புதிய அத்தியாயம்; புரட்டிப்பார்த்தால்தான் தெரியும்


புதிய  அத்தியாயம்; புரட்டிப்பார்த்தால்தான்  தெரியும்
x
தினத்தந்தி 2 July 2017 11:15 PM GMT (Updated: 2 July 2017 5:41 PM GMT)

ஆங்கிலேயரிடமிருந்து இந்தியா பெற்ற சுதந்திரத்தை 'நள்ளிரவில் பெற்ற சுதந்திரம்' என்று இன்றும் கூறிவருகிறோம்.

அதுபோல, உலகமே தூங்கிக்-கொண்டி-ருந்த நள்ளிரவில் சுதந்திரம் அடையும்போது, எப்படி பாராளுமன்றம் விழித்திருந்து இந்தியாவின் சுதந்திரத்தை அறிவித்ததோ, அதுபோல ஜூன் 30-ந் தேதி நள்ளிரவில் இந்தியா முழுமையையும் ஒரே நாடு!, ஒரே சந்தை!, ஒரே வரி! என்று அழைக்கப்படும்வகையில், சரக்கு சேவை வரி நடைமுறையில் வருவதை பிரகடனப்படுத்தியது. இந்த விழாவை, காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள், தி.மு.க. உள்பட பல கட்சிகள் புறக்கணித்தன. காங்கிரஸ் கட்சி இதை புறக்கணித்ததற்கு ஒரு காரணமாக பாராளுமன்றத்தின் மைய மண்டபத்தில் 1947-ம் ஆண்டு சுதந்திர தினத்தன்றும், 1972-ல் வெள்ளிவிழா கொண்டாட்டத்தின்போதும், 1997-ல் பொன்விழாவின்போதும்தான் கூட்டம் நடந்ததே தவிர, எத்தனையோ சீர்திருத்த நடவடிக்கைகள் மத்திய அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட நேரத்திலும் அவை எதுவும் நள்ளிரவில் மைய மண்டபத்தில் நடக்கவில்லை என்று கூறியது.

சரக்கு சேவை வரிக்கு நீண்ட நெடிய வரலாறு இருக்கிறது. நாட்டின் பல சீர்திருத்தத்திட்டங்களுக்கு பல வளர்ச்சித்திட்டங்களுக்கு, பல அதிரடி திட்டங்களுக்கு சரித்திர புகழ் பெற்ற வாஜ்பாய்தான் 2000-ம் ஆண்டில் பிரதமராக இருந்தபோது, சரக்கு சேவை வரியை பற்றி ஆராய ஒரு அதிகாரம் படைத்த குழுவை நியமித்தார். அதிலிருந்து இதன் பயணம் தொடங்கியது. பின்பு நிதி மந்திரியாக இருந்த ப.சிதம்பரம் சரக்கு சேவைவரிக்கான அறிவிப்பை வெளியிட்டார். பிரணாப் முகர்ஜி நிதி மந்திரியாக இருந்தபோது இதற்கான அரசியல் சட்டத்திருத்த மசோதாவை தாக்கல் செய்தார். அதிலிருந்து பல தடை-களைத்-தாண்டி சரக்கு சேவை வரி இப்போது அமலுக்கு வந்துள்ளது.

பாராளுமன்றத்தில் நடந்த விழாவில் பிரதமர் நரேந்திரமோடி பேசும்போது, 'பகவத் கீதையில் 18 அத்தியாயங்கள் இருக்கிறது. அதுபோல, சரக்கு சேவை வரி கவுன்சில் நடத்திய 18 கூட்டங்களை தாண்டித்தான் இந்த மசோதா நிறைவேறி இருக்கிறது. சர்தார் வல்லபாய் படேல் இந்தியாவில் உள்ள 500 மாகாணங்களை சுதந்-திரத்திற்கு பிறகு இணைக்காவிட்டால், இன்று ஒரேநாடாக இந்தியா இருந்திருக்க முடியுமா?. அதைப்போலத்தான் 29 மாநிலங்களிலும், 7 யூனியன் பிரதேசங்களிலும் விதிக்கப்பட்ட 500 வகையான வரிகள் இன்றைய தினம் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளது' என்று மிக அருமையான உவமைகளுடன் பேசினார்.

சரக்கு சேவை வரியால் பல நன்மைகள் இருக்கிறது என்றாலும், சில பாதிப்புகளும் இருப்பதை யாராலும் மறுத்து விட முடியாது. பல பொருட்களின் விலை குறைந்தி-ருந்தாலும், பல பொருட்கள், சேவைகளின் வரி அதிகரித்தி-ருக்கிறது. 1,211 பொருட்கள் மற்றும் சேவைகள் 0, 5, 12, 18, 28 என்ற 5 வரி விகிதங்களுக்கு சரக்கு சேவைவரி உட்பட்டு இருக்கிறது. மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பல பொருட்கள், சேவைகளின் வரி உயர்ந்திருப்பதால், சாதாரண குடும்பங்களின் மாத பட்ஜெட்டில் துண்டுவிழும் நிலை உருவாகியுள்ளது.

எல்லாமே கம்ப்யூட்டர் மயம் என்ற நிலையில், 60 சதவீதத்திற்கு மேல் சிறுதொழில் செய்பவர்களுக்கு கம்ப்யூட்டர் என்பது பழக்கமான ஒன்று அல்ல. இதுவே இறுதி முடிவாக மத்திய அரசாங்கம் மேற்கொள்ளாமல், எந்தெந்த வரிகளால் பொதுமக்களுக்கு பாதிப்பு, இழப்பு இருக்கிறது என்பதையும், எந்தெந்த வகையில் வியாபாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் நடைமுறை சிக்கல் இருக்கிறது என்பதையும், இன்னமும் தொடர்ந்து தீவிரமாக ஆராய்ந்து வரப்போகும் கால கட்டங்களில் அவற்றை நீக்கி சரக்கு சேவைவரி கட்டுவது ஒரு இனிமை, எளிமை, சுகம் என்றவகையில், இரு தரப்புக்கும் ஒரு நல்ல நிலைமையை உருவாக்குவதில்தான் சரக்கு சேவைவரியின் வெற்றியே இருக்கிறது.

Next Story