ஒப்பந்த பண்ணை விவசாயம்


ஒப்பந்த  பண்ணை  விவசாயம்
x
தினத்தந்தி 13 July 2017 9:30 PM GMT (Updated: 13 July 2017 2:03 PM GMT)

1957–ம் ஆண்டு வெளிவந்த ‘எங்க வீட்டு மகாலட்சுமி’ என்ற திரைப்படத்தில், ‘நம்ம நாட்டுக்கு பொருத்தம், நாமே நடத்தும் கூட்டுப்பண்ணை விவசாயம், பட்ட பாட்டுக்கு தகுந்த ஆதாயம்’ என்று ஒரு பாடல் வரும்.

1957–ம் ஆண்டு வெளிவந்த ‘எங்க வீட்டு மகாலட்சுமி’ என்ற திரைப்படத்தில், ‘நம்ம நாட்டுக்கு பொருத்தம், நாமே நடத்தும் கூட்டுப்பண்ணை விவசாயம், பட்ட பாட்டுக்கு தகுந்த ஆதாயம்’ என்று ஒரு பாடல் வரும். கூட்டுப்பண்ணை விவசாயம் என்பது ஒரு கூட்டுமுயற்சி. பல விவசாயிகள் ஒன்றாக சேர்ந்து ஒரு பண்ணை அமைத்து, ஒற்றுமையோடு பாடுபட்டால், உழைப்புக்கேற்ப ஆதாயம் கிடைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. எங்கிருந்தோ பஞ்சாப் மாநிலத்தில் இருந்து வந்த விவசாயிகள், ராமநாதபுரம் மாவட்டத்தில் வல்லந்தை கிராமத்தில் சீமை கருவேல மரமாய், பாறைகளால் பரந்து விரிந்துகிடந்த இடத்தை 10 ஆண்டுகளுக்கு முன்பு 6 பேர் சேர்ந்து, ஏக்கர் ரூ.10 ஆயிரம் வீதம் 400 ஏக்கர் நிலத்தை வாங்கி, விவசாயத்தை தொடங்கினர். ‘இந்த மாவட்டத்திலேயே தண்ணீர் இல்லை, இதில் பாறைகளும், சீமை கருவேல மரங்களும் மண்டிக்கிடக்கிறது. இதில் என்ன விவசாயம் செய்யப்போகிறார்கள்?’ என்று எல்லோரும் ஏளனமாகப்பார்த்தார்கள். ஆனால், அந்த 6 பேரும் சேர்ந்து சீமை கருவேல மரங்களை வேரோடு அகற்றி, மண்டிக்கிடந்த பாறைகளையெல்லாம் எடுத்து வெளியேபோட்டு உழுது, தென்னை, மா, கொய்யா, நெல்லி, முந்திரி, பாதாம், சப்போட்டா, நாவல் மரங்களை நட்டு, நிலத்தடிநீரை எடுத்து சொட்டுநீர் பாசனத்தை பயன்படுத்தி வளமாக்கினர்.

3 ஆண்டுக்குப்பிறகு மேலும் விவசாய நண்பர்களை சேர்த்து, 500 ஏக்கர் நிலத்தை அக்கம்பக்கத்து கிராமங்களில் வாங்கிப்போட்டு, இப்போது காய்கறி செடிகள், வெள்ளரி, பூசணி, பரங்கிக்காய், தர்பூசணி, பப்பாளி போன்றவற்றையும் சாகுபடி செய்து லாபம் ஈட்டிவருகிறார்கள். வெறும் பொட்டல்காடாக கிடந்த இடம், ஒற்றுமையான விவசாயத்தால் இப்போது பொன்விளையும் பூமியாக மாறிவிட்டது. தங்கள் இடத்திலேயே ஆழ்குழாய் கிணறுகளை ஆங்காங்கே தோண்டி முழுக்க முழுக்க சொட்டுநீர் பாசனம் மூலம் விவசாயம் செய்து வெற்றிகண்டிருக்கிறார்கள். இதுபோல, ஒப்பந்த பண்ணை முறையை வளர்க்கவேண்டும் என்பது திட்டக்குழுக்கு பதிலாக அமைக்கப்பட்டிருக்கும் ‘நிதி ஆயோக்’ அமைப்பின் பரிந்துரை ஆகும். அரசாங்கத்தின் சொத்தாகவும், தனியார் சொத்தாகவும் ஏராளமான தரிசுநிலங்கள் பொட்டல் பூமியாக உள்ளன. இந்த நிலங்களையெல்லாம் ஒப்பந்த பண்ணை விவசாயம் மூலம் விவசாயிகளுக்கு குத்தகையாக கொடுத்து, ஒப்பந்த பண்ணைகள் தொடங்குவதற்கு ஏதுவாக ஒரு நகல் மசோதாவை நிதி ஆயோக் தயாரித்திருக்கிறது. இதனால் நில உரிமையாளர்களோ, அரசாங்கமோ, நிலம் நம் கையைவிட்டு போய்விட்டது என்று பயப்படத்தேவையில்லை. முதலிலேயே எத்தனை ஆண்டுகளுக்கு என்று நீண்டகால ஒப்பந்தம் மேற்கொள்ளப்படுகிறது. இத்தகைய ஒப்பந்த பண்ணை முறையை, கால்நடை வளர்ப்பு, மீன் பண்ணை போன்றவற்றுக்கும் பயன்படுத்தமுடியும்.

தமிழ்நாட்டை எடுத்துக்கொண்டால், மொத்த நிலப்பரப்பில் 7.7 சதவீதம் தரிசு நிலமாகத்தான் இருக்கிறது. அதாவது, 9 லட்சத்து 98 ஆயிரம் ஹெக்டேர் நிலங்கள் தரிசாக உள்ளன. இதுதவிர, பயிரிடுவதற்கு ஏற்ப உள்ள தரிசுநிலங்கள் 3 லட்சத்து 25 ஆயிரம் ஹெக்டேர் இருக்கின்றன. பயிர் சாகுபடி செய்யமுடியாது, ஆனால் கால்நடை, மீன்வளர்ப்பு போன்ற விவசாயம் இல்லாத மற்ற தொழில்கள் செய்ய பயன்படுத்தப்படும் நிலங்களாக 4 லட்சத்து 89 ஆயிரம் ஹெக்டேர் நிலங்கள் தமிழ்நாட்டில் இருக்கின்றன. தமிழக அரசு இந்த நிலங்களில் எல்லாம் வேலைவாய்ப்பு இல்லாத, நிலமற்ற இளைஞர்கள், விவசாயிகள் மற்றும் மகளிர் ஒன்றாக சேர்ந்து ஒப்பந்த பண்ணை முறையில் விவசாயம் மற்றும் விவசாயம் அல்லாத மற்ற தொழில்களை செய்யவும், அதற்கேற்ற வகையில் சட்டப்பூர்வமான வழிமுறைகள், நிதி உதவிகள் அளிக்கவும் முன்வரவேண்டும்.

Next Story