது. எனவே, கபடி போட்டிகளை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று மீண்டும் தொடரப்பட்ட வழக்கை நீதிபதிகள் டி.ராஜா, பி.வேல்முருகன் ஆகியோர் கொண்ட பெஞ்சு விசாரித்து, கபடி விளையாட்டை அனுமதிக்க வேண்டும் என்று உறுதிபட பிறப்பித்துள்ள தீர்ப்பு மிகவும் வரவேற்கத்தக்கதாகும், கபடி விளையாட்டுக்கு புத்துயிர் அளிப்பதாகவும் இருக்கிறது. எனவே, கபடி விளையாட்டுப் போட்டியை பட்டித்தொட்டி எல்லாம் ஊக்குவிக்க அனை வரும் பாடுபட வேண்டும். அதற்கு தடையாக யாரும் இருக்கக்கூடாது.

Next Story