தமிழ்நாட்டில் மரங்கள் வளம் போதாது


தமிழ்நாட்டில் மரங்கள் வளம் போதாது
x
தினத்தந்தி 19 Jun 2017 8:30 PM GMT (Updated: 19 Jun 2017 12:57 PM GMT)

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தகவல் தொழில்நுட்பத்தில் எல்லா வழிகளையும் பயன்படுத்தி தகவல் பரிமாற்றங்களை செய்துகொள்கிறார்.

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தகவல் தொழில்நுட்பத்தில் எல்லா வழிகளையும் பயன்படுத்தி தகவல் பரிமாற்றங்களை செய்துகொள்கிறார். வாட்ஸ்–அப்பில் அவரோடு தொடர்பில் இருப்பவர்களுக்கு அவர் அரசியல் ரீதியிலான கருத்துக்களை மட்டும் தெரிவிப்பதில்லை. சமுதாய மேம்பாட்டுக்காக பல ஆலோசனைகளை, தகவல்களை வழங்கி வருகிறார். அந்த வகையில், சமீபத்தில் வாட்ஸ்–அப்பில் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளார்.

‘‘ஐ.நா.சபை அறிக்கையின்படி, ஒவ்வொரு நாட்டிலும் தனிநபர் கணக்கை எடுத்துக்கொண்டால், தலைக்கு எத்தனை மரங்கள் இருக்கிறது என்ற கணக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கனடா நாட்டில் ஒரு தனிநபருக்கு 8 ஆயிரத்து 953 மரங்களும், ரஷ்யாவில் 4 ஆயிரத்து 461 மரங்களும், அமெரிக்காவில் 716 மரங்களும், சீனாவில் 102 மரங்களும், இந்தியாவில் 28 மரங்களும் இருக்கின்றன என்று குறிப்பிட்டுள்ளது. உலகிலேயே ஒரு தனிநபருக்கு எத்தனை மரங்கள்? என்ற கணக்கில் இந்தியாதான் கடைசி இடத்தில் இருக்கிறது. ஒவ்வொரு 5 ஆண்டுகளிலும் நமது சுற்றுச்சூழலில் ஒரு டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பம் உயர்ந்துகொண்டே போகிறது. தற்போது ஏற்கனவே 45 டிகிரி செல்சியஸ் வெப்பம் ஏற்பட்டுவருகிறது. இது மிகவும் கவலையளிக்கிறது. வருகிற பருவமழை காலத்தில் நாம் ஒவ்வொருவரும் தலைக்கு 5 மரங்களாவது நட்டு பராமரிக்கவேண்டும். அந்த மரங்களை நமது குழந்தைகள்போல கவனித்து பராமரிக்கவேண்டும். நாம் இதை செய்வோமா? என்று குறிப்பிட்டிருந்தார். இதை எவ்வளவு அதிகம்பேர்களுக்கு அனுப்ப முடியுமோ, அந்தவகையில் அனுப்புங்கள்’’ என்று குறிப்பிட்டுள்ளார். ஒரு அரசியல்வாதி சமூகசிந்தனையோடு இவ்வாறு மரம் வளர்ப்பில் அதிக அக்கறை காட்டியிருப்பது நிச்சயமாக வரவேற்புக்குரியது.

இதுபோன்ற செயல்பாடுகளை சிந்தனைக்கு மட்டும் வைத்துக்கொள்ளாமல், ஒவ்வொரு தனிநபரும், ஒவ்வொரு அமைப்பும், ஒவ்வொரு பள்ளிக்கூடமும், ஒவ்வொரு கல்லூரியும், ஒவ்வொரு நிறுவனமும், ஒவ்வொரு வணிக நிறுவனமும் கண்டிப்பாக செயல்படுத்தவேண்டும். ‘மரம் வளர்ந்தால்தான் நாடு செழுமை அடையும். போதிய மழை பெய்யும். நாமும் வளமாக இருக்கமுடியும் என்பதை சிறுவயதில் இருந்தே எல்லோருக்கும் கற்றுக்கொடுக்கவேண்டும். நமது அண்டை மாநிலமான கர்நாடகாவில் மரம் வளர்ப்பில் மிகத்தீவிரமாக அக்கறைக்காட்டி வருகிறார்கள். கடந்த ஆண்டு பட்ஜெட்டில் 8 கோடி மரக்கன்றுகளை நடுவதற்கு நிதி ஒதுக்கப்பட்டது. இந்த ஆண்டு 6 கோடி மரங்கள் நடுவதற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சில தினங்களுக்கு முன்பு தமிழ்நாட்டிலும் பட்ஜெட்டில் வனத்துறை அமைச்சர், ஒரு நாடு 33 சதவீத வனப்பரப்பு கொண்டிருக்க வேண்டியநிலையில், தமிழ்நாட்டில் 17.59 சதவீதம்தான் வனப்பரப்பு இருக்கிறது என்ற கவலைதரும் செய்தியை தெரிவித்துள்ளார். இதுமட்டுமல்லாமல், இந்த ஆண்டு 68 லட்சம் மரக்கன்றுகள் நடும் பணிக்காக ரூ.65 கோடியே 85 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 2012–13–ம் ஆண்டு முதல் 2016–17–ம் ஆண்டு வரை 5 கோடியே 80 லட்சம் மரக்கன்றுகள், 6 ஆயிரத்து 142 தேர்வு செய்யப்பட்ட வருவாய் கிராமங்களில் உள்ள விவசாயிகளின் நிலங்களில் நடப்பட்டுள்ளதாக கணக்கில் தெரிவித்துள்ளார். கணக்கில்தான் இவ்வளவு மரக்கன்றுகள் இருக்கிறதே தவிர, நடைமுறையில் உண்மைநிலையில் இவ்வளவு மரக்கன்றுகள் யார் கண்ணிலும் தெரியவில்லை. ஆக, மரக்கன்றுகள் நடுவதை ஏட்டளவில் சொல்வதோடு நிறுத்திவிடாமல், பள்ளிக்கூடங்களில் சின்னஞ் சிறுவர்களிடமிருந்து தொடங்கி முதியவர்கள்வரை எல்லோரும் ஆளுக்கொரு மரக்கன்றாவது குறைந்தபட்சம் நடவேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும். நடிகர் விவேக் போன்ற மரம் நடும் பணியில் உள்ள இயற்கை ஆர்வலர்களை ஊக்குவிக்கவேண்டும். அரசாங்கம் கோடிக்கணக்கான மரக்கன்றுகள் நடுவதை தனது தார்மீக கடமையாகக் கொள்ள வேண்டும்.

Next Story