வரிக்குறைப்பை வலியுறுத்தி பெறுங்கள்


வரிக்குறைப்பை வலியுறுத்தி பெறுங்கள்
x
தினத்தந்தி 12 Jun 2017 8:30 PM GMT (Updated: 2017-06-13T00:17:23+05:30)

இந்தியா முழுவதும் இப்போது பரபரப்பாக பேசப்படுவது சரக்கு சேவை வரி பற்றித்தான். கடந்த பல ஆண்டுகளாகவே சரக்கு சேவை வரியை அமல்படுத்தவேண்டும் என்று மத்திய அரசாங்கம் மும்முரமாக இருந்தாலும், பா.ஜ.க. அரசாங்கத்தில்தான் இந்த முயற்சி படுவேகம் எடுத்தது.

ந்தியா முழுவதும் இப்போது பரபரப்பாக பேசப்படுவது சரக்கு சேவை வரி பற்றித்தான். கடந்த பல ஆண்டுகளாகவே சரக்கு சேவை வரியை அமல்படுத்த வேண்டும் என்று மத்திய அரசாங்கம் மும்முரமாக இருந்தாலும், பா.ஜ.க. அரசாங்கத்தில்தான் இந்த முயற்சி படுவேகம் எடுத்தது. இந்தியா முழுவதும் ஒரேவிதமான வரியை அமல்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் கொண்டு வரப்பட்டதுதான் இந்த வரி. ‘‘ஒரே நாடு, ஒரே சந்தை, ஒரே வரி’’ என்பதுதான் இதன் தார்ப்பரியம். மத்திய அரசாங்கமும், மாநில அரசுகளும் பல கட்டங்களில் விதிக்கும் வரிகளுக்கு பதிலாக, ஒரேவரியாக விதிக்கப்படுவதுதான் சரக்கு சேவை வரியாகும். இந்த வரியைப்பற்றி ஆலோசனை நடத்த ‘சரக்கு சேவை வரி கவுன்சில்’ என்று அனைத்து மாநில நிதி அமைச்சர்கள் கொண்ட ஒரு அமைப்பு மத்திய நிதி மந்திரி அருண்ஜெட்லி தலைமையில் அமைக்கப்பட்டிருந்தது.

இந்த சரக்கு சேவை வரி கவுன்சில் இதுவரை 16 முறை கூடியிருக்கிறது. தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியிருக்கும் நேரத்தில், சில பொருட்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டு, மற்ற பொருட்களுக்கு 5 சதவீத வரி, 12 சதவீத வரி, 18 சதவீத வரி, 24 சதவீத வரி என்று பட்டியலிடப்பட்டுள்ளது. இதுவரையில், 1,211 பொருட்களுக்கு வரி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சினிமா திரைப்படங்களுக்கு 28 சதவீத வரி விதிக்கப்பட்டதை எதிர்த்து சினிமாத் துறையினர் பெரும் எதிர்ப்பு தெரிவித்தனர். நடிகர் கமல்ஹாசன் 28 சதவீத வரியை குறைக்காவிட்டால், ‘நான் நடிப்பதை நிறுத்தி விடும் சூழ்நிலை ஏற்பட்டு விடும்’ என்று கொந்தளித்தார். சினிமாத்துறையினரின் குரல் மத்திய அரசாங்கத்தின் காதில் நன்றாக கேட்டு விட்டது. இப்போது ரூ.100–க்குமேல் உள்ள டிக்கெட்டுகளுக்கு 28 சதவீதம், ரூ.100–க்கு குறைந்த டிக்கெட்டுகளுக்கு 18 சதவீதம் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வரிக்குறைப்பு தொடர்பாக 133 கோரிக்கைகள் வந்துள்ளன. இதில், 66 பொருட்களுக்கு வரிக்குறைப்பு செய்யப்பட்டுள்ளது என்று நிதி மந்திரி கூறியிருக்கிறார். இன்னும் தேவையான பல பொருட்களுக்கு விரிவிகிதம் குறைக்கப்படவேண்டியதிருக்கிறது. நேற்று முந்திரி பருப்புக்கு 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக வரிகுறைப்பு செய்யப்பட்டுள்ள நேரத்தில், காய்கறிகள், உணவுப்பொருட்கள், ஊறுகாய் போன்ற பல பொருட்களுக்கு சரக்கு சேவை வரி 18 சதவீதத்திலிருந்து 12 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

இந்த சரக்கு சேவை வரி திட்டமிட்டப்படி ஜூலை 1–ல் அமலுக்கு வரவேண்டுமென்றால், அனைத்து மாநிலங்களிலும் இதற்காக சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும். தற்போது 24 மாநிலங்களில்தான் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஜம்மு–காஷ்மீர், மேற்குவங்காளம், பஞ்சாப், மேகாலயா, கர்நாடகம், கேரளா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் இன்னும் இந்த சட்டம் நிறைவேற்றப்படவேண்டியதிருக்கிறது. தமிழ்நாட்டில் நாளை தொடங்கும் சட்டமன்ற கூட்டத்தொடரில் இந்த சட்டம் நிறைவேற்றப்பட இருக்கிறது. இதற்கிடையில், வருகிற 18–ந்தேதி சரக்கு சேவை கவுன்சிலின் இறுதிக்கூட்டம் நடக்க உள்ளது. இதுவரையில் தமிழக அரசு பல பொருட்களுக்கு வரிவிலக்கு கேட்டு கோரிக்கை விடுத்திருக்கிறது. இதில் ஏதோ ஒருசில பொருட்களுக்கு மட்டும் வரிகுறைக்கப்பட்டிருக்கிறதே தவிர, பெரும்பாலான கோரிக்கைகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. தற்போது தமிழக அரசு விடுத்துள்ள 21 கோரிக்கைகளையும் 18–ந்தேதி நடக்கும் கூட்டத்தில் வற்புறுத்தி, மக்களின் அன்றாட பயன்பாட்டில் உள்ள நிறையப் பொருட்களை குறைந்த வரிவிதிப்பில் கொண்டுவர தமிழக நிதி அமைச்சர் ஜெயக்குமார் அழுத்தம் தரவேண்டும். ஏனெனில், சரக்கு சேவை வரி அமலுக்கு வரும்முன்பு, பொருட்களுக்கான, சேவைகளுக்கான வரி நிர்ணயம் செய்யப்படும் போது, தமிழக மக்களுக்கு பயன்படும் பொருட்களுக்கு வரிக்குறைப்பை வலியுறுத்தி கேட்டுப்பெறவேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக இருக்கிறது.

Next Story