இனி ‘நீட்’ மூலம்தான் மாணவர் சேர்க்கை


இனி ‘நீட்’ மூலம்தான் மாணவர் சேர்க்கை
x
தினத்தந்தி 25 Jun 2017 9:30 PM GMT (Updated: 2017-06-25T22:55:56+05:30)

மருத்துவம், பல் மருத்துவக்கல்லூரிகளின் மாணவர் சேர்க்கைக்காக கடந்த மே மாதம் 7–ந்தேதி நடந்த ‘நீட்’ தேர்வுக்கான முடிவுகள் வெளியாகிவிட்டன.

ருத்துவம், பல் மருத்துவக்கல்லூரிகளின் மாணவர் சேர்க்கைக்காக கடந்த மே மாதம் 7–ந்தேதி நடந்த ‘நீட்’ தேர்வுக்கான முடிவுகள் வெளியாகிவிட்டன. தமிழக மாணவர்களுக்கு ‘நீட்’ தேர்விலிருந்து விலக்குபெற சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட 2 மசோதாக்களும் எந்தவித பலனையும் தரவில்லை. தமிழ்நாட்டில் இருந்து ‘நீட்’ தேர்வை 83 ஆயிரத்து 859 பேர் எழுதி, 32 ஆயிரத்து 570 பேர் மட்டுமே தேர்வுபெற்றுள்ளனர். அதாவது, 38.83 சதவீத மாணவர்கள் மட்டுமே ‘நீட்’ தேர்வில் தேர்ச்சிபெற்றுள்ளனர். பொதுப்பட்டியலில் உள்ளவர்கள் 50 சதவீதத்துக்கு மேலும், மற்றவர்கள் 40 சதவீதத்துக்கு மேலும் மதிப்பெண்கள் எடுத்தால்தான் வெற்றிபெற்றவர்கள் பட்டியலில் வருகிறார்கள்.

தமிழ்நாட்டில் ‘நீட்’ தேர்வு விகிதம் மிகவும் குறைவாக இருக்கிறது. முதல் 25 இடங்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு மாணவர்கூட தேர்வு பெறவில்லை. மற்ற தென்மாநிலங்களை எடுத்துக்கொண்டால், நிச்சயமாக ஓரிரு மாணவர்கள் இந்த பட்டியலில் இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் இருந்து முதல் மதிப்பெண் எடுத்த மாணவர், ‘நீட்’ தேர்வில் 655 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். ஆனால், அகில இந்திய அளவில் 260–வது ரேங்க் எடுத்திருக்கிறார். தமிழ்நாட்டை பொறுத்தமட்டில், மொத்தம் 720 மதிப்பெண்களில் 600 மதிப்பெண்களுக்கு மேல் 19 மாணவர்கள்தான் பெற்றிருக்கிறார்கள். 500–லிருந்து 600 மதிப்பெண்கள் வரை 156 மாணவர்களும், 400–லிருந்து 500 மதிப்பெண்கள் வரை 565 மாணவர்களும் பெற்றிருக்கிறார்கள். மாநில கல்வித்திட்டத்தின்கீழ் படித்தவர்களால் ‘நீட்’ எழுதமுடியாது என்று மாணவர்கள் நினைத்துவிடக்கூடாது என்பதற்கு எடுத்துக்காட்டு, தமிழகத்தில் முதல் மதிப்பெண் எடுத்த மாணவன் முகேஷ்கன்னா, கோவையில் மாநில கல்வித்திட்டத்தின் கீழ் படித்தவர்தான். ஆனால், ஒரு ஆண்டாக வேறெந்த படிப்பையும் படிக்காமல் ‘நீட்’ தேர்வுக்காக தனி பயிற்சி எடுத்திருக்கிறார். இதுபோல, தாழ்த்தப்பட்டோருக்கான பட்டியலில் அகில இந்திய அளவில் 9–வது இடத்தைப்பெற்றுள்ள சென்னையைச் சேர்ந்த லக்‌ஷண்யாவும் மாநில கல்வித்திட்டத்தின்கீழ் படித்திருக்கிறார். இப்போது ‘நீட்’ தேர்வு மதிப்பெண் அடிப்படையில்தான் கவுன்சிலிங் என்பது உறுதியாகிவிட்டது.

தமிழ்நாட்டில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 3,050 இடங்களில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 456 இடங்கள் போக, மீதமுள்ள 2,594 இடங்களில் 85 சதவீத இடங்களை மாநில கல்வித்திட்டத்தின் கீழ்படித்த மாணவர்களுக்கும், 15 சதவீத இடங்களை சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கும், இதேபோல சுயநிதி மருத்துவக்கல்லூரிகளில் உள்ள 1,300 இடங்களில், நிர்வாக ஒதுக்கீட்டுக்கு 517 இடங்கள் போக, மீதமுள்ள 783 இடங்களில் 85 சதவீதம் மாநில கல்வித்திட்டத்தின் கீழ்படித்த மாணவர்களுக்கும், 15 சதவீதம் சி.பி.எஸ்.இ. கல்வித்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கும் ஒதுக்கீடு செய்ய அரசு ஆணை பிறப்பித்துள்ளது. ஆனால், உச்சநீதிமன்றத்தில் யாராவது வழக்கு தொடர்ந்தால், இது நிலைத்திருக்குமா? என்பது சந்தேகமே. ஆகவே, மீண்டும் ஒரு குழப்பமான நிலையை எதிர்நோக்கி இருக்கிறோம் என்பதுதான் யதார்த்த உண்மை. எது எப்படி இருந்தாலும், இனி மருத்துவ மாணவர் சேர்க்கையில் ‘நீட்’ தேர்வு இல்லாமல் நிச்சயமாக எதுவும் நடக்காது. ஆகவே, இனியும் மாணவர்களிடம் வீணான நம்பிக்கையை வளர்க்காமல், இதை அரசியல் ஆக்காமல் ‘நீட்’ தேர்வை எதிர்கொள்வதற்கான வகையில், உயர்ந்த கல்வித்தரம் உள்ள வகையில் பாடத்திட்டங்களை மாற்றி, கற்பித்தல் முறையையும் மேம்படுத்தவேண்டும். யார்–யார் மருத்துவம் படிக்க விரும்பி ‘நீட்’ தேர்வை எழுத நினைக்கிறார்களோ, அவர்களுக்கு மட்டும் 11, 12–ம் வகுப்புகளில் அதற்குரிய சிறப்பு பயிற்சிகளை அனைத்து பள்ளிக்கூடங்களிலும் வழங்கவேண்டும். தமிழக கல்வித்துறை இதை இந்த ஆண்டே செயல்படுத்தவேண்டும்.

Next Story