மாட்டு சந்தைக்கு போக முடியாதா?


மாட்டு சந்தைக்கு போக முடியாதா?
x
தினத்தந்தி 29 May 2017 8:30 PM GMT (Updated: 2017-05-29T23:41:40+05:30)

தந்தை பெரியார் அந்தகாலத்திலேயே ‘உணவு பற்றாக் குறை தீர’ என்ற தலைப்பில் முதல் பரிகாரமாக, நம் மக்களுக்கு அரிசி சோறு தேவையற்றதும், வழக்கமற்றதும் ஆகும்.

ந்தை பெரியார் அந்தகாலத்திலேயே ‘உணவு பற்றாக் குறை தீர’ என்ற தலைப்பில் முதல் பரிகாரமாக, நம் மக்களுக்கு அரிசி சோறு தேவையற்றதும், வழக்கமற்றதும் ஆகும். ஆடு, கோழி, பன்றி முதலிய மாமிசம் சாப்பிடும் மக்களை மாட்டிறைச்சி சாப்பிடும்படி செய்து, அது எளிதாய் குறைந்த விலைக்கு கிடைக்கும்படி செய்யவேண்டும் என்று கூறியுள்ளார். அப்படிப்பட்ட மாட்டிறைச்சிக்காக கால்நடை சந்தைகளில் மாடுகளை விற்க தடைசெய்யும் ஒரு உத்தரவை மத்திய அரசாங்கம், யாரும் எதிர்பார்க்காத வகையில் பிறப்பித்துள்ளது. மிருகவதை தடுப்பு (கால்நடை சந்தைகள் ஒழுங்குபடுத்துதல்) விதிகள் என்ற பெயரில் ஒரு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. பா.ஜ.க. அரசாங் கத்தின் 3 ஆண்டு நிறைவில் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிக்கை, நாடு முழுவதும் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே கடந்த ஒரு மாதத்துக்குப் முன்புதான் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் தலைவரான மோகன் பகத், பசு வெட்டுவதை தடைசெய்யும் வகையில் ஒரு அகில இந்திய சட்டம் கொண்டுவரவேண்டும் என்று மத்திய அரசாங்கத்துக்கு கோரிக்கை விடுத்திருந்தார். இதன்மூலம் அந்த கோரிக்கை நிறைவேறியிருக்கிறது.

இந்த உத்தரவின்மூலம், மாட்டு சந்தைகளில் விவ சாயிகள், கால்நடை வியாபாரிகள், பசு, காளை, எருமை, ஒட்டகம் போன்ற மிருகங்களை இறைச்சிக்காக வெட்டு வதற்காக விற்பனை செய்ய தடை செய்யப்படுகிறது. கால் நடை சந்தைகளில் கால்நடைகளை விற்பதற்காக கொண்டு வருபவர்கள் ஒரு உறுதிமொழி பத்திரத்தை எழுதிக்கொண்டு வரவேண்டும். அதில், கால்நடையின் உரிமையாளரோ, அல்லது அவரால் அங்கீகாரம் பெற்றவரோ, இந்த கால்நடை இறைச்சிக்காக வெட்டுவதற்கு கொண்டுவரப் படவில்லை என்று உத்தரவாதம் தரவேண்டும். இதுபோல, அதை வாங்குபவரும் போட்டோ ஒட்டிய அடையாள அட்டையுடன் நான் இறைச்சிக்காக வெட்டுவதற்கு வாங்க வில்லை என்று எழுதித்தரவேண்டும். இறைச்சிக்காக இதுபோன்ற கால்நடைகளை வாங்குபவர்கள் கால்நடை பண்ணைகளுக்கு சென்றுதான் வாங்கவேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதெல்லாம் ‘இல்லாத ஊருக்கு போகாத வழியாகும்’.

முதலில் இறைச்சிக்காகவே ஒருவர் கால்நடையை வாங்குகிறார் என்று எடுத்துக்கொண்டால், அவர் எந்த பண்ணையை எங்கே போய்த்தேடுவார்?. அடுத்து கிராமப் புறங்களில் உள்ள படிக்காத பாமரர்களும், வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளும் தங்கள் வயிற்று பிழைப்புக்காக மாடு, காளை, எருமை போன்றவற்றை விற்கவேண்டுமென்றால் சந்தைக்குத்தான் செல்வார்கள். இந்த விதியில் குறிப்பிட்ட நடைமுறைகள் எல்லாம் நிச்சயமாக ஏழை விவசாயிகளுக்கு சாத்தியமல்ல. மதரீதியான பலிகளுக்காக எருமை வாங்குபவர்கள் எருமை பண்ணைக்கு சென்றுதான் வாங்கமுடியும் என்றால் நிச்சயமாக முடியாது. மாடுகளின் கொம்புகளில் வர்ணம்பூசுவது இனிமேல் மத்திய அரசின் உத்தரவுப்படி மிருகவதை என்றால், மாட்டுப்பொங்கலை எப்படி கொண்டாடுவது? மாட்டுப்பொங்கல் அன்று கொம்புகளில் வர்ணம் பூசுவதைத் தான் முக்கிய கடமையாக செய்வார்கள்.

இதுமட்டுமல்லாமல், அமெரிக்காவுக்கு மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்யும் நாடுகளில் இந்தியாதான் முதல் இடத்தில் இருக்கிறது. அமெரிக்காவுக்கு மட்டும் 11 லட்சம் டன் மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்யப்படுகிறது. மொத் தத்தில், ஆண்டுதோறும் ரூ.26 ஆயிரம் கோடிக்கு வெளி நாடுகளுக்கு எருமை இறைச்சியும், ரூ.78 ஆயிரம் கோடிக்கு தோல்பொருள் விற்பனையும் நடந்துகொண்டிருக்கிறது. இந்த உத்தரவின் காரணமாக, இந்த ஏற்றுமதி எல்லாம் பெருமளவில் பாதிக்கப்பட்டுவிடும். ஏழை விவசாயிகள் வறட்சி காலத்திலும், கடன்சுமை ஏற்படும்போதும், வேறு வழியில்லாமல் சந்தைக்கு சென்றுதான் மாடுகளை விற்பார்கள். இவ்வளவு கட்டுப்பாடுகளை அவர்களால் நிச்சயமாக தாங்க முடியாது. மேலும் ஆட்டுக்கறி, கோழிக் கறி வாங்க முடியாத ஏழைகளுக்கு அவர்களது உடல் உழைப்புக்கேற்ற உணவு மாட்டுக்கறிதான். கேரளா, கர்நாடக அரசுகள் இது மாநில பட்டியலில் வருகிறது. நாங்கள் நிறைவேற்றமுடியாது என்று உறுதிபட கூறி விட்டன. தமிழக அரசும் இந்த புதிய உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்.


Next Story