இந்த சிரமம் எதற்கு?


இந்த  சிரமம்  எதற்கு?
x
தினத்தந்தி 18 Jun 2017 9:30 PM GMT (Updated: 18 Jun 2017 12:11 PM GMT)

நாட்டு மக்கள் அனைவரும் ஆதார் அட்டை வைத்திருக்க வேண்டும் என்பதில் மத்திய அரசாங்கம் மிகவும் தீவிரமாக இருக்கிறது.

நாட்டு மக்கள் அனைவரும் ஆதார் அட்டை வைத்திருக்க வேண்டும் என்பதில் மத்திய அரசாங்கம் மிகவும் தீவிரமாக இருக்கிறது. பல பணிகள், சேவைகள், உதவிகளில் ஆதார் அட்டையை கட்டாயமாக்கிய மத்திய அரசாங்கம், வங்கி கணக்கு தொடங்குவதற்கும், ரூ.50 ஆயிரத்துக்கும் மேலான பண பரிமாற்றம் செய்யும்போதும் ஆதார் அட்டை அவசியம் என்றும், இப்போது வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் அனைவரும் டிசம்பர் 31–ந் தேதிக்குள் தங்கள் ஆதார் எண்ணை வங்கிகளில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும், இல்லையென்றால் அவர்களின் வங்கி கணக்குகள் முடக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது. நாட்டு மக்கள் அனைவருக்கும் 12 இலக்கம் உள்ள ஒரு அடையாள எண்ணோடு, அடையாள அட்டை கொடுப்பதுதான் ஆதாரின் நோக்கமாகும். ஆணோ, பெண்ணோ எந்த வயது என்றாலும் சரி, யாராக இருந்தாலும் சரி, ஆதார் அட்டை வாங்கிக்கொள்ளலாம். ஒவ்வொருவருடைய புகைப்படம் மட்டுமல்லாமல், கருவிழிகள், விரல் ரேகை அனைத்தும் பதிவு செய்யப்பட்டுவிடுவதால், இதில் யாரும் ஏமாற்றவோ, போலியாக பயன்படுத்தவோ முடியாது. இப்போதெல்லாம் ஆள்மாறாட்டம், போலி என்று எல்லா திட்டங்களிலும் மோசடிகள் நடக்க வாய்ப்புள்ள நிலையில், ஆதார் கார்டு இதற்கெல்லாம் வழியில்லாத வகையில் அனைத்து ஓட்டைகளையும் அடைத்துவிடும். ஆதார் பதிவு இலவசமாகவே நடத்தப்பட்டு வருகிறது. இதை நாட்டு மக்கள் அனைவருமே தங்களுக்கான ஒரு அடையாளமாக பயன்படுத்த முடியும்.

முதல் ஆதார் அடையாள அட்டை 2010–ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 29–ந் தேதி வழங்கப்பட்டது. அன்று முதல் நாடு முழுவதும் ஆதார் அடையாள அட்டை வழங்கும் பணி மிகத்தீவிரமாக நடந்ததன் பயனாக, இன்று நாட்டிலுள்ள மொத்த மக்கள் தொகை 134 கோடியே 25 லட்சத்து 12 ஆயிரத்து 706–ல், மார்ச் மாத கணக்குப்படி 112 கோடி பேருக்கு மேல் ஆதார் அட்டை வழங்கப்பட்டுவிட்டது. மீதமுள்ளவர்களுக்கும் ஆதார் அட்டை வழங்குவதிலும், தொடர்ந்து வாங்கவேண்டிய அனைவருக்கும் வழங்குவதிலும் அரசு முனைப்பான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். பலத்திட்டங்களில் பயனாளிகளுக்கு ஆதார் அடையாள அட்டையின் அடிப்படையில்தான் மத்திய–மாநில அரசாங்கங்கள் நேரடி பலனை அளித்து வருகிறது. உச்சநீதிமன்றம், ‘‘சமூகநல திட்டங்களில் உதவிகள், மானியங்கள் பெறுவதற்கு ஆதாரை கட்டாயமாக்கக்கூடாது. அதே நேரத்தில், வருமான வரித்துறையில் ‘‘நிரந்தர எண்’’ என்று கூறப்படும் ‘‘பான் அடையாள அட்டை’’ பெறுதல், வங்கி கணக்கு தொடங்குதல், வருமானவரி கணக்கு தாக்கல் செய்தல் போன்ற பணிகளுக்கு ‘‘ஆதார் கட்டாயம்’’ என்பதற்கு தடையேதும் இல்லை’’ என்றும் கூறியது. அது இப்போது நடைமுறைப்படுத்தப்படுகிறது.

ஒவ்வொருவருக்கும் தேசிய அளவில் அடையாள அட்டை வேண்டும் என்பதிலோ, முறைகேடுகளை தவிர்க்க ஆதார் அட்டை வேண்டும் என்பதிலோ எந்த மாற்றுக்கருத்தும் இருக்கமுடியாது. ஆனால், ஆதார் அட்டையைக் காட்டி வங்கி கணக்கு தொடங்கிய பிறகு அதிலேயே அடையாளம் பதிவு செய்யப்பட்டுவிடும். அதற்கு பிறகு ரூ.50 ஆயிரத்துக்கு மேல் ஒவ்வொரு பரிமாற்றத்துக்கும் ஆதார் எண் அவசியம் என்பதுதான், தேவையற்ற குழப்பங்களையும், சிரமங்களையும் ஏற்படுத்தும். ஏதாவது முறைகேடு என்றால், வங்கி கணக்கில் பதியப்பட்டுள்ள ஆதார் எண்ணை வைத்தே கண்டுபிடித்துவிடலாம். அதை விட்டு விட்டு, திரும்ப திரும்ப ஆதார் எண்ணை எழுது, ஆதார் அட்டையை காட்டு என்பதெல்லாம் நிச்சயமாக தேவையற்றதாகும். மேலும், இன்றைய காலகட்டத்தில் ரூ.50 ஆயிரம் பண பரிமாற்றம் என்பது சிறிய அளவிலான வியாபாரங்கள், விவசாய விளைபொருட்கள் விற்பனை உள்பட பல பரிவர்த்தனைகளில் சகஜமாக நடைபெறும் ஒன்றாகும். இவ்வாறு வங்கி பரிமாற்றங்களில் தேவையற்ற சிக்கல்களை உருவாக்குவதுதான் வங்கிகள் மூலமாக கொடுக்கல், வாங்கல் நடத்துவதற்கு தடைக்கல்லாக இருக்கும். ரொக்க பண பரிமாற்றத்துக்கு போகவைப்பது போலாகிவிடும்.

Next Story