துணிச்சலாக அறிவிக்கிறார்கள்


துணிச்சலாக  அறிவிக்கிறார்கள்
x
தினத்தந்தி 4 Jun 2017 8:30 PM GMT (Updated: 2017-06-04T23:03:55+05:30)

எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்குவந்த 100 நாட்களிலும், அமைச்சர்கள் அவரவர் துறை தொடர்பான பணிகளில் அவர்களே முடிவெடுத்து பல திட்டங்கள், பல அறிவிப்புகளை தைரியமாக வெளியே சொல்லி மக்களை ஆச்சரியக்கடலில் மூழ்கடித்து விடுகிறார்கள்.

ஜெயலலிதா மறைவுக்கு பின், தமிழக முதல்–அமைச்சராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்று 100 நாட்கள் ஆனதையொட்டி, ‘புரட்சித்தலைவி அம்மா’வின் அமைதி, வளம், வளர்ச்சி என்றவழியில், நிலையான ஆட்சி–நிரந்தர வளர்ச்சிதரும் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசின் 100 நாள் சாதனைகள் என்று தமிழக அரசு சார்பிலும், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு பொறுப்பேற்று 3 ஆண்டுகள் ஆனதையொட்டி உங்கள் நம்பிக்கை, உங்கள் விசுவாசம், ‘‘நம்நாடு முன்னேறிச் செல்கிறது’’ என்ற தலைப்பிலும் தங்கள் சாதனைகளை பட்டியலிட்டு இரு அரசுகளும் வெளியிட்டன. இரண்டுமே கடந்த மாதம் 26–ந் தேதிதான் நிறைவடைந்தன. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, 30–வது முதல்–அமைச்சராக சிலநாட்கள் ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்து, 31–வது முதல்–அமைச்சராக இப்போது 100 நாட்களைக் கடந்து எடப்பாடி பழனிசாமி இருக்கிறார். கடந்தகாலங்களில் அ.தி.மு.க. அமைச்சர்கள் தங்கள் பெயரில் எந்தவித அறிவிப்புகள், முடிவுகளை வெளியிடாமல் இருந்தனர். அரசியல் ரீதியாக கருத்துக்களையும் பெரும்பாலும் வெளியிடுவதில்லை.

ஆனால், எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்குவந்த 100 நாட்களிலும், அமைச்சர்கள் அவரவர் துறை தொடர்பான பணிகளில் அவர்களே முடிவெடுத்து பல திட்டங்கள், பல அறிவிப்புகளை தைரியமாக வெளியே சொல்லி மக்களை ஆச்சரியக்கடலில் மூழ்கடித்து விடுகிறார்கள். அவர்கள் திறமைகளெல்லாம் அரசு வானில் துணிச்சலாக சிறகடித்து வெளிவருகின்றன. முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை எடுத்துக் கொண்டால், இந்த 100 நாட்களில் 1,969 கோப்புகளில் கையெழுத்திட்டிருக்கிறார். 3 முறை டெல்லி சென்று பிரதமரை சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை வெளியிட்டிருக்கிறார். கல்வித்துறையை எடுத்துக் கொண்டால், அமைச்சர் செங்கோட்டையன் மிகப்பெரிய மறுமலர்ச்சியை ஏற்படுத்தி விட்டார். நிதி மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் மிகவும் தைரியமாக அரசியல் ரீதியாகவும், ஆட்சி ரீதியாகவும் பல கருத்துக்களை சொல்லி வருகிறார். மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி மின்சாரத்துறையில் பல சீர்திருத்தங்களை செய்துள்ளார். இந்த கடும் கோடைகாலத்தில் மின்வெட்டு பெரிய அளவில் இல்லாமல் பார்த்துக் கொண்டதே அவரது பெரிய சாதனையாகும்.

ஒவ்வொரு அமைச்சரும் தங்கள் துறைசார்பில் தாங்களே முடிவெடுத்து வேகமாக திட்டங்களை தீட்டுவது, அறிவிப்பது, நிறைவேற்றுவது நிச்சயமாக பாராட்டுக்குரியது. ஆனால், வறட்சி கடுமையாக வாட்டிக்கொண்டு இருக்கும் இந்த நேரத்தில், வறட்சிநிவாரண பணிகளிலும், நீர்நிலைகளை தூர்வாரும் பணிகளிலும் இன்னும் வேகம் வேண்டும். குறிப்பாக தமிழ்நாடு முழுவதும் குடிநீர் பற்றாக்குறையால் மக்கள் தவித்துக் கொண்டு இருக்கிறார்கள். எல்லா ஊர்களிலும் ஆறு, குளங்கள், ஏரிகளில் மட்டுமல்லாமல் கிணறுகளிலும், ஆழ்குழாய் கிணறுகளிலும்கூட தண்ணீர் வற்றிப் போய்விட்டது. குடிக்க தண்ணீர் கொடுக்க முடியாமல் ஆடு, மாடுகளை எல்லாம் விவசாயிகள் விற்று வருகிறார்கள். அரசாங்கம், தொழில்கள் எதுவும் தமிழ்நாட்டை விட்டு போகாமலும், வேலைவாய்ப்புகளை பெருக்கவும், நீர்நிலையை சீரமைக்கவும் முழுமுயற்சி எடுக்கவேண்டும். தொழில் முதலீடுகளை அதிகம் பெருக்கும் வகையில் சலுகைகளை வழங்கவேண்டும். தமிழகத்தில் கிடப்பில் இருக்கும் திட்டங்களில் தமிழக அரசு நிறைவேற்றவேண்டிய திட்டங்கள் எவை?, எவை?, மத்திய அரசாங்கம் நிறைவேற்றவேண்டிய திட்டங்கள் எவை?, எவை? என்று பட்டியலிட்டு விரைந்து நிறைவேற்ற உத்வேகம் வேண்டும். உடனடியாக போர்க்கால அடிப்படையில் தண்ணீர் இருக்கும் இடங்களை கண்டறிந்து அங்கு இருந்து தண்ணீர் எடுத்து அரசு செலவிலேயே தண்ணீர் இல்லாத இடங்களில் வினியோகிப்பதையே முதல் கடமையாக கொள்ள வேண்டும். இந்த குடிநீர் பஞ்சத்தை ஒரு பாடமாக எடுத்துக் கொண்டு அடுத்து பெய்யும் மழையில் ஒரு சொட்டுகூட வீணாக கடலில் போய் கலக்காமலும், நிலத்தடிநீர் சேகரிப்பிலும், மழைநீர் சேகரிப்பிலும் நிறைவேற்றப்படவேண்டிய திட்டங்களை நிறைவேற்ற வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக ஊழல் புகார் எந்த மட்டத்திலும் தலையெடுக்காமல் தூய்மையான, துடிப்புள்ள, வெளிப்படையான நிர்வாகம் வேண்டும்.

Next Story