கீழடி அகழ்வாராய்ச்சிக்கு இந்த தொகை போதுமா?


கீழடி  அகழ்வாராய்ச்சிக்கு இந்த தொகை போதுமா?
x
தினத்தந்தி 28 May 2017 9:30 PM GMT (Updated: 2017-05-28T22:34:41+05:30)

உலகில் பல நாடுகள், ‘‘நாங்கள் பண்டைய காலத்தி லிருந்து நாகரிகம் மிக்கவர்கள். எங்கள் வரலாறு போற்றுதலுக்குரியவை’’ என்று நெஞ்சம் நிமிர்த்தி சொல்வது வழக்கம்.

லகில் பல நாடுகள், ‘‘நாங்கள் பண்டைய காலத்தி லிருந்து நாகரிகம் மிக்கவர்கள். எங்கள் வரலாறு போற்றுதலுக்குரியவை’’ என்று நெஞ்சம் நிமிர்த்தி சொல்வது வழக்கம். இந்த பெருமைக்கெல்லாம் அத்தாட்சி யாக, அசைக்கமுடியாத ஆதாரமாக அவர்கள் தங்கள் நாட்டில் நடந்த அகழ்வாராய்ச்சி காரணமாக வெளியிடப்பட்ட கண்டுபிடிப்புகளைத்தான் சொல்வார்கள். இந்தியாவை எடுத்துக்கொண்டால் இதுவரை சிந்து சமவெளி நாகரிகத் தைத்தான் பெருமையோடு கூறிக்கொண்டிருக்கிறார்கள். சிந்து சமவெளி நாகரிகம் சிறப்புக்குரியது என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்கமுடியாது. ஆனால், சிந்து சமவெளி நாகரிகத்துக்கு முன்பே, ‘‘முந்து சமவெளி நாகரிகமாக திகழ்ந்தது தமிழர்களின் நதிக்கரை நாகரிகம்தான்’’. தமிழகத்தில் ஆதிச்சநல்லூரில் 6 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் வாழ்ந்த அடையாளம் இருக்கிறது என்றால், நிச்சயமாக பாண்டிய மன்னர்கள் தலைநகரமாக கொண்ட மதுரையைச் சுற்றிலும் இன்னும் நிறைய அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்படவேண்டும் என்பதை கீழடி ஆய்வுமுடிவுகள் உறுதிப்படுத்துகின்றன.

தொல்பொருள் கண்காணிப்பாளர் அமர்நாத் ராம கிருஷ்ணன் தலைமையில் கடந்த 2015–ம் ஆண்டு மார்ச் மாதம் கீழடியில் ஆய்வுப்பணிகள் தொடங்கின. மார்ச் முதல் செப்டம்பர் வரை முதல்கட்ட ஆய்வும், 2016–ம் ஆண்டு ஜனவரி 18 முதல் செப்டம்பர் வரை 2–வது ஆய்வும் நடத்தப்பட்டு இதுவரை 100 குழிகள் தோண்டப்பட்டு
5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரியவகை பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அங்கே உள்ள கட்டிட அமைப்புகள் அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டவர்களையே அதிசயிக்க வைத்தது.

இந்தநிலையில், இதை மேலும் தீவிரமாக அகழ்வா ராய்ச்சி நடத்தாமல், அதிகாரி அமர்நாத் ராமகிருஷ்ணனை அசாம் மாநிலத்திக்கு மாற்றியது அங்குள்ள மக்களை கொதிப்படைய வைத்துவிட்டது. இத்தகையச் சூழ்நிலையில் மத்திய கலாசார ராஜாங்க மந்திரி மகேஷ் ‌ஷர்மாவும், மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை ராஜாங்க மந்திரி நிர்மலா சீதாராமனும் கீழடிக்கு வந்து ஆய்வு நடத்தினர். தற்போது 3–ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணி நேற்று முன்தினம் தொடங்கியுள்ளது. இதுவரை நடந்த அகழ்வாராய்ச்சி மிகவும் சுமுகமான வகையிலும், சிறப்பாகவும் இருந்தது. கிறிஸ்து பிறப்பதற்கு 2 நூற்றாண்டுகளுக்கு முன்பே இந்தப்பகுதியில் கலாசாரமும், நாகரிகமும் உயர்ந்த நிலையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த அகழ்வா ராய்ச்சியின் 3–ம் கட்ட பணிகளுக்காக 40 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது என்று மகேஷ் ‌ஷர்மா கூறியதுதான் பெரிய ஏமாற்றமாக இருக்கிறது.

அகழ்வாராய்ச்சி நடந்து கொண்டிருப்பது அங்குள்ள தென்னந்தோப்பில்தான். ஒன்று அந்த நிலத்தை வாங்க வேண்டும் அல்லது நீண்டகால ஒப்பந்தம் செய்யப்பட வேண்டும். இதற்கு 40 லட்சம் ரூபாய் போதாது. இதில், அகழ்வாராய்ச்சிகளை எப்படி மேற்கொள்வது? இதுமட்டு மல்லாமல், ஏற்கனவே இரண்டு கட்டங்களில் அகழ்வாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட பொருள்கள் சிவகங்கை, மதுரை, சென்னை மியூசியங்களில் வைக்கப்படும் என்று இந்திய தொல்பொருள் ஆராய்ச்சி துறை டைரக்டர் ஜெனரல் அறிவித்துள்ளார். தமிழக அரசு அங்கேயே மியூசியம் வைக்க இடம் தருவதாக கூறியிருக்கிறது. உடனடியாக தமிழக அரசும், இந்திய தொல்பொருள் ஆராய்ச்சி துறையும் இணைந்து கீழடியிலேயே ஒரு மியூசியம் வைக்க ஏற்பாடு செய்யவேண்டும். சிந்து சமவெளியில் அகழாய் வுகள் நடந்த இடங்களை அப்படியே வைத்திருக்கும்போது கீழடியில் ஏற்கனவே அகழாய்வு நடந்த இடங்களை மூடி விட்டார்கள். இதுபோன்ற நிலைமைகளை தவிர்த்து அகழாய்வு நடந்த இடங்களை அப்படியே வைத்திருந்தால் எதிர்கால சந்ததியினரும் அறிவதற்கு வசதியாக இருக்கும். கவிஞர் வைரமுத்து கூறியதுபோல இந்திய நாகரிகத்தின் இரு கண்கள் தமிழும்–வடமொழியும். இந்திய நாகரிகத்தின் இரண்டு பக்கங்கள் திராவிட நாகரிகமும்–ஆரிய நாகரிக முமாகும். அப்படி இருக்க ஒன்றை வளர்த்து அடுத்ததற்கு ஊக்கம் அளிக்காமல் இருப்பது சரியல்ல. தமிழர்களின் பண்டைய நாகரிகம் தரணிக்கு தெரியட்டும்.

Next Story