எப்போது உள்ளாட்சி தேர்தல்?


எப்போது  உள்ளாட்சி  தேர்தல்?
x
தினத்தந்தி 11 Jun 2017 9:30 PM GMT (Updated: 2017-06-12T01:44:19+05:30)

தமிழ்நாடு கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை முதல் கன்னியாகுமரி வரை அனைத்து இடங்களிலும் விவசாயத்திற்கு மட்டுமல்லாமல், குடிநீருக்குகூட மக்கள் கடுமையான பஞ்சத்தால் வாடிக்கொண்டிருக்கிறார்கள்.

மிழ்நாடு கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை முதல் கன்னியாகுமரி வரை அனைத்து இடங்களிலும் விவசாயத்திற்கு மட்டுமல்லாமல், குடிநீருக்குகூட மக்கள் கடுமையான பஞ்சத்தால் வாடிக்கொண்டிருக்கிறார்கள். தங்கள் குறைகளை யாரிடம் போய்ச்சொல்ல என்று தெரியாமல், நகர்ப்புறங்களிலும், கிராமப்புறங்களிலும் உள்ள மக்கள் தவித்துக்கொண்டிருக்கிறார்கள். பொதுவாக, அடிப்படைவசதிகள் பற்றி ஏதாவது குறைகள் இருந்தால், அந்தந்த பகுதியிலுள்ள பஞ்சாயத்து உறுப்பினர்கள், தலைவர்கள், நகரசபை கவுன்சிலர்கள், மாநகராட்சி கவுன்சிலர்கள், மேயர்களை பார்த்து முறையிடுவது வழக்கம். ஆனால், கடந்த அக்டோபர் 24–ந்தேதியோடு உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் முடிவடைந்தநிலையில், மீண்டும் தேர்தல் நடத்தப்படாததால், உள்ளாட்சி அமைப்புகள் எல்லாம் மக்கள் பிரதிநிதித்துவம் இல்லாமல் காலியாக இருக்கின்றன. தமிழ்நாட்டில் 12 மாநகராட்சிகள், 124 நகராட்சிகள், 528 பேரூராட்சிகள், 388 ஊராட்சி ஒன்றியங்கள், 31 மாவட்ட ஊராட்சிகள், 12,524 கிராம ஊராட்சிகள் இருக்கின்றன.

இந்த உள்ளாட்சி அமைப்புகளில் எல்லாம் கடந்த ஆண்டு அக்டோபர் 17, 19–ந்தேதிகளில் இருகட்டங்களாக தேர்தல் நடத்த மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டு, அரசியல் கட்சிகளும் வேட்பாளர்கள் பெயரை அறிவித்திருந்தநிலையில், தி.மு.க. சார்பில் பழங்குடி இன மக்களுக்கு, இடஒதுக்கீடு இல்லாமல் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது என்று தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன் அந்த தேர்தலை ரத்துசெய்தார். அனைத்து சட்டவிதிகளுக்கும் உட்பட்டு டிசம்பர் 31–ந்தேதிக்குள் தேர்தலை நடத்தவேண்டும் என்றும் உத்தரவிட்டார். ஆனால், அதன்பிறகு, ஜெயலலிதா மரணம், அரசியலில் ஏற்பட்டுள்ள சூறாவளி, ஆளும்கட்சிக்குள் ஏற்பட்டுள்ள மோதல் இப்படி பல்வேறு காரணங்கள் அரசியல் வானில் சுழட்டி அடித்துக்கொண்டிருக்கும் நிலையில், உள்ளாட்சி தேர்தலைப்பற்றி நினைக்க யாருக்கும் நேரம் இல்லாமல் இருக்கிறதோ?, என்னவோ? தெரியவில்லை. தேர்தல் நடத்துவதற்கான எண்ணம் அரசுக்கு கிஞ்சித்தும் இல்லாமல் இருக்கிறது. கடைசியாக மாநிலத்தேர்தல் ஆணையத்தைப்பார்த்து சென்னை ஐகோர்ட்டு, ‘எப்போதுதான் தேர்தல் நடத்துவீர்கள்?’ என்று கேட்டபோது, ‘‘ஜூலை 31–ந்தேதிக்குள் தேர்தல் நடைமுறைகளை முடித்துவிடுகிறோம். ஆனால், தமிழக அரசு அதற்கான சில நடவடிக்கைகளை செய்து முடிக்கவேண்டும்’’ என்று ஒரு நிபந்தனையை சொல்லாமல் சொல்லிவிட்டது.

கடந்த அக்டோபர் 4–ந்தேதி நீதிபதி என்.கிருபாகரன் பிறப்பித்த உத்தரவுகளை, மாநில அரசு செய்து முடிக்கவேண்டும். உச்சநீதிமன்றத்தில் உள்ள வழக்கு விசாரணை ஜூலை 12–ந்தேதி வரஇருக்கிறது. அதையும் பார்க்கவேண்டும் என்று சொல்லிவிட்டு, போட்டியிடும் வேட்பாளர்களுக்கு குற்றவியல் பின்னணி இருக்கிறதா? என்பதை தெரிவிக்கும்வகையில், தமிழ்நாடு பஞ்சாயத்து (தேர்தல்கள் விதி 26–ல்) தமிழக அரசு மாற்றம் செய்யவேண்டும். 2–வதாக இடஒதுக்கீடு, ஒதுக்கீட்டை ரத்துசெய்தல், தொகுதி சுழற்சி போன்றவை தொடர்பான புகார்களை அரசு தீர்வுசெய்து உத்தரவுகளை பிறப்பிக்கவேண்டும். 3–வதாக, பஞ்சாயத்துகள், நகரபஞ்சாயத்துகள், நகரசபைகள், மாநகராட்சிகளுக்கு தனித்தனியாக தேர்தல் அறிவிக்கைகள் வெளியிடப்படவேண்டும் என்று கூறியிருக்கிறது. ‘இவையெல்லாம் இல்லாத ஊருக்கு போகாத வழியைக்காட்டுவதுபோல்’ இருந்தாலும், அரசு நினைத்தால் ஒரேவாரத்தில் செய்து முடிக்கமுடியும். தேர்தலை உடனடியாக நடத்தவேண்டும் என்ற உறுதிப்பாடு அரசுக்கு நிச்சயம் இருந்தாகவேண்டும். இந்தநிலையில், இந்த தேர்தல் வழக்கு உச்சநீதிமன்றத்தில் ஜூலை 12–ந்தேதி விசாரணைக்கு வருகிறது. சென்னை ஐகோர்ட்டில் 14–ந்தேதி விசாரணைக்கு வருகிறது. ஆனால், தேர்தல் நடத்தப்போகிறோம் என்று அட்டவணை வெளியிட்டு, மாநில தேர்தல் ஆணையம் தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்தால், நிச்சயம் கோர்ட்டு இதில் எந்தவித ஆட்சேபனையும் தெரிவிக்கப்போவதில்லை. ஏதாவது சாக்குப்போக்குச்சொல்லி அரசும், மாநில தேர்தல் ஆணையமும் தேர்தலை நடத்தவில்லையென்றால், ‘என்றைக்குத்தான் நடத்தப்போகிறீர்கள்?’ என்று நீதிமன்றங்கள் ஒரு உறுதியான பதிலை இருவரிடமும் கேட்டு, மக்களுக்கு தெரிவிக்கவேண்டும் என்பதே விருப்பமாக இருக்கிறது.

Next Story