பாராளுமன்றத்தில் தமிழ்நாட்டின் குரல் ஓங்கி ஒலிக்கட்டும்


பாராளுமன்றத்தில்  தமிழ்நாட்டின் குரல்  ஓங்கி  ஒலிக்கட்டும்
x
தினத்தந்தி 16 July 2017 9:30 PM GMT (Updated: 2017-07-16T17:16:27+05:30)

பாராளுமன்றத்திலும் சரி, சட்டசபையிலும் சரி, உறுப்பினர்கள் தங்கள் தொகுதிகளுக்கான திட்டங்களை பேசுகிறார்களா? என்று எதிர்பார்ப்பது வழக்கம்.

பாராளுமன்றத்திலும் சரி, சட்டசபையிலும் சரி, உறுப்பினர்கள் தங்கள் தொகுதிகளுக்கான திட்டங்களை பேசுகிறார்களா? என்று எதிர்பார்ப்பது வழக்கம். அதிக அழுத்தம் கொடுத்து பேசும் உறுப்பினர்களால்தான் தங்களை தேர்ந்தெடுத்த தொகுதி மக்களுக்கு நன்மைகளை பெற்றுத்தரமுடியும். பாராளுமன்ற கூட்டத்தை எடுத்துக்கொண்டால், ஒவ்வொரு மானியக்கோரிக்கைகளிலும் பேசும் உறுப்பினர்கள் தங்கள் தொகுதிக்காகவும் பேசலாம். ஒட்டுமொத்த தமிழகத்தின் நன்மைக்காகவும் வாதாடி, போராடி பெறலாம். பொதுவாக தமிழகத்தின் நலன் என்று வரும்போது ஒட்டுமொத்த தமிழகமே ஒன்றாக கொதித்தெழுந்து நிற்கவேண்டும். இதில் கட்சிவேறுபாடு பார்க்கக்கூடாது என்பதுதான் தமிழக மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. தற்போது பாராளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி ஆகஸ்டு 11–ந்தேதி வரை நடக்கிறது. இந்த கூட்டத்தொடரில் எம்.பி.க்கள் எந்தவகையில் செயல்படவேண்டும்? என்று தமிழக அரசு எதிர்பார்க்கிறது என்ற கருத்துகளை தெரிவிக்கும்வகையில், முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தங்கள் அணி எம்.பி.க்களை நேரில் அழைத்து பேசியிருப்பது நிச்சயமாக மிகவும் வரவேற்புக்குரியதும், பாராட்டுக்குரியதும் ஆகும்.

கடந்த 1–ந்தேதி முதல், நாடு முழுவதும் ‘ஜி.எஸ்.டி.’ என்று கூறப்படும் சரக்கு, சேவைவரி அமலுக்கு வந்துள்ளது. இந்த சரக்குசேவை வரியால் பல பொருட்களின் விலை உயர்ந்திருப்பது பொதுமக்களுக்கு பெரியபாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. டெலிபோன், செல்போன் பில் உள்பட பல சேவைகளின் வரிகளும் உயர்த்தப்பட்டுள்ளன. பெண்கள் பயன்படுத்தும் ‘சானிட்டரி நாப்கினுக்கு’ 12 சதவீதவரி விதித்திருப்பது பெண்கள் மத்தியில் பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஜவுளித்தொழிலுக்கு விதிக்கப்பட்டுள்ள சரக்கு சேவைவரியால் தமிழகத்தில் ஜவுளித்தொழில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பட்டாசு, தீப்பெட்டிக்கு போடப்பட்டுள்ள வரியும் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுபோல, சரக்கு சேவை வரியால் எந்தெந்த பொருட்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது? என்பதை நிதி மந்திரியின் கவனத்திற்கு கொண்டுவந்து, பாராளுமன்றத்தில் உங்கள் குரல் ஒலிக்கவேண்டும் என்று முதல்–அமைச்சர் கூறியிருக்கிறார். காவிரி மேலாண்மைவாரியம், காவிரிநீர் ஒழுங்காற்று குழு அமைக்கப்படவேண்டிய அவசியம், நெடுவாசல், கதிராமங்கலம் போராட்டங்கள் போன்ற தமிழக மக்களின் பல்வேறு பிரச்சினைகள் குறித்து வாதாடி மத்திய அரசாங்கத்தின் கவனத்தை ஈர்க்கவேண்டும். மீனவர்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுவேண்டும் என்பதுபோல தமிழகத்தின் பல கோரிக்கைகளை இந்தமுறை அழுத்தமாக பேசவேண்டும் என்று கூறியிருக்கிறார்.

தமிழக அரசு சார்பில், மத்திய அரசாங்கத்திற்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கைகளில், எத்தனை கோரிக்கைகள் நிலுவையில் இருக்கிறது என்ற விவரங்கள் அரசின் சார்பில் பட்டியலிட்டு வழங்கப்படும். இதையெல்லாம் பாராளுமன்றத்தில் பேசவேண்டும் என்று கூறியிருக்கிறார். நிச்சயமாக இது வரவேற்கத்தக்கது. தமிழக அரசு நீண்ட நெடுங்காலமாக பல கோரிக்கைகளை மத்திய அரசாங்கத்திற்கு விடுத்துள்ளது. எந்தெந்த திட்டங்கள் தமிழக அரசால், மத்திய அரசாங்கத்திடம் கேட்கப்பட்டும் இன்னும் நடவடிக்கை இல்லாமல் இருக்கிறது?, போதிய நிதிஒதுக்கீடு இல்லாத திட்டங்கள் எவை?, எவை? என்பதுபோன்ற விவரங்களை பட்டியலிட்டு அ.தி.மு.க. உறுப்பினர்களுக்கு மட்டுமல்லாமல், தமிழக அரசின் சார்பில் அனைத்து கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் தமிழக அரசு வழங்கவேண்டும். இதுபோல, கேரளா மாநிலத்தில் நிறைவேற்றப்படவேண்டிய ரெயில்வே திட்டங்களுக்காக அந்தமாநில எம்.பி.க்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக ரெயில்வே உயர்அதிகாரிகளை சந்திப்பதுபோல, ஒவ்வொரு துறையிலும் உயர்அதிகாரிகளை சந்திக்க தமிழக எம்.பி.க்கள் அனைவரும் ஒற்றுமையோடு சென்று தமிழகத்திற்கு நலம்பயக்கும் திட்டங்களை செயல்படுத்துவதற்கு ஒருமித்த முயற்சிகளை எடுக்கவேண்டும். அனைத்துகட்சி உறுப்பினர்களும் கட்சிபாகுபாடு பார்க்காமல், ஒட்டுமொத்த தமிழகத்தின் நலன் என்பதை மட்டுமே மனதில்கொண்டு, ‘இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே’ என்று மத்திய அரசாங்கம் உணரும் வகையில், ஒற்றுமையோடு இருந்து தமிழக எம்.பி.க்களின் குரல் ஓங்கி ஒலிக்கவேண்டும்.

Next Story