14–வது ஜனாதிபதி


14–வது  ஜனாதிபதி
x
தினத்தந்தி 20 Jun 2017 9:30 PM GMT (Updated: 2017-06-20T22:58:12+05:30)

இந்தியா முழுவதும் அடுத்த முதல் குடிமகன் யார்?, 14–வது ஜனாதிபதி தேர்தலில் பிரணாப் முகர்ஜிக்கு அடுத்த ஜனாதிபதியாக யார்? தேர்ந்தெடுக்கப்படப்போகிறார்கள்.

ந்தியா முழுவதும் அடுத்த முதல் குடிமகன் யார்?, 14–வது ஜனாதிபதி தேர்தலில் பிரணாப் முகர்ஜிக்கு அடுத்த ஜனாதிபதியாக யார்? தேர்ந்தெடுக்கப்படப்போகிறார்கள். தேர்தலே இல்லாமல் ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் ஒரே வேட்பாளரை ஆதரித்து, புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கப்போகிறார்களா?, அல்லது போட்டிவரப்போகிறதா? என்பதில்தான் பலத்த எதிர்பார்ப்பு இருந்தது. இதுவரையில், 1977–ம் ஆண்டு ஜனாதிபதியாக டாக்டர் ராதாகிருஷ்ணன் தான் போட்டியில்லாமல் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதுபோன்ற ஒரு நிலைமை 40 ஆண்டுகளுக்குப்பிறகு இப்போது ஏற்படுமா? என்று எல்லோரும் எதிர்பார்த்ததற்கு மாறாக, இதுவரையில் ஒருமித்த கருத்து ஏதும் ஏற்படவில்லை. பல பெயர்கள் ஜனாதிபதி வேட்பாளர் தேர்வுக்காக ஆளும்கட்சி தரப்பிலிருந்து அடிபட்டுக்கொண்டிருந்தது. ஆனால், யாருமே எதிர்பார்க்காத வகையில், பீகார் மாநில கவர்னரான 71 வயதான ராம்நாத் கோவிந்த் பெயரை பா.ஜ.க. மேலிடம் அறிவித்துவிட்டது.

இந்தியாவில், இதுவரையில் 1997–2002–ம் ஆண்டுகளில்தான் ஒரு தலித் அதாவது கே.ஆர்.நாராயணன் ஜனாதிபதி பதவி வகித்திருந்தார். தலித் மக்கள் முன்னேற்றத்திற்காக ஆரம்பகாலத்திலிருந்தே பாடுபட்டுவந்த ராம்நாத் கோவிந்த், தனது கிராமத்தில் உள்ள பரம்பரை சொத்தான வீட்டை தலித் மக்களுக்காக ஒரு திருமண மண்டபமாக பயன்படுத்த நன்கொடையாக வழங்கியிருக்கிறார். 1975–ம் ஆண்டு சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றிபெற்ற அவர், பணியில் சேராமல் டெல்லி ஐகோர்ட்டிலும், சுப்ரீம் கோர்ட்டிலும் வக்கீலாக பணியாற்றத்தொடங்கினார். அரசியல் ரீதியாக சரியான கணக்கைப்போட்டுத்தான் ராம்நாத் கோவிந்தை பா.ஜ.க. ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்திருக்கிறது. இதில் பா.ஜ.க.விற்கு பல அரசியல் லாபங்கள் இருக்கிறது என்று அரசியல் நோக்கர்கள் கணக்குப்போட்டு கூறுகிறார்கள். இந்தியாவில் 52 சதவீதம் பிற்படுத்தப்பட்ட மக்களின் ஓட்டுகளும், 23 சதவீதம் தலித் ஓட்டுகளும் இருக்கிறது. நரேந்திரமோடி பிற்படுத்தப்பட்ட மக்களின் நம்பிக்கையை பெற்றுவரும் நிலையில், தலித் சமூகத்தை சேர்ந்த ஒருவரை ஜனாதிபதியாக ஆக்குவதன் மூலம் அந்த 23 சதவீத ஓட்டுகளையும், 2019–ம் ஆண்டு நடக்க இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் தனக்கு சாதகமாக ஆக்குவதற்கான முயற்சி என்று ஒரு தரப்பில் கூறப்படுகிறது. இதுவரையில், எந்தவித சர்ச்சைகளிலும் சிக்காத ராம்நாத் கோவிந்தை நிறுத்தியிருப்பதன் மூலம், அவரை எதிர்த்து கருத்து கூறமுடியாத ஒரு சிக்கலை எதிர்க்கட்சிகளுக்கு நரேந்திரமோடி உருவாக்கிவிட்டார். எதிர்க்கட்சிகளின் தரப்பில் இனி ஒன்று இவரை ஆதரிக்கவேண்டும், இல்லையென்றால் அவரை எதிர்த்து நிறுத்த ஒரு தலித் வேட்பாளரைத்தான் தேர்வு செய்யவேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டனர்.

இப்போதுள்ள சூழ்நிலையில், எதிர்க்கட்சிகள் வேட்பாளரை நிறுத்தினாலும், ஒரு விவசாயியின் மகன், ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பாடுபடுபவர், சிறந்த சட்டநிபுணர், பீகார் முதல்–மந்திரி நிதிஷ்குமார் பாராட்டியதைபோல, எந்த வி‌ஷயமென்றாலும் சட்டதிட்டங்களின் அடிப்படையில்தான் செயலாற்றுபவர் என்று பல சிறப்புகளைப்பெற்ற ராம்நாத் கோவிந்த்தான் வெற்றிபெறுவதற்கு வாய்ப்பிருக்கிறது. ஏனெனில், பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஏற்கனவே 48.9 சதவீத ஓட்டுகள் இருக்கின்றன. இப்போது வேட்பாளர் அறிவிக்கப்பட்டபிறகு, அ.தி.மு.க., பிஜு ஜனதாதளம், தெலுங்கானா ராஷ்டிர சமிதி, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் ஆதரவுக்குப்பிறகு, இந்த ஆதரவு 60.8 சதவீதமாக உயர்ந்துவிட்டது. இதுமட்டுமல்லாமல், தலித் வேட்பாளரை நிறுத்தியதால், சமாஜ்வாடி கட்சி, ஐக்கிய ஜனதாதளம், பகுஜன் சமாஜ் கட்சி ஆகிய கட்சிகள் உள்பட மேலும் சிறிய கட்சிகளின் ஆதரவும் கிடைக்கலாம் என்றவகையில், ராம்நாத் கோவிந்தின் வெற்றி உறுதியாகிவிட்டது. ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்படபோகிறாரா?, தேர்தல் நடக்கப்போகிறதா? என்பதை நாளை நடக்கும் எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டம் சொல்லிவிடும். நாடு, ராம்நாத் கோவிந்திடம் பெரிதும் எதிர்பார்க்கிறது. அவரும் பாரபட்சமில்லாமல் செயல்படுவார் என்பதையே இதுவரையில் உள்ள அவரது செயல்பாடுகள் உறுதிப்படுத்துகின்றன.

Next Story