எண்ணூர் துறைமுகம் விற்பனைக்கா?


எண்ணூர் துறைமுகம் விற்பனைக்கா?
x
தினத்தந்தி 23 Jun 2017 8:30 PM GMT (Updated: 2017-06-23T18:46:23+05:30)

இயற்கை தமிழகத்துக்கு தந்த பெரிய அருட்கொடை 1,076 கிலோமீட்டர் நீளமுள்ள கடற்கரைதான்.

யற்கை தமிழகத்துக்கு தந்த பெரிய அருட்கொடை 1,076 கிலோமீட்டர் நீளமுள்ள கடற்கரைதான். பண்டைய காலத்திலேயே தமிழன் உலகின் பல இடங் களுக்கு இந்த கடற்கரைகளை பயன்படுத்தி பொருட்களை ஏற்றிக் கொண்டு சென்றும், அங்கிருந்து கொண்டுவந்தும் கடல் வாணிபத்தில் சிறந்து விளங்கியிருக்கிறான். இதுபோல, சேர, சோழ, பாண்டிய மன்னர்களும் எதிரிகளை அழிக்க கடல்போரில் தங்கள் வீரத்தை காட்டியிருக்கிறார்கள். இந்தியாவில் மொத்தம் 13 பெரிய துறைமுகங்கள் உள்ளன. இதில், சென்னை, தூத்துக்குடி, எண்ணூர் காமராஜர் துறைமுகங்கள் தமிழகத்தின் சீரிய பங்காக திகழ்கின்றன. தமிழ்நாட்டில் உள்ள 3 பெரிய துறைமுகங்களில் கடைசி யாக உருவாக்கப்பட்டது எண்ணூரில் உள்ள காமராஜர் துறைமுகம் ஆகும். 12 துறைமுகங்கள் மத்திய அரசாங் கத்துக்கு சொந்தமான துறைமுகங்கள் என்ற நிலையில், முதல் கார்ப்பரேட் துறைமுகமாக இந்த துறைமுகம் மத்திய அரசாங்கம் மற்றும் சென்னை துறைமுகத்தின் பங்களிப்போடு கம்பெனி சட்டத்தின்கீழ் தொடங்கப்பட்டது. மத்திய அரசாங்கத்துக்கு 67 சதவீத பங்குகளும், சென்னை துறைமுகத்துக்கு 33 சதவீத பங்குகளும் உள்ளன.

1996–ம் ஆண்டு தி.மு.க. தலைவர் கருணாநிதி முதல்– அமைச்சராக இருந்த நேரத்தில், தமிழ்நாடு மின்சாரவாரியம் மூலமாகவும், டிட்கோ என்று அழைக்கப்படும் தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக்குழுமம் மூலமாகவும் 2,100 ஏக்கர் நிலம் இந்த புதிய துறைமுகத்துக்கு வழங்கப்பட்டது. மத்திய அரசாங்கம் 1,000 ஏக்கர் நிலத்தை வழங்கியது. 1.2.2001 அன்று பிரதமர் வாஜ்பாய் இந்த துறைமுகத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார். மிகச்சிறிய அளவில் தொடங்கப் பட்ட இந்த துறைமுகம், தற்போது அனல்மின் நிலையங் களுக்கு தேவையான நிலக்கரியை இறக்குமதி செய்து கொண்டிருக்கிறது. மேலும், கடல்சார் திரவமுனையம், மோட்டார் வாகன ஏற்றுமதி முனையம், கண்டெய்னர் முனையம் உள்பட பல வசதிகள் இருக்கின்றன. இன்னும் பல வசதிகள் வர இருக்கின்றன. 100 நிரந்தர தொழிலா ளர்களும், 1,500 ஒப்பந்த தொழிலாளர்களும் பணியாற்றி வருகிறார்கள். தொடர்ந்து பல ஆண்டுகளாக இந்த துறைமுகம் லாபம் ஈட்டிவருகிறது.  

கடந்த ஆண்டு மட்டும் ரூ.660 கோடி வருவாயும்,  ரூ.480 கோடி லாபமும் இந்த துறைமுகத்தில் ஈட்டப் பட்டுள்ளது. லாப பங்குத்தொகையாக 90 சதவீதம் மத்திய அரசாங்கத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. சென்னை துறை முகத்துக்கு 45 சதவீதம் வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இதன் பங்குகளை  தனியார்  நிறுவனத்துக்கு விற்கப்போவதாக அதிகாரபூர்வமற்ற செய்திகள் வருகின்றன. குஜராத்தில் உள்ள அதானி துறைமுக நிறுவனத்துக்கு இந்த எண்ணூர் காமராஜர் துறைமுகத்தை விற்கும் வகையில் திட்டங்கள் தீட்டப்பட்டிருப்பதாகவும் பத்திரிகைகளில் செய்திகள் வெளிவருகின்றன. இது நஷ்டம் ஈட்டிக்கொண்டிருக்கும் பொதுத்துறை நிறுவனம் இல்லை. ஆண்டுதோறும் பெருமளவில் மத்திய அரசாங்கத் துக்கும், சென்னை துறைமுகத்துக்கும் லாபத்தை ஈட்டி கொண்டிருக்கும்போது, மேலும் வசதிகளை செய்ய நிதி வேண்டும் என்றால், பொதுமக்களிடம் பங்குகளை விற்கலாம், அல்லது சென்னை துறைமுகத்தோடு இணைத்துவிடலாம் என்பதுதான் பொதுவான கோரிக்கை யாக இருக்கிறது. இந்த முடிவுபற்றி மத்திய அரசாங்கம் இதுவரையில் அரசு ரீதியாக வெளிப்படையான எந்தவித அறிவிப்பையும் பகிரங்கமாக வெளியிடவில்லை. தமிழக சட்டசபையில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இதுகுறித்து மத்திய அரசாங்கத்திடமிருந்து எந்தவித அறிக்கையும் வரவில்லை. அவர்களிடமிருந்து அறிக்கை பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அறிக்கை கிடைத்தவுடன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்துள்ளார். மத்திய அரசு இந்த துறைமுகத்தை நல்ல நிபுணத்துவம் கொண்ட தனியார் பங்களிப்போடு நடத்தப்படுவது தேவை என்று முடிவெடுத்தால், குறைந்த அளவு பங்களிப்பை தனியாருக்கு கொடுத்துவிட்டு, நிர்வாகப் பொறுப்பு மத்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் வகையில் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

Next Story