யானைகளை காப்பாற்ற வனத்தை காப்பாற்றுவோம்


யானைகளை  காப்பாற்ற  வனத்தை  காப்பாற்றுவோம்
x
தினத்தந்தி 6 Jun 2017 9:30 PM GMT (Updated: 6 Jun 2017 5:23 PM GMT)

தமிழ்நாட்டில் கடந்த 140 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடுமையான வறட்சி நிலவுகிறது. நாட்டில் மக்களுக்கு குடிக்கக்கூட தண்ணீர் இல்லை. இதுபோல, காட்டில் வாழும் விலங்குகளும் தண்ணீர் இல்லாமல் தவித்துக்கொண்டிருக்கின்றன.

மிழ்நாட்டில் கடந்த 140 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடுமையான வறட்சி நிலவுகிறது. நாட்டில் மக்களுக்கு குடிக்கக்கூட தண்ணீர் இல்லை. இதுபோல, காட்டில் வாழும் விலங்குகளும் தண்ணீர் இல்லாமல் தவித்துக்கொண்டிருக்கின்றன. நாட்டிலும், காட்டிலும் தண்ணீர் முறையாக சேமித்துவைக்காமல் இருந்ததற்கு சரியான திட்டமிடுதல் இல்லாததே காரணம். எப்படி மக்களுக்கு கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதோ?, அதுபோலதான் காட்டிலும் மிருகங்களுக்கு குடிக்கக்கூட தண்ணீர் இல்லாத காரணத்தால் தண்ணீர் எங்கேயாவது கிடைக்குமா? என்று காட்டை விட்டு வெளியேறி அருகிலுள்ள ஊருக்குள் புகுந்துவிடுகின்றன. தனக்கு தண்ணீர் இல்லையே என்ற கோபத்தில் எதிரே தென்படுவதையெல்லாம் அடித்து நொறுக்குகிறது. மனிதர்களின் நண்பராக கருதப்பட்டு வந்த யானை, இப்போது மனிதர்களின் உயிரைப்பறிக்கும் விரோதியாக மாறிவிட்டது என்றால், அதற்கு காரணம் காட்டிற்குள் தண்ணீர் இல்லாததுதான். கோயம்புத்தூர் அருகே மதுக்கரை வனப்பகுதியில் வளமான பகுதிகள் வறண்டுபோய் தண்ணீர் இல்லாததால் கடந்த வாரம், ஒரு ஒற்றை ஆண் யானை தண்ணீரை தேடி ஊருக்குள் புகுந்தது. ஊரில் உள்ளவர்கள் விரட்டிப்பார்த்தார்கள். வனத்துறையினர் பட்டாசு வெடித்து பார்த்தார்கள். எதுவும் நடக்கவில்லை. வெள்ளளூர் என்ற ஊருக்குள் புகுந்து ஆக்ரோ‌ஷத்துடன் 4 பேரை மிதித்துக்கொன்றுவிட்டது.

தமிழக அரசு, குறிப்பாக வனத்துறை இனிமேலும், தீவிர நடவடிக்கை எடுக்காமல் இருப்பது சரியல்ல. ஒவ்வொரு யானைக்கும் நாள் ஒன்றுக்கு 150 முதல் 250 கிலோ வரை புல் மற்றும் இலை தழைகள் தேவை. இதுபோல குடிநீரும் நாள் ஒன்றுக்கு ஏறத்தாழ 200 முதல் 300 லிட்டர் வரை தேவை. குடிநீரும், உணவும் காட்டில் கிடைக்காத காரணத்தினால்தான் யானைகள் நாட்டுக்குள் வருகிறது. இதுமட்டுமல்லாமல், வனங்களை அழித்து குடியிருப்புகள் உருவாவதினால் யானைகள் வாழ்விடம் பாதிக்கப்படுகின்றன. மேலும், யானை ஒரே இடத்தில் இருப்பதில்லை. எங்கு தண்ணீர் மற்றும் உணவு கிடைக்கிறதோ?, அந்த இடங்களை தேடிச்செல்வது வழக்கம். தமிழ்நாடு, கேரளா, கர்நாடகம் போன்ற வனப்பகுதிகளில் எங்கு, எந்த காலத்தில் பசுமையாக இருக்கும் என்பது யானைகளுக்கு நன்றாகத் தெரியும். ஒவ்வொரு காலகட்டத்திலும் அந்த இடங்களைத்தேடி தினமும் 30 கி.மீ. தூரம் ஒரேவழியாக செல்லும். அதைத்தான் ‘யானை வழித்தடம்’ என்கிறோம். அந்தப்பாதையில்தான் செல்லும். காடுகளில் மற்ற மிருகங்களுக்கு வழித்தடம் அமைப்பதே இந்த யானை வழித்தடங்களால்தான். ஆனால் சமீபகாலங்களாக இந்த யானை வழித்தடங்களை ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டப்படுவதால், யானைகள் வழிதெரியாமல் ஊருக்குள் நுழையும் சம்பவங்கள் நடைபெறுகின்றன. எனவே, உடனடியாக அரசாங்கம் வனப்பகுதிகளை யார்–யார்? ஆக்கிரமித்துள்ளனர் என்பதை தங்களிடம் உள்ள சர்வே மூலமாக கண்டறிந்து, தயவுதாட்சண்யம் இல்லாமல் ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டும்.

காடுகளுக்குள் யானைகள் உள்பட பல்வேறு மிருகங்களின் தண்ணீர் தாகத்தைத்தீர்க்க அடர்ந்த வனப்பகுதிகளுக்குள் இருக்கும் சிறு சிறு குட்டைகள் அருகே ஆழ்குழாய் கிணறுகளை தோண்டி அந்த குட்டைகளில் எப்போதும் தண்ணீர் இருக்கும்படி ஏற்பாடுகளை செய்யவேண்டும். குறுகியகால புல்வகைகளை பயிரிடவேண்டும். நீண்டகால திட்டமாக ஆங்காங்கு மூங்கில் மற்றும் புல் காடுகளை உருவாக்கவேண்டும். மரங்கள் வெட்டுவது முழுமையாக தடைசெய்து புதிய மரக்கன்றுகள் நடுவதை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளவேண்டும். காடுகளிலும் மழைநீர் சேகரிப்பு திட்டங்களை நிறைவேற்றவேண்டும். காடுகளிலுள்ள மிருகங்கள் நாட்டுக்குள் வருகிறதா?, காடுகளுக்குள் தீ பரவுகிறதா?, விலங்குகள் வேட்டையாடப்படுகிறதா? என்பதை கண்காணிக்க 5 ஆளில்லா குட்டி விமானங்களை தமிழக அரசு வனத்துறைக்கு சமீபத்தில் வாங்கியுள்ளது. இதுபோல, பல குட்டி விமானங்களை வாங்கி காட்டுப்பகுதிகளை கண்காணிக்கவேண்டும்.

Next Story