விடைத்தாள் திருத்துவதில் தவறுகளா?


விடைத்தாள் திருத்துவதில் தவறுகளா?
x
தினத்தந்தி 22 Jun 2017 8:30 PM GMT (Updated: 2017-06-22T18:15:32+05:30)

பண்டைய காலங்களில் இருந்தே தமிழ்நாடு கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.

ண்டைய காலங்களில் இருந்தே தமிழ்நாடு கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்ககாலத்தில் இருந்தே கல்வி மிக உன்னதநிலையில் பார்க்கப்பட்டதையும், கற்றவர்கள் அனைவராலும் போற்றப்பட்டு உயர்ந்தநிலையில் இருந்ததையும் காண முடிகிறது. தமிழகத்தை ஆண்ட பல்வேறு மன்னர்கள் கல்வி மேம்பாட்டுக்காக எண்ணில் அடங்காத நடவடிக்கைகளை மேற்கொண்டதை பண்டைய இலக்கிய படைப்புகளில் காணலாம். இப்போதைய கல்விமுறையில் ஒருவர் கல்வியில் சிறந்தவரா?, முழுமையாக கல்வியை கற்று இருக்கிறாரா? என்பதை மதிப்பிடுவது தேர்வுகளில் அவர் பெறும் மதிப்பெண்கள்தான். அந்தவகையில், ஒவ்வொரு மாணவருக்கும் பிளஸ்–2 தேர்வில் அவர் எடுத்த மதிப்பெண்கள் தான் அவரது எதிர்கால வாழ்வின் வாசல் போன்றதாகும். இந்த மதிப்பெண்களின் அடிப்படையில்தான் தொடர்ந்து உயர்கல்வி மேற்கொள்வதற்கும், வேறு தொழிலை தொடங்குவதற்கும் வாய்ப்புகளை தேடமுடியும்.

இந்த ஆண்டு தமிழகத்தில் பிளஸ்–2 தேர்வில் 8 லட்சத்து 93 ஆயிரத்து 262 மாணவர்கள் தேர்வு எழுதினர். இதில், 8 லட்சத்து 22 ஆயிரத்து 838 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். 92.1 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்று பெருமையாக அறிவிக்கப்பட்டது. தேர்வில் முறைகேடுகளை, ஆள்மாறாட்டத்தை தவிர்த்திடும் பொருட்டும், தேர்வு எழுதுபவர்கள் ஒருவரை பார்த்து மற்றவர் எழுதுவதை தவிர்த்திடும் பொருட்டும், விடைத்தாளில் தேர்வு எழுதுபவர்களின் புகைப்படத்துடன் கூடிய முகப்புதாள் அறிமுகப்படுத்துதல் உள்பட பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக கல்வித்துறை பெருமையுடன் கூறியது. இந்த ஆண்டு பல சீர்திருத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தாலும், பல மாணவர்கள் மதிப்பெண் பட்டியல் வந்தவுடன் நாங்கள் நிறைய மதிப்பெண்களை எதிர்பார்த்தோமே, நன்றாகத்தான் தேர்வு எழுதினோம். எங்களுக்கு குறைவான மதிப்பெண்கள் கிடைத்திருக்கிறது என்று மனம் வருந்தினர். பலர் மேல்நிலைத்தேர்வின் மதிப்பெண் மறுகூட்டல், மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பித்திருந்தனர். வழக்கமாக மாணவர்கள் இவ்வாறு மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்கும்போது ஓரிரண்டு மார்க்குகள் அதிகமாக கிடைக்கும் என்று எதிர்பார்ப்பது வழக்கம். இந்த ஆண்டு பல மாணவர்களுக்கு அதிர்ச்சித்தரத்தக்க வகையில் மறுமதிப்பீட்டில் அவர்களுக்கு குறைவான மதிப்பெண்கள் கிடைத்துள்ளன.

கணிதம், உயிரியல், வேதியியல், இயற்பியல் போன்ற பாடங்களில் மாணவர்களுக்கு 8 மதிப்பெண்கள் வரை குறைவாக கிடைத்தன. 3,940 மாணவர்கள் மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பித்திருந்தனர். மொத்தம் 2,426 விடைத்தாள்களில் மதிப்பெண்கள் மாற்றப்பட்டுள்ளதாக அரசு தேர்வு துறையின் இயக்குனரே தெரிவித்துள்ளார். இதில், 696 மாணவர்களுக்கு குறைவான மதிப்பெண்கள் மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டில் கிடைத்திருக்கின்றன. மீதமுள்ள மாணவர்களுக்கு அதிகபட்சமாக 12 மார்க்குகள் வரை கூடுதலாக கிடைத்துள்ளன. அக்கவுண்டன்சி பாடத்தில் ஒரு மாணவருக்கு 140 மதிப்பெண்கள் கிடைத்திருந்தது. மறுகூட்டலில் 200–க்கு 200 மதிப்பெண்கள் கிடைத்துள்ளன. மற்ற விடைத்தாள்களில் உள்ள மார்க்குகளில் மாற்றம் இல்லை. மறுமதிப்பீட்டில் மாணவர்களின் மதிப்பெண்கள் குறைந்தாலும், அதிகமாக இருந்தாலும், தேர்வுத்தாள் திருத்தும் முறையில் ஒரு பெரிய குறைபாடு இருக்கிறது என்பதில் நிச்சயமாக ஐயப்பாடு எதுவும் இல்லை. தேர்வுத்தாள் திருத்துவதில் ஆசிரியர்கள் மிக அதிகமாக கவனம் செலுத்தவேண்டும். ஏனெனில், ½ மார்க் வித்தியாசத்தில் பல உயர்படிப்புகளுக்கான மாணவர்கள் சேர்க்கையில் மாணவர்களின் வாய்ப்புகள் பறிபோகும்நிலை ஏற்படும். இவ்வாறு தேர்வுத்தாள்கள் திருத்துவதில் பல தவறுகள் இழைக்கப்படுகின்றன. எதிர்காலத்தில் ஒவ்வொரு ஆண்டும் எந்தவித குறைபாடும் இல்லாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்ற உத்தரவாதம் கொடுக்க வேண்டும். மேலும், இதுபோன்ற தவறுகளுக்கு ஆசிரியர்களின் பணிச்சுமை காரணமா?, அல்லது அவர்களின் கவனக்குறைவா? என்பதை இந்த ஆண்டாவது துல்லியமாக ஆராய்ந்து, உரிய தீர்வு நடவடிக்கைகளை கல்வித்துறை மேற்கொள்ள வேண்டும்.


Next Story