பதிவு கட்டணத்தை குறைக்க வேண்டும்


பதிவு  கட்டணத்தை  குறைக்க  வேண்டும்
x
தினத்தந்தி 9 Jun 2017 8:30 PM GMT (Updated: 2017-06-09T18:53:37+05:30)

மாநிலத்தில் பல வளர்ச்சிகளுக்கு அடிப்படை ரியல் எஸ்டேட் தொழில்தான். ஒரு தொழில் தொடங்க வேண்டும் என்றாலும், வீடு கட்டவேண்டும் என்றாலும், விவசாயம் செய்யவேண்டும் என்றாலும், கண்டிப்பாக நிலம் வாங்கவேண்டிய அவசியம் இருக்கிறது.

மாநிலத்தில் பல வளர்ச்சிகளுக்கு அடிப்படை ரியல் எஸ்டேட் தொழில்தான். ஒரு தொழில் தொடங்க வேண்டும் என்றாலும், வீடு கட்டவேண்டும் என்றாலும், விவசாயம் செய்யவேண்டும் என்றாலும், கண்டிப்பாக நிலம் வாங்கவேண்டிய அவசியம் இருக்கிறது. அவ்வாறு நிலம் மற்றும் சொத்துகள் வாங்குவது, விற்பதன் மூலம், அரசுக்கும் பத்திரப்பதிவு, முத்திரைத்தாள் கட்டணம் மூலம் நல்ல வருவாய் கிடைக்கும். பத்திரப்பதிவு செய்யும்போது, ஒவ்வொரு பகுதியில் உள்ள சொத்துக்கும் வழிகாட்டி மதிப்பு அதாவது, ‘கைடு லைன் வேல்யூ’ என்று நிர்ணயிக்கப்பட்டு அதன் அடிப்படையில்தான் முத்திரைத்தாள் கட்டணமும், பத்திரப்பதிவு கட்டணமும் வசூலிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் 3 கோடியே 97 லட்சம் சர்வே எண்களில் உள்ள நிலங்களுக்கும், 1 லட்சத்து 84 ஆயிரம் தெருக்களில் உள்ள மனைகளுக்கும் இவ்வாறு வழிகாட்டி மதிப்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கடந்த பல ஆண்டுகளாகவே வழிகாட்டி மதிப்பைவிட குறைவாகத்தான் எல்லா நிலங்களின் சந்தை விலையும் வீழ்ச்சி அடைந்துவிட்டது. ஆனால், பத்திரப்பதிவுக்கு போகும்போது சந்தை விலையைவிட அதிகமாக உள்ள வழிகாட்டி மதிப்பு விலைக்குத்தான் பதிவுசெய்ய வேண்டியதுள்ளது. இதன் காரணமாக, உண்மையான விலைக்குமேல் பத்திரப்பதிவு கட்டணமும் கட்டவேண்டியதிருக்கிறது. அந்த வழிகாட்டி மதிப்பை கணக்கிட்டு வருமான வரித்துறையும் கணக்கு கேட்கிறது என்பதால், ரியல் எஸ்டேட் தொழில் பெரிதும் வீழ்ச்சி அடைந்தது. அரசாங்கத்தின் வருவாயும், பத்திரப்பதிவு எண்ணிக்கையும் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடையமுடியாமல் திணறியது. இந்தநிலையில், நேற்று முன்தினம்தான் அமைச்சரவை கூட்டத்திற்குப்பிறகு வழிகாட்டி மதிப்பு 33 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது என்ற நல்ல செய்தி அறிவிக்கப்பட்டது. ஆனால், முத்திரைத்தாள் கட்டணம் 7 சதவீதம் என்றாலும், கிரயப்பத்திரம், பரிவர்த்தனை பத்திரம், தான பத்திரம், குடும்பநபர் அல்லாதவர்களுக்கு இடையேயான செட்டில்மென்ட் பத்திரம் ஆகியவைகளுக்கு தற்போது விதிக்கப்படும் பதிவு கட்டணம் 1 சதவீதத்திலிருந்து 4 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

ஆக, இதுவரை 7 சதவீத முத்திரைத்தாள் கட்டணம், 1 சதவீத பத்திரப்பதிவு கட்டணம் செலுத்தி பத்திரங்களை பதிவு செய்தவர்கள், இனி 7 சதவீத முத்திரைத்தாள் கட்டணம், 4 சதவீத பத்திரப்பதிவு கட்டணம் என மொத்தம் 11 சதவீத கட்டணம் கட்டவேண்டியதிருக்கும். இதனால், மக்களுக்கு ஓரளவுக்குத்தான் பலன் கிடைக்கும். எடுத்துக்காட்டாக, இதுவரை வழிகாட்டி மதிப்பு 10 லட்சம் ரூபாய் உள்ள ஒரு சொத்துக்கு இனி 33 சதவீதம் குறைந்தால், புதிய வழிகாட்டி மதிப்பு 6 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய்தான் வரும். 10 லட்சம் ரூபாய்க்கு 70 ஆயிரம் ரூபாய் முத்திரைத்தாள் கட்டணமும், ரூ.10 ஆயிரம் பத்திரப்பதிவு கட்டணமும் சேர்த்து 80 ஆயிரம் ரூபாய் கட்டியவர்கள் இப்போது வழிகாட்டி மதிப்பு குறைந்தது என்றாலும், மொத்தம் 11 சதவீதம் கட்டணம் கட்டவேண்டிய நிலையில், 73 ஆயிரத்து 700 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டிய அவசியம் ஏற்படும். வழிகாட்டி மதிப்பு குறைக்கப்பட்டதால் பத்திரப்பதிவு எண்ணிக்கை உயரும் என்றாலும், பதிவு கட்டணத்தை உயர்த்தாமல் இருந்திருக்கலாம். ஏற்கனவே மத்திய அரசாங்கம் இந்தியா முழுவதும் ஒரேசீராக 4 சதவீதம் முத்திரைத்தாள் கட்டணம், 1 சதவீதம் பத்திரப்பதிவு கட்டணம் என்று 5 சதவீத கட்டணம் மட்டும் வசூலிக்க திட்டமிட்டிருக்கிறது. ஒருசில மாநிலங்கள் இதை ஏற்று அமல்படுத்துகின்றன. தமிழக அரசும் 11 சதவீதத்திற்கு பதிலாக, மத்திய அரசாங்கத்தின் திட்டமான மொத்தம் 5 சதவீத கட்டணமே வசூலித்தால் இன்னமும் பத்திரப்பதிவு எண்ணிக்கை உயர வாய்ப்பு இருக்கிறது. அதை அரசு பரிசீலிக்க வேண்டும்.


Next Story