எந்தெந்த பொருளுக்கு எவ்வளவு சரக்கு சேவை வரி?


எந்தெந்த பொருளுக்கு எவ்வளவு சரக்கு சேவை வரி?
x
தினத்தந்தி 5 Jun 2017 9:00 PM GMT (Updated: 2017-06-05T22:41:47+05:30)

பொதுமக்களுக்கு வலி இல்லாத வகையில் அனைத்து பொருட்களுக்கும் சரக்கு சேவைவரி மாற்றி அமைக்கப்படவேண்டும்.

டந்த பல ஆண்டுகளாகவே சரக்கு மற்றும் சேவை வரி விதிக்கப்படவேண்டும் என்ற முயற்சி இருந்தது. இதில், அனைத்து மாநிலங்களும்  ஒத்துழைத்தால்தான் சரக்கு மற்றும் சேவைவரி மசோதா நிறைவேற்றப்படும் என்றநிலையில், சில மாநிலங்கள் தொடக்கத்தில் இருந்தே எதிர்த்துவந்தன. தமிழ்நாட்டை பொறுத்தமட்டில், ஜெயலலிதா உயிரோடு இருக்கும்வரையில் சரக்கு மற்றும் சேவை வரியை அவர் ஏற்றுக்கொள்ளவே இல்லை. மாநில நிதி அமைச்சர்கள் கொண்ட சரக்கு மற்றும் சேவை வரி கவுன்சில் கூட்டம் பலமுறை நடந்தபோதிலும் தமிழகம் எதிர்ப்பு குரல்தான் எழுப்பிக்கொண்டிருந்தது. ஜெயலலிதா மறைந்தவுடன், தமிழக அரசு சரக்கு மற்றும் சேவை வரியை ஏற்றுக்கொண்டது. கடைசி மாநிலமாக தமிழ்நாடும் இந்த வரிவிதிப்பை ஏற்றுக்கொண்டதுடன், மத்தியஅரசாங்கம் மிகவேகமாக நடைபோட்டது. சரக்கு மற்றும் சேவை வரி என்பது ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் ஒரேமாதிரியான மறைமுக வரியாகும். அதாவது தற்போது ஒவ்வொரு பொருளுக்கும் பல கட்டங்களில் வரிவிதிப்பு நடக்கிறது. கலால்வரி, சேவைவரி, விற்பனைவரி, நுழைவுவரி, மதிப்பு கூட்டுவரி, கொள்முதல்வரி, ஆடம்பரவரி என்பதுபோல பலவரிகள் விதிக்கப்படுவதால், ஒவ்வொன்றுக்கும் கணக்கு வைத்துக்கொள்வதில், வரிகள் கட்டுவதில் வியாபாரிகளுக்கும், தொழில் அதிபர்களுக்கும் கஷ்டம். 

எத்தனை வரிகள் விதித்தாலும், எல்லாவற்றையும் தாங்கப்போவது பொதுமக்கள்தான் என்றவகையில், அவர்களுக்கும் கஷ்டம். இதையெல்லாம் மாற்றி இந்தியாவை ஒரே பொதுவான சந்தையாக ஒருங்கிணைப்பதுதான் சரக்கு மற்றும் சேவை வரி. சரக்கு மற்றும் சேவைகளை வழங்குவதில் உற்பத்தி செய்வது முதல் நுகர்வோருக்கு சென்றடையும்வரை ஒரே வரிவிதிப்புக்குள்ளாக்குவதுதான் சரக்கு மற்றும் சேவை வரியாகும். தற்போது பல பொருட்களுக்கு வரி இல்லை என்ற அளவிலும், அதைத்தொடர்ந்து தங்கம் 3 சதவீத வரிவிதிப்பிலும், பலபொருட்கள் 5 சதவீத வரிவிதிப்பிலும், பல பொருட்கள் 12 சதவீத வரிவிதிப்பிலும், பல பொருட்கள் 18 சதவீத வரிவிதிப்பிலும், ஆடம்பர பொருட்கள் என்றவகையில் வரும் பொருட்கள் 28 சதவீத வரிக்கும் உட்படுத்தப்பட்டுள்ளன. சரக்கு மற்றும் சேவை வரி ஜூலை 1–ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது. 

இதுமட்டுமல்லாமல், பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பலபொருட்கள் அதிக வரிவிதிப்புக்கு ஆளாகி உள்ளன. எடுத்துக்காட்டாக, ஷாம்பூ, கண் மை, அகர்பத்தி, பள்ளிக்கூட பைகள், ஹேர் டை, போன்ற பொருட்கள் அதிக வரிவிதிப்பில் உள்ளன. ஷாம்பூ, ஹேர் டை, ஷேவிங் கிரீம் போன்றவைகளும், பெண்கள் பயன்படுத்தும் கண் மையும், ஆடம்பர பொருட்கள் என்றாலும் அதற்கு 28 சதவீத வரி என்பது நிச்சயமாக ஏற்புடையதல்ல. இவைகளின் மீதான வரி குறைக்கப்படவேண்டும். மேலும், பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களின் விலை உயரும் அபாயம் இருக்கிறது. அனைத்து உணவுப் பொருட்களுக்கும் வரிவிலக்கு வேண்டும் என்று தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது. அடுத்த சரக்கு சேவை கவுன்சில் கூட்டம் 11–ந்தேதி நடக்கிறது. அந்த கூட்டத்தில், பொதுமக்களுக்கு வலி இல்லாத வகையில் அனைத்து பொருட்களுக்கும் சரக்கு சேவைவரி மாற்றி அமைக்கப்படவேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக எப்படி மாநில நிதி அமைச்சர்களிடமும் கருத்து கேட்கப்படுகிறதோ, அதுபோல வியாபாரிகள், தொழில் அதிபர்களிடமும் ஆலோசனை கேட்டு, ஏன் பொதுமக்களிடமும் கருத்துகேட்டு ஜூலை 1–ந்தேதி முதல் நடைமுறைக்கு கொண்டுவரும் முன்பு எந்தெந்த பொருட்கள் எந்தெந்த வரிவிதிப்பிற்குள் ஆளாகி உள்ளது? என்ற ஒரு இறுதிப்பட்டியலை பொதுமக்கள் பார்வைக்கு வெளியிடவேண்டும். அன்றாடம் பயன்படுத்தும் சாதாரண பொருட்களுக்கு வரியில்லாத நிலையோ, அல்லது குறைந்த வரிவிதிப்பில் வரும் 3 சதவீத வரியையோ விதிக்கவேண்டும்.

Next Story