ஆற்றல் உள்ளவர்களை கொண்டுவரும் அவசர சட்டம்


ஆற்றல்  உள்ளவர்களை கொண்டுவரும் அவசர சட்டம்
x
தினத்தந்தி 31 May 2017 9:30 PM GMT (Updated: 31 May 2017 5:17 PM GMT)

பழங்கால சீன முதுமொழி ஒன்று இன்றும் உலகம் முழுவதும் எண்ணிப்பார்க்க வேண்டிய ஒரு அற்புதமான கருத்தை எடுத்துக்காட்டுகிறது.

ழங்கால சீன முதுமொழி ஒன்று இன்றும் உலகம் முழுவதும் எண்ணிப்பார்க்க வேண்டிய ஒரு அற்புதமான கருத்தை எடுத்துக்காட்டுகிறது. ‘‘ஒரு ஆண்டைப்பற்றி நீ திட்டமிட வேண்டும் என்றால், நெல் பயிரிடு, 10 ஆண்டு களைப்பற்றி திட்டமிட வேண்டும் என்றால், மரக்கன்றுகளை நடு, 100 ஆண்டுகளைப்பற்றி சிந்திக்க வேண்டும் என்றால் மக்களுக்கு கல்வி புகட்டு’’ என்பதுதான் அந்த முதுமொழி யாகும். அந்தவகையில், ஒரு சமுதாயத்தின் உயர்வே கல்வியில் இருக்கிறது. அதிலும் உயர்கல்விதான் தனிநபரின் வாழ்க்கையின் வாசலையும் திறந்து வைக்கிறது. சமுதாய முன்னேற்றத்தின் வழியைக்காட்டுகிறது. இதில், பல்கலைக்கழகங்களின் பணி மிகவும் இன்றியமையாதது. ஒரு பல்கலைக்கழகத்தின் உயர்வோ தாழ்வோ அதற்கு தலைமை தாங்கி நடத்தும் துணைவேந்தர்கள் கையில்தான் உள்ளது.

சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவளாக இருக்கவேண்டும் என்பது பழமொழி. பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கும் இது பொருந்தும். பல்கலைக்கழக துணைவேந்தர்கள் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவர்களாக இருக்கவேண்டும். ஆனால், சமீப காலங்களாக பல்கலைக் கழக துணைவேந்தர்கள் நியமனத்திலும் ஒருசில பல்கலைக்கழக துணைவேந்தர்கள்மீதும் நிறைய ஊழல் புகார்கள் கூறப்பட்டன. ஊழல் புகாரில் ஒரு பல்கலைக்கழக துணைவேந்தருக்கு நீதிமன்றம் தண்டனை வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. ஆக, அப்பழுக்கு இல்லாத கல்வியாளர்களை பல்கலைக்கழக துணைவேந்தர்களாக நியமிக்கவேண்டும் என்ற கோரிக்கை நாளுக்குநாள் வலுத்துவந்தது. இந்தநிலையில், பல்கலைக்கழக வேந்த ரான தமிழக பொறுப்பு கவர்னர் வித்யாசாகர் ராவ் மிகவும் துணிச்சலாக தேர்வுக்குழுவால் ஒவ்வொரு பல்கலைக் கழகத்திற்கும் பரிந்துரை செய்யப்பட்ட 3 பேர்களையும் நேர்முகத்தேர்வு வைத்து தேர்வு செய்தார். மீன்வள பல்கலைக்கழக துணைவேந்தர் இவ்வாறு நேர்முகத்தேர்வு வைத்துத்தான் தேர்ந்தெடுக்கப்பட்டார். அண்ணா பல்கலைக்கழகத்திற்கு தேர்வுக்குழு பரிந்துரை செய்த 3 பேர்களையும் நிராகரித்தார். அடுத்து மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திற்கு துணைவேந்தராக பி.பி.செல்லத் துரையும், சென்னை பல்கலைக்கழக துணைவேந்தராக பி.துரைசாமியையும் நியமனம் செய்தார். இந்த நியமனம் செய்த அன்றே கவர்னர், எதிர்காலத்தில் நியமிக்கப்பட இருக்கும் பல்கலைக்கழக துணைவேந்தர்களின் தகுதி மற்றும் தேர்வுக்குழு அமைக்கும் காலவரையறை எல்லா வற்றையும் வைத்து ஒரு அவசர சட்டத்தை பிறப்பித்தார். இதன்படி, ஒரு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவி முடிவதற்கு 6 மாதங்களுக்கு முன்பே தேர்வுக்குழு அமைக்கப்படவேண்டும். செனட் மற்றும் சிண்டிகேட் பிரதிநிதிகள் தேர்வு 2 மாதங்களுக்குள் முடிக்கப்படவேண்டும். இந்த தேர்வுக்குழு அமைக்கப்பட்டு 4 மாதங்களுக்குள் பெயர்கள் பரிந்துரைக்கப்படவேண்டும்.

துணைவேந்தரின் பதவிகாலம் முடிவதற்கு ஒரு நாளைக்கு முன்போ அல்லது முடிந்த உடனோ புது துணைவேந்தரின் பெயரை கவர்னர் வெளியிடுவார்.
ஆக, எதிர்காலத்தில் துணைவேந்தர் பதவி காலியாகவே இருக்காது. தேர்வுக்குழுவும், உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் அரசு சார்பில் பிரதிநிதியாக ஓய்வு பெற்ற முதன்மை செயலாளர் பதவிக்கு குறையாத அதிகாரி ஒருவர் அல்லது புகழ்வாய்ந்த கல்வி நிபுணர் ஒருவர் நியமிக்கப்பட்டு பல்கலைக்கழகத்தின் பிரதிநிதியாக சிறப்புவாய்ந்த கல்வியாளர் ஒருவர் நியமிக்கப்படுவார். இதுபோல, யார் பல்கலைக்கழக துணைவேந்தர் பொறுப்புக்கு பரிந்துரை செய்யப்பட வேண்டும் என்பதற்கும், பல்கலைக்கழக மானியக்குழு நிர்ண யித்துள்ள தகுதிகளே தமிழகத்துக்கும் நிர்ணயிக்கப்பட இருக்கிறது. இந்த அவசர சட்டம் பிறப்பித்த உடனேயே அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கான தேர்வுக்குழுவுக்கு ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி லோதாவை கவர்னர் நியமித்துவிட்டார். ஆக, இனி தமிழ் நாட்டில் உள்ள துணைவேந்தர்கள் எல்லோரும் அப்பழுக் கற்ற, ஆற்றல் அதிகம் உள்ள, தொலைநோக்கு பார்வை கொண்ட, தமிழ்நாட்டில் கல்லூரிகளின் கல்வித்தரம் எல்லாம் உயர்த்தவல்ல சிறந்த கல்வியாளர்களாகத்தான் இருப்பார்கள். அதற்கு இந்த அவசர சட்டம் வழிகாட்டிவிட்டது என்பதுதான் கல்வியாளர்களின் கருத்தாகும்.

Next Story