தமிழ்நாட்டில் கப்பல் வழிப்போக்குவரத்து


தமிழ்நாட்டில்  கப்பல்  வழிப்போக்குவரத்து
x
தினத்தந்தி 15 Jun 2017 9:30 PM GMT (Updated: 15 Jun 2017 12:31 PM GMT)

தமிழ்நாட்டில் தற்போது ரெயில் போக்குவரத்து என்றாலும் சரி, சாலை போக்குவரத்து என்றாலும் சரி, பொதுமக்கள் எளிதில் பயன்படுத்தக்கூடியதாக இல்லை.

மிழ்நாட்டில் தற்போது ரெயில் போக்குவரத்து என்றாலும் சரி, சாலை போக்குவரத்து என்றாலும் சரி, பொதுமக்கள் எளிதில் பயன்படுத்தக்கூடியதாக இல்லை. தொலைதூர ரெயில்களில் பயணம் செய்யவேண்டும் என்றால், சில மாதங்களுக்கு முன்பே ‘ரிசர்வே‌ஷன்’ செய்தால்தான் இடம் கிடைக்கிறது. சாலை போக்குவரத்தில் செல்லலாம் என்றால் அச்சத்துடனேயே பயணம் செய்யவேண்டிய கட்டாயம் இருக்கிறது. ஏனெனில், சாலை விபத்துக்களின் எண்ணிக்கையில் தமிழ்நாடு தொடர்ந்து முன்னணியில்தான் நிற்கிறது. இப்போது மறைந்த புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அவர், சென்னையில் இருந்து கன்னியாகுமரிக்கு ‘பறக்கும் படகு’ என்று சொல்லப்படும் ‘‘ஹோவர் கிராப்ட்’’ தொடங்கப்படவேண்டும் என்பதில் மிகவும் ஆர்வத்தோடு இருந்தார். அவரது கனவுத்திட்டம் நிறைவேறவில்லையே என்று பலருக்கு ஏக்கம் உண்டு. இதேபோல, 1999–2001–ல் ‘‘ஜல மார்க் யோஜனா’’ அதாவது கடல் வழிப்போக்குவரத்து திட்டத்தை பிரதமர் வாஜ்பாய் அறிவித்தார்.

எம்.ஜி.ஆர்.–வாஜ்பாய் திட்டங்கள் நிறைவேறுவது இனி தமிழக அரசின் கையில்தான் இருக்கிறது. அதற்கான உதவிகளை செய்ய மத்திய அரசாங்கம் தயாராக இருக்கிறது என்றவகையில், எண்ணூர் அருகே உள்ள காமராஜர் துறைமுக விழாவில் கலந்துகொண்ட மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் கப்பல் துறை மந்திரி நிதின் கட்கரி அறிவித்த அறிவிப்பு தெளிவாக கூறிவிட்டது. சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரையிலும், அதைத்தொடர்ந்து கன்னியாகுமரி முதல் திருவனந்தபுரம் வரையிலும், அங்கிருந்து கோவா, மும்பை வரையிலும் கடல்வழி கப்பல் போக்குவரத்து தொடங்குவதற்கு நல்ல சாத்தியக்கூறு இருக்கிறது. முதல்கட்டமாக தமிழக அரசு சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை கடல் வழிப்போக்குவரத்தை தொடங்கலாம். இதற்காக நீர்வழிப் போக்குவரத்து கழகம் ஒன்றை தமிழக அரசுடன் சேர்ந்து அமைக்க மத்திய அரசு தயாராக இருக்கிறது. இதையொட்டி, ரூ.200 கோடிக்கு மேல் முதலீடு செய்ய ஒரு துறைமுகம் தயாராக இருக்கிறது. மேலும், சிறு துறைமுகங்களில் கப்பல் தளங்கள் போன்ற உள்கட்டமைப்பு வசதிகள் அமைத்துத்தரவும் மத்திய அரசாங்கம் தயாராக இருக்கிறது. தமிழக அரசும் உடனடியாக இதற்கான திட்டங்களைத்தீட்டி எங்களுக்கு அனுப்பவேண்டும், பணத்தை பற்றி கவலைப்படாதீர்கள். நாங்கள் எங்கள் முதலீட்டை செய்கிறோம். இது மத்திய அரசாங்கமும், மாநில அரசாங்கமும் இணைந்து மேற்கொள்ளப்போகும் கூட்டுத்திட்டம் என்பதால், தமிழக அரசும் தங்களால் முடிந்த அளவு முதலீடு செய்யவேண்டும் என்று கூறியிருக்கிறார். இது மிக நல்ல வாய்ப்பு. தமிழக அரசு தவறவிடக்கூடாது.

போக்குவரத்து நெரிசலை குறைக்க கடல் வழிப்போக்குவரத்து பயன் உள்ளதாக இருக்கும். ரெயில் போக்குவரத்தில் ஒரு கிலோமீட்டருக்கு ஒரு ரூபாய் செலவாகும். சாலைப்போக்குவரத்தில் ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.1.50 காசு செலவாகும். ஆனால், நீர்வழிப்போக்குவரத்தில் ஒரு கிலோமீட்டருக்கு 50 காசு வரைதான் செலவாகும். இந்த அரிய வாய்ப்பை செயல்படுத்தும்வகையில், தனியார் முதலீடுகள் பெருமளவில் ஊக்குவிக்கப்படும் என்று மத்திய மந்திரி நிதின் கட்கரி கூறியிருக்கிறார்.  தமிழக அரசு சிறிதும் காலம்தாழ்த்தாமல், மத்தியஅரசின் முதலீட்டை ஒருபக்கம் பெற்று, தனியார் முதலீட்டை மற்றொரு பக்கம் பெற்று, உடனடியாக சென்னை முதல் கன்னியாகுமரி வரை இடையில் உள்ள அனைத்து துறைமுகங்களையும் இணைத்து போக்குவரத்தை தொடங்கவேண்டும். தனியார் முதலீட்டை ஈர்க்க சலுகைகளை வாரி வழங்கவேண்டுமே தவிர, அவர்களை சங்கடப்படுத்தும் வகையிலான நிபந்தனைகளை விதிக்கக்கூடாது. மொத்தத்தில், இந்த சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே இந்த திட்டத்தை அறிவித்து, எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவடையும் முன்பு தொடங்கவேண்டும்.

Next Story