மரக்கன்றுகளை நடுகிறோம்! ஆனால் வளர்கிறதா?


மரக்கன்றுகளை நடுகிறோம்!  ஆனால்  வளர்கிறதா?
x
தினத்தந்தி 7 Jun 2017 8:30 PM GMT (Updated: 2017-06-07T19:05:36+05:30)

தமிழ்நாட்டில் ஆற்றுவளம் மிக மிகக்குறைவு. நம்மைச் சுற்றியுள்ள அண்டை மாநிலங்களான, கர்நாடகா, கேரளா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் ஆற்றுவளம் அதிகம்.

மிழ்நாட்டில் ஆற்றுவளம் மிக மிகக்குறைவு. நம்மைச் சுற்றியுள்ள அண்டை மாநிலங்களான, கர்நாடகா, கேரளா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் ஆற்றுவளம் அதிகம். அதுபோல, வனவளங்களும் அதிகமாக இருக்கிறது. வனவளம் அதிகமாக இருந்தால்தான் மழைவளம் பெருகும். அந்தவகையில், ஏற்கனவே வனவளம் அதிகமாக உள்ள கர்நாடகா மாநிலத்தில் இன்னும் வனவளங்களை பெருக்கும் வகையில், மரக்கன்றுகள் நடும் பணியை ஆண்டுதோறும் தீவிரமாக்கிக் கொண்டே இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் நூற்றுக்கணக்கில், ஆயிரக்கணக்கில், ஏன் அதிகபட்சமாக லட்சக்கணக்கில் மரக்கன்றுகளை நட்டால், கர்நாடகாவில் கோடிக்கணக்கில் மரக்கன்றுகளை நடுகிறார்கள். கடந்த ஆண்டு அரசு சார்பில் 8 கோடி மரக்கன்றுகளை நட்டதாக தெரிவித்தனர். இந்த ஆண்டு மேலும் 6 கோடி மரக்கன்றுகளை நடப்போவதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், முதல்–மந்திரி சித்தராமையா இந்தக் கணக்கில் திருப்தி அடையவில்லை. மரக்கன்றுகளை நடுவதாகச் சொல்கிறீர்கள், அந்த மரக்கன்றுகள் எல்லாம் என்ன ஆனது?, அவையெல்லாம் வளர்ந்துள்ளதா? என்று கேள்விமேல் கேள்விகளை அதிகாரிகளை நோக்கி எழுப்பி உள்ளார். இதை தமிழ்நாடு வனத்துறையும் ஒரு பாடமாகக் கொள்ள வேண்டும்.

கடந்த 2012–ம் ஆண்டு ஜெயலலிதாவின் 64–வது பிறந்தநாளையொட்டி, 64 லட்சம் மரக்கன்றுகள் நடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஜெயலலிதா ஆலமரக்கன்று ஒன்றை நட்டு இந்தத்திட்டத்தை தொடங்கி வைத்தார். அதிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் 65 லட்சம், 66 லட்சம், 67 லட்சம், ஏன் கடந்த ஆண்டு 68 லட்சம் என ஆண்டுதோறும் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி வனத்துறை சார்பில் மரக்கன்றுகள் நடப்படும் என்று அறிவிக்கப்பட்டு, அதற்கான நிதியும் ஒதுக்கப்பட்டது. இந்த கணக்குகளை எல்லாம் பார்த்தால், 3 கோடியே 30 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டிருக்க வேண்டும். இதுதவிர, உள்ளாட்சி அமைப்புகள், சமூகநல நிறுவனங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், நடிகர் விவேக்கை போன்ற இயற்கை ஆர்வலர்கள் உள்ளிட்ட ஏராளமானவர்கள் மரக்கன்றுகளை நடும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். எல்லோரும் மரக்கன்றுகளை நடுவதோடு தங்கள் பணி முடிந்து விட்டதாக கருதக் கூடாது. இவ்வளவு கோடிக்கணக்கில் மரக்கன்றுகளை நட்டிருந்தால், எங்கு பார்த்தாலும் மரங்களாகத்தான் தெரிந்திருக்க வேண்டும். ஆனால், அப்படி தெரியவில்லை. காரணம் மரக்கன்றுகளை நடுவதோடு கடமை முடிந்துவிட்டதாக கருதுகிறார்கள். அந்த மரக்கன்றுகள் மரமாகி, தானாகவே நிலத்திலிருந்து தண்ணீரையும், சத்துக்களையும் உறிஞ்சும் வகையில், அதை பராமரிக்க வேண்டியது அந்த மரக்கன்றுகளை நட்டவர்களின் பொறுப்பாகும்.

கடைசியாக மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் சட்டசபையில் 110–வது விதியின்கீழ் வெளியிடப்பட்ட அறிவிப்பில், தேசிய வேலைவாய்ப்பு உறுதித்திட்டத்தின்கீழ் அதாவது, 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின்கீழ் ஊராட்சி நிலங்கள், அரசு நிலங்கள், தனியார் நிறுவனங்கள், பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், பிற பொருத்தமான இடங்களில் 68 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்படும் என்று அறிவித்தார். இந்தத்திட்டத்திற்காக ஒரு மரக்கன்றுக்கு 243 ரூபாய் 34 காசுகள் செலவாகும் என்ற கணக்கில் மொத்தம் 68 லட்சம் மரக்கன்றுகளுக்கு ரூ.165 கோடியே 47 லட்சம் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டு, அதற்கான நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு இந்த நிதி ஒதுக்குவதோடு கடமை முடிந்து விட்டது என்று நினைக்காமல், 68 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டு முறையாக பராமரிக்கப்படுகிறதா? என்பதை கண்காணிக்க வேண்டும். தமிழ்நாட்டில், ‘‘ஆடிப்பட்டம் தேடி விதை’’ என்பார்கள். அடுத்து ஆனி மாதம் முடிந்து ஆடி தொடங்கும்போது தமிழ்நாட்டில் அனைத்து இடங்களிலும் குறிப்பாக வனப்பகுதிகளிலும் தீவிரமாக மரக்கன்றுகள் நட்டு வளர்க்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். இதுபோல, தனியார் மரக்கன்றுகளை நட்டாலும், அது மரமாக வளர்வதற்கு பொறுப்பேற்றுக்கொள்வதற்கான உறுதிமொழியையும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

Next Story