உரத்துக்கு 2 மடங்கு வரியா?


உரத்துக்கு 2 மடங்கு வரியா?
x
தினத்தந்தி 16 Jun 2017 9:30 PM GMT (Updated: 2017-06-16T18:44:50+05:30)

விவசாயம்தான் நாட்டின் முதுகெலும்பு. விவசாயி சேற்றில் கால்வைத்தால்தான், நாம் சோற்றில் கை வைக்கமுடியும் என்றெல்லாம் எல்லோரும் பேசுகிறோம்.

விவசாயம்தான் நாட்டின் முதுகெலும்பு. விவசாயி சேற்றில் கால்வைத்தால்தான், நாம் சோற்றில் கை வைக்கமுடியும் என்றெல்லாம் எல்லோரும் பேசுகிறோம். ஆனால், நாடு முழுவதும், அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் விவசாயம் தழைக்கவும் இல்லை, விவசாயி வாழவும் இல்லை. மொத்த ஜனத்தொகையில் பாதிக்குமேல் உள்ள குடும்பங்கள் விவசாயத் தொழிலை சார்ந்துதான் வாழ்க்கை நடத்துகின்றனர். அந்த 50 சதவீதம்பேர் செய்யும் விவசாய தொழில்தான் ஒட்டுமொத்த மக்கள் தொகைக்கும் உணவு அளிக்கிறது. கடந்த பல ஆண்டுகளாகவே விவசாயம் ஒரு லாபகரமான தொழிலாக இல்லை. பருவமழை தவறுவது, போதிய நீர்ப்பாசன திட்டங்கள் இல்லாமை, இடுபொருட்களின் அபரிமிதமான விலை உயர்வு, விளைபொருட்களுக்கு உரியவிலை கிடைக்காமை என்று பல குறைபாடுகள் விவசாயத்தை கொஞ்சம் கொஞ்சமாக சிதைத்துக்கொண்டு இருக்கிறது.

கடனில் தத்தளிக்கும் விவசாயிகள் விவசாய நிலங்களை விற்கத்தொடங்கிவிட்டனர். விவசாயிகள் வேறு வேலைக்கு போய்க்கொண்டிருக்கிறார்கள். நிலைமை விபரீதமாக போய்க்கொண்டிருப்பதை நன்கு உணர்ந்த காரணத்தினால்தான், மத்திய அரசாங்கமும், தமிழக அரசும் விவசாயத்தின் மீது தங்கள் பார்வையை செலுத்துகிறது. விவசாயிகளின் வருமானத்தை எப்படியும் 2022–ல் இரட்டிப்பாக்கிவிடுவோம் என்று பிரதமர் வெளியிட்டுள்ள உறுதி, நிச்சயமாக வரவேற்புக்கும், பாராட்டுக்கும், மகிழ்ச்சிக்கும் உரியது. ஆனால், விவசாயியின் வருமானத்தை எதை அடிப்படையாக வைத்து கணக்கிடப்போகிறார்கள்? என்பதுதான் புரியாத புதிராக இருக்கிறது. உடனடியாக மத்திய அரசாங்கம், ‘‘ஒரு விவசாயியின் அடிப்படை வருமானம் இவ்வளவு, அதை இரட்டிப்பாக்கினால் இவ்வளவு தொகை அவனுக்கு வருமானமாக கிடைக்கும். அந்த வருமானத்தை பெற்றுத்தருவோம்’’ என்ற உறுதிமொழியை மக்களுக்கு தரவேண்டும். சமீபத்தில் மத்திய அரசாங்கத்தின் வேளாண்மை மற்றும் விவசாய அமைச்சகம் ‘‘அதிகாரம்பெற்ற விவசாயி’’, ‘‘வளமான இந்தியா’’ என்ற தலைப்பில் தங்கள் சாதனைகளை அறிவித்துள்ளன.

விவசாய வளர்ச்சிக்காகவும், அடுத்த 5 ஆண்டுகளில் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கவும் மத்திய அரசாங்கத்தில் 52 புதிய தொழில்நுட்பங்கள் உருவாக்கப்பட்டுள்ளன என்று அதில் கூறப்பட்டுள்ளது. இந்த புதிய 52 தொழில்நுட்பங்கள் கடைக்கோடி கிராமப்புறங்களில் வாழும் ஏழை, எளிய விவசாயிகளுக்கும் போய்ச்சேர்ந்தால்தான் அவர்களின் வாழ்க்கைச் சக்கரம் எளிதில் சுழலமுடியும். தற்போது நாடு முழுவதும் விவசாயிகள் தங்கள் செலவை ஈடுகட்டும் வகையில் விளைபொருட்களுக்கு விலை கிடைக்கவில்லை, கடன்களை ரத்து செய்யவேண்டும் என்று போராட்டம் நடத்திவருகிறார்கள். இடுபொருட்களின் விலைகளை குறைத்து, விவசாய உற்பத்தி செலவை குறைக்கவேண்டிய இந்த நேரத்தில், சரக்கு மற்றும் சேவைவரியில் உரத்திற்கு 12 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. இது விவசாயிகளை மட்டுமல்லாமல், உற்பத்தியாளர்களுக்கும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். தற்போது உரத்திற்கான ஆயத்தீர்வை 1 சதவீதமும், மதிப்புக்கூட்டுவரி 5 சதவீதம் வரையும்தான் விதிக்கப்படுகிறது. அதாவது அதிகபட்சம் 6 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ள உரத்துக்கு, ஜூலை 1–ந் தேதி முதல் 12 சதவீதம்வரை வரி விதிக்கப்படும். ஏற்கனவே பெரும்சுமையை தூக்கிக்கொண்டு முதுகு வளைந்திருக்கும் விவசாயி, உரத்துக்கான அதிக வரி விதிப்பினால் தாங்கமுடியாத அளவில் நிச்சயம் கீழே விழுந்துவிடுவான். விவசாயியின் வருமானத்தை இரட்டிப்பாக்குவோம் என்ற இலக்கை நோக்கி சென்றுகொண்டிருக்கும் மத்திய அரசாங்கம், இடுபொருட்களின் விலையை குறைக்க வேண்டுமென்றால், இந்த வரிஉயர்வை மறுபரிசீலனை செய்யவேண்டும். மேலும், விவசாயிகளின் வாழ்க்கைத்தரம் உயரும் வகையில், விவசாயம் செழிக்கும் வகையில் தமிழகத்தை சேர்ந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் கமி‌ஷன் பரிந்துரைகளை நிறைவேற்ற விவசாயிகள் கொண்ட தூதுகுழுவை, மத்திய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைக்காக அழைத்து செல்லப்போவதாக மராட்டிய மாநில பா.ஜ.க. அரசு அறிவித்துள்ளது. இதேபோல, நடவடிக்கையை தமிழக அரசும் மேற்கொள்ளவேண்டும்.

Next Story