விற்பனைக்கு வருகிறார் ‘மகாராஜா’


விற்பனைக்கு வருகிறார் ‘மகாராஜா’
x
தினத்தந்தி 1 July 2017 3:00 AM IST (Updated: 30 Jun 2017 5:58 PM IST)
t-max-icont-min-icon

மத்திய அரசாங்கம், மாநில அரசுகள் என இரு அரசுகளுக்கும் சொந்தமான பல பொதுத்துறை நிறுவனங்கள் தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கி, மக்களின் வரிப்பணத்தை விழுங்கிக்கொண்டிருக்கின்றன.

த்திய அரசாங்கம், மாநில அரசுகள் என இரு அரசுகளுக்கும் சொந்தமான பல பொதுத்துறை நிறுவனங்கள் தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கி, மக்களின் வரிப்பணத்தை விழுங்கிக்கொண்டிருக்கின்றன. ஒன்று இந்த நஷ்டத்தை சரிக்கட்டவேண்டும் அல்லது லாபகரமாக இயங்காவிட்டால், அதன் பங்குகளை தனியாருக்கு விற்று நஷ்டத்திலிருந்து தப்பித்துக்கொள்வதுதான் சாலச்சிறந்தது என்று நிபுணர்கள் கூறத்தொடங்கிவிட்டனர். பா.ஜ.க. அரசாங்கமும் இத்தகைய துணிச்சலான நடவடிக்கைகளை எடுக்கத்தொடங்கிவிட்டது. அத்தகைய ஒரு முடிவாக தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கிவரும் ஏர் இந்தியா நிறுவனத்தின் பங்குகளை தனியாருக்கு விற்றுவிடுவது என்ற வரவேற்கத்தக்க முடிவு மந்திரிசபை கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது. ஏர் இந்தியா நிறுவனம் ஒரு ‘மகாராஜா’ வரவேற்பதுபோல வர்த்தக சின்னத்தைக்கொண்டதாகும். லாபத்தில் இயங்கும்வரைதான் அவர் மகாராஜாவாக இருக்கமுடியுமே தவிர, நஷ்டத்தில் இயங்கும்போது நிச்சயமாக மகாராஜாவாக இருக்க முடியாது.

1932–ம் ஆண்டில் தொழில் அதிபர் ஜே.ஆர்.டி. டாட்டா தொடங்கிய டாட்டா ஏர்லைன்ஸ் நிறுவனத்தை மத்திய அரசாங்கம் வாங்கியபிறகுதான், முதலில் இந்தியன் ஏர்லைன்ஸ், ஏர் இந்தியா நிறுவனமாக பரிணமித்து, பின்பு ‘ஏர் இந்தியா’ என்று ஒரே நிறுவனமாக இணைக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு விமான பயணத்தில் 14 சதவீதமும், வெளிநாட்டுக்கு செல்லும் பயணத்தில் 17 சதவீதமும் ஏர் இந்தியா விமானங்கள் மூலம்தான் நடந்துவருகிறது. ஏர் இந்தியா நிறுவனத்தின் சேவை தனியார் விமான சர்வீஸ் சேவையைவிட நிச்சயமாக உயர்ந்தது. தனியார் விமான சேவையில் ஒரு குறிப்பிட்ட விமானத்தில் போதிய அளவு பயணிகள் இல்லையென்றால், அந்த விமான சேவையை அன்று மட்டும் ரத்து செய்துவிட்டு, அதில் செல்ல டிக்கெட் எடுத்த பயணிகளை அடுத்த விமானத்தில் ஏற்றி அனுப்பிவிடுவார்கள். ஆனால், ஏர் இந்தியா விமானத்தில் ரத்து என்பதற்கே இடமில்லை. ஒரு பயணிதான் வருவதாக இருந்தாலும் விமானம் செல்லும். எனவே, பயணிகளுக்கு உறுதியான சேவை கிடைத்துவந்தது. இப்போது தனியாருக்கு விற்க முடிவெடுத்துள்ள நிலையில், இந்த உறுதியான சேவை குறித்து மத்திய அரசாங்கம் என்ன சொல்லப்போகிறது?.

தற்போது இந்த நிறுவனத்தின் கடன் ரூ.52 ஆயிரம் கோடியாகும். இனிமேலும் இந்த நஷ்டத்தை தாங்கமுடியாது என்றநிலையில், மத்திய அமைச்சரவைக்கூட்டம் இதுகுறித்து விவாதித்து ஏர் இந்தியா நிறுவனத்தையும், அதன் 5 துணை நிறுவனங்களையும் தனியாருக்கு விற்றுவிடுவது என்று முடிவு எடுத்தது. எவ்வாறு இந்த பங்குகளை விற்கலாம்?, 100 சதவீத பங்குகளையும் விற்றுவிடலாமா?, 75 சதவீத பங்குகளை விற்றுவிடலாமா?, அல்லது 51 சதவீத பங்குகளை மட்டும் விற்றுவிடலாமா? என்பது பற்றி முடிவு எடுக்க நிதி மந்திரி அருண் ஜெட்லி தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இப்போதுள்ள சூழ்நிலையில், இண்டிகோ விமான நிறுவனம் ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்குவதற்கான விருப்பத்தை தெரிவித்துள்ளது. ஏர் இந்தியா நிறுவனத்திற்கு தற்போது 118 விமானங்கள் இருக்கின்றன. 41 நாடுகளுக்கும், உள்நாட்டில் 72 நகரங்களுக்கும் ஏர் இந்தியா விமானம் சென்றுவருகிறது. மத்திய அரசாங்கம் எடுத்துள்ள இந்த முடிவு நிச்சயமாக வரவேற்கத்தக்க ஒன்றாகும். எவ்வளவு ஆண்டுகள்தான் ஒரு நிறுவனம் நஷ்டத்தில் இயங்கும்?, எவ்வளவு காலம்தான் மக்களின் வரிப்பணத்தில் இருந்து அந்த நஷ்டத்தை ஈடுகட்டமுடியும்? என்பதையெல்லாம் கண்டிப்பாக யோசிக்கவேண்டும். இதுபோல, மத்திய அரசுக்கு சொந்தமான 277 பொதுத்துறை நிறுவனங்களிலும், தமிழக அரசுக்கு சொந்தமான 11 பொதுத்துறை நிறுவனங்களிலும் எந்தெந்த நிறுவனங்கள் தொடர்ந்து நஷ்டத்தில் இயங்குகிறதோ?, அந்த நிறுவனங்களை தனியாருக்கு விற்றுவிட்டு, அதில் கிடைக்கும் தொகையை மக்களுக்கான வளர்ச்சித்திட்டங்களுக்கு பயன்படுத்துவதில் அரசு அக்கறை காட்டவேண்டும்.

Next Story