என்ன ஆனது ‘பறக்கும் குதிரை’?


என்ன ஆனது ‘பறக்கும் குதிரை’?
x
தினத்தந்தி 26 Jun 2017 9:00 PM GMT (Updated: 26 Jun 2017 5:34 PM GMT)

எந்த ஒரு மாநிலம் என்றாலும், அங்கு உற்பத்தி அதிகமாக இருந்தால்தான் வேலைவாய்ப்பு பெருகும். நாட்டின் பொருளாதாரமும் உயரும்

ந்த ஒரு மாநிலம் என்றாலும், அங்கு உற்பத்தி அதிகமாக இருந்தால்தான் வேலைவாய்ப்பு பெருகும். நாட்டின் பொருளாதாரமும் உயரும். சிறு தொழில்கள் என்றாலும், பெரும் தொழில்கள் என்றாலும், கனரக தொழில்கள் என்றாலும், ஏராளமான தொழிற்சாலைகள் உருவானால்தான் உற்பத்தியும், வேலைவாய்ப்பும் ஒருசேர உயர்ந்து ஒட்டுமொத்த வளர்ச்சி உச்சநிலைக்கு சென்று கொண்டிருக்கும். அந்தவகையில், கடந்த பல ஆண்டுகளாக புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் முன்னணியில் இருந்த தமிழ்நாடு, தற்போது அந்த பெருமையில் இருந்து பின்தங்கி விட்டது. அண்டை மாநிலமான ஆந்திரா தொழில்முனைவோரை வரவேற்று, புதிய தொழில் நிறுவனங்களை தொடங்குவதற்கு சிவப்பு கம்பளம் விரித்துவருகிறது. தெலுங்கானாவிலும் அதே நிலைமை நீடித்து வருகிறது. ‘கியா மோட்டார்ஸ்’ நிறுவனம் உள்பட பெரிய தொழில்நிறுவனங்களை தமிழ்நாடு இழந்து விட்டது. தமிழ்நாட்டில் துறைமுக வசதிகள், ரெயில் வசதிகள், சாலை வசதிகள் போன்ற பல அடிப்படை வசதிகள் தொழில்வளர்ச்சிக்கு தேவையான அளவிற்கு இருக்கிறது. ஆந்திராவில், தமிழக எல்லைப்புறங்களில் புதிய தொழிற்சாலைகளை தொடங் கவைத்து இந்த வசதிகளை பயன்படுத்தி வருகிறார்கள்.

2011–12 மற்றும் 2012–13–ம் ஆண்டுகளில் தமிழகத்தின் தொழில்வளர்ச்சி 12.5 சதவீதமாக இருந்தது. தற்போது ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள தகவலில், 2016–17–ம் ஆண்டில் தொழில் உற்பத்தி வளர்ச்சி வெறுமனே 1.64 சதவீதமாகத்தான் இருக்கிறது. இதேகாலக்கட்டத்தில் ஆந்திராவில் தொழில் வளர்ச்சி 10.36 சதவீதமாகவும், தெலுங்கானாவில் 7.1 சதவீதமாகவும் இருக்கிறது. ஆந்திராவில் தொழில்வளர்ச்சியை எடுத்துக்கொண்டால், நிச்சயமாக தமிழ்நாட்டிற்கு கிடைக்கவேண்டிய வளர்ச்சி அங்கு போயிருக்கிறது என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. தமிழக அரசு விழித்துக் கொள்ள வேண்டிய தருணம் வந்து விட்டது. 2015–ம் ஆண்டு செப்டம்பர் 9, 10–ந்தேதிகளில் மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா சென்னையில் ‘உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை’ நடத்தினார். இந்தியா முழுவதிலும் இருந்து மட்டுமல்லாமல், உலகம் முழுவதிலும் இருந்து தொழில்முனைவோர்கள் வந்திருந்தனர். ரூ.2,42,160 கோடி புதிய முதலீடுகளுக்காக 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளதாக அப்போது ஜெயலலிதா பெருமையோடு கூறினார். அடுத்த 2 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்படும் என்றும் அறிவித்தார்.

இந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு, ‘பறக்கும் குதிரை’ தான் அடையாள சின்னமாக இருந்தது. 2 ஆண்டுகள் நிறைவடையப்போகும் நிலையில், தற்போது சட்டசபையில் தொழில்துறை அமைச்சர், ரூ.26,615 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். அடுத்த முதலீட்டாளர்கள் மாநாடு 2018–ல் நடக்கும் என்று கூறியிருக்கிறார். இப்போது தமிழக அரசைப்பார்த்து மக்கள் கேட்பது, ‘பறக்கும் குதிரை’ என்னஆனது? என்பதுதான். ஆந்திராவில் தொழில் வளர்ச்சி வேகமாக இருக்கும் இந்தநேரத்தில், இன்னமும் தமிழக அரசு மந்தமாக இருக்கக் கூடாது. தொழில்முனைவோர் முன்புபோல, தமிழ்நாட்டை தேடி வரும் வகையில், அவர்களை நாடிச்சென்று தமிழகத்தில் செய்யப்பட்டுள்ள வசதிகளை குறிப்பாக உள்கட்டமைப்பு வசதிகளை எடுத்துக் கூற வேண்டும். எந்தவித எதிர்பார்ப்புகளும் இன்றி ஜெயலலிதா சொன்னது போல, 30 நாட்களில் அனுமதிகளை வழங்கி, எல்லாவற்றிலும் வெளிப்படைத் தன்மை இருக்கும் என்பதை தொழில்முனைவோருக்கு தெரிவிக்க வேண்டும். தமிழ்நாட்டில் தொழில் தொடங்க 42 ஆயிரம் ஏக்கர் நிலம் தயார்நிலையில் இருப்பதாக ஜெயலலிதா அறிவித்திருந்தார். அதையும் மனதில்கொண்டு, 2015–ம் ஆண்டு நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் எந்தெந்த மாவட்டங்களில் தொழில் தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது என்பதை கருத்தில் எடுத்துக்கொண்டு, அந்த நிறுவனங்களையெல்லாம் தேடிச்சென்று உறுதிமொழி கொடுத்து, தமிழ்நாட்டில் தொழில்தொடங்குவதை எளிமையாக்கினால் தான் இனி தமிழ்நாட்டில் தொழில்வளரும். எந்த புதிய தொழில் நிறுவனம் என்றாலும் சரி, இனி விரிவாக்கம் என்றாலும் சரி, தமிழ்நாட்டை விட்டு போகும் நிலை இருக்காது என்ற உறுதியை அரசு எடுத்துக் கொள்ள வேண்டும்.

Next Story