வியாபாரிகளோடு ஆலோசனை நடத்த வேண்டும்


வியாபாரிகளோடு ஆலோசனை நடத்த வேண்டும்
x
தினத்தந்தி 2 Jun 2017 9:30 PM GMT (Updated: 2 Jun 2017 12:32 PM GMT)

ஜூலை மாதம் முதல் சரக்கு சேவை வரியை நாடு முழுவதிலும் அமலுக்கு கொண்டுவர மத்திய அரசாங்கம் தீவிரமாக இருக்கிறது. ஜெயலலிதா உயிரோடு இருந்தவரையில் இந்த வரியை நிறைவேற்ற முடியவில்லை.

ஜூலை மாதம் முதல் சரக்கு சேவை வரியை நாடு முழுவதிலும் அமலுக்கு கொண்டுவர மத்திய அரசாங்கம் தீவிரமாக இருக்கிறது. ஜெயலலிதா உயிரோடு இருந்தவரையில் இந்த வரியை நிறைவேற்ற முடியவில்லை. ஏனெனில், ஜெயலலிதா தமிழ்நாடு ஒரு உற்பத்தி மாநிலம். இந்த வரியை விதித்தால் தமிழகத்துக்கு இழப்பு ஏற்படும் என்றவகையில் இதை ஏற்றுக்கொள்ளாமல் இருந்தார். அவர் மறைவுக்குப்பிறகு, தமிழக அரசு சரக்கு சேவை வரியை ஏற்றுக்கொண்டது. கடந்த ஏப்ரல் மாதம் பாராளுமன்றத்தில் சரக்கு சேவை வரி தொடர்பாக 4 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதில், மாநில அரசு தொடர்பான மசோதா அந்தந்த சட்டசபையில் நிறைவேற்றி ஆகவேண்டும். சரக்கு சேவை வரி 5, 12, 18, 28 என்ற சதவீதங்களில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இறுதியாக மீண்டும் ஒரு கூட்டம் இன்று நடக்க இருக்கிறது.

22 மாநில சட்டசபைகளில் இந்த மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுவிட்டன. தமிழக சட்டசபை இந்த மாதத்தில் கூடும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது. அந்த கூட்டத்தொடரில் சரக்கு சேவை வரி மசோதா நிறைவேற்றப்பட இருக்கிறது. ஆனால், இப்போது அரசாங்கம் நிர்ணயித்துள்ள வரி விகிதங்கள் பல பொருட்களின் விலையை உயர்த்திவிடும். எனவே, வரி விகிதத்தை குறைக்கவேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளன. சில முரண்பாடுகள் இருக்கின்றன. எடுத்துக்காட்டாக, லட்டு போன்ற இனிப்பு வகைகள் 5 சதவீத வரி விதிப்புக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், லட்டு செய்வதற்கு என்னென்ன பொருள் வேண்டுமோ, அந்த பொருட்களை வைத்துத்தான் காரா பூந்தி என்று கூறப்படும் காரவகைகள் தயாரிக்கப்படுகிறது. ஆனால், காராபூந்தியின் வரி 18 சதவீதம். இதுமட்டுமல்லாமல், ஓட்டல்களுக்கு விதிக்கப்பட்டுள்ள 5, 12, 18 சதவீத வரிவிகிதங்கள், உணவு சாப்பிட வரும் பொதுமக்களுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று குறை கூறப்படுகிறது.

இதேபோல, பெட்ரோல், டீசல், மதுபான வகைகள், ரியல் எஸ்டேட், சொத்து பரிமாற்றங்கள் போன்றவை தற்போது சரக்கு சேவை வரிக்குள் கொண்டுவரப்படவில்லை. நகைகள், பிஸ்கெட்டுகள், காலணிகள் போன்ற சிலவகை பொருட்களுக்கு இன்னும் வரிவிதிக்கப்படவில்லை. தங்கத்துக்கு 1.25 சதவீதம் மட்டுமே வரிவிதிக்கும் வகையில் ஒரு புதிய வரி விகிதத்தை சரக்கு சேவை வரியில் கொண்டுவரவேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் இத்தகைய கோரிக்கைகளின் குரல் பலமாக இருப்பதால், மத்திய வருவாய்த்துறை செயலாளர் ஹஸ்முக் ஆதியா கடந்தவாரம் மைசூரூரில் தொழில் அதிபர்களையும், வியாபாரிகளையும், சரக்கு சேவை வரி கட்டும் பொதுமக்களையும் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இதுபோல கூட்டத்தை பெங்களூருவிலும் நடத்தினார். அங்கு மாநில அரசு சட்டசபையில் வருகிற 6–ந் தேதி மசோதாவை நிறைவேற்றுவதற்கு முன்பு, இந்த கூட்டத்தில் சரக்கு சேவை வரி தொடர்பாக வியாபாரிகள், பொதுமக்கள் மற்றும் பல்வேறு தரப்பினரை சந்தித்து பேசியது நிச்சயமாக பலன் அளிக்கும். ஏற்கனவே தமிழ்நாட்டில் வணிகர் சங்கங்கள், தி.மு.க. வர்த்தகர் அணி ஆகியவை இந்த சட்டத்தை அமலுக்கு கொண்டுவருவதற்கு முன்பு, வியாபாரிகளை கலந்து ஆலோசிக்கவேண்டும் என கோரிக்கைவிடுத்துள்ளனர். கர்நாடகம் வந்த மத்திய வருவாய்த்துறை செயலாளர், இதுபோல கூட்டத்தை தமிழ்நாட்டிலும் கூட்டி, தமிழக வியாபாரிகள், பொதுமக்களையும் சந்தித்து அவர்கள் குறைகளையும் கேட்டு, அதையும் நிவர்த்தி செய்யும் வகையில் நடவடிக்கையை மேற்கொள்ளவேண்டும். தமிழக அரசும் உடனடியாக மத்திய அரசாங்கத்திடம், தமிழ்நாட்டுக்கும் மத்திய அரசாங்க உயர் அதிகாரிகள் குழுவை அனுப்பி ஆலோசனை நடத்தவேண்டும் என்று வலியுறுத்தவேண்டும்.

Next Story