தொழில் வளர்ச்சியிலும், வேலைவாய்ப்பிலும் கவனம் செலுத்த வேண்டிய தமிழ்நாடு


தொழில்  வளர்ச்சியிலும்,  வேலைவாய்ப்பிலும் கவனம்  செலுத்த வேண்டிய  தமிழ்நாடு
x
தினத்தந்தி 17 July 2017 8:30 PM GMT (Updated: 17 July 2017 2:54 PM GMT)

முன்பெல்லாம் தமிழ்நாட்டில்தான் தொழில்வளர்ச்சி அபரிமிதமாக இருந்தது. வேலைவாய்ப்பும் ஆண்டுக்கு ஆண்டு பெருகிக்கொண்டே இருந்தது என்ற பெருமையை பெற்றுவந்த தமிழ்நாடு, இப்போது அந்த இடத்தில் இருந்து இறங்கி கீழே சென்றுகொண்டிருக்கிறது என்ற கவலைக்குரிய தகவல்கள் பல ஆய்வுகளில் வந்துகொண்டிருக்கின்றன.

முன்பெல்லாம் தமிழ்நாட்டில்தான் தொழில்வளர்ச்சி அபரிமிதமாக இருந்தது. வேலைவாய்ப்பும் ஆண்டுக்கு ஆண்டு பெருகிக்கொண்டே இருந்தது என்ற பெருமையை பெற்றுவந்த தமிழ்நாடு, இப்போது அந்த இடத்தில் இருந்து இறங்கி கீழே சென்றுகொண்டிருக்கிறது என்ற கவலைக்குரிய தகவல்கள் பல ஆய்வுகளில் வந்துகொண்டிருக்கின்றன. நடந்துகொண்டிருக்கும் சட்டசபை கூட்டத்தொடரில் சில தினங்களுக்கு முன்பு எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், அரசை நோக்கி டெல்லியில் நடைபெற்ற நிதி ஆயுக்தா அமைப்பின் தலைமை செயல் அதிகாரி, மாநிலத்தில் தொழில் வளர்ச்சியை பெருக்குவதிலும், முதலீடுகளை ஈர்ப்பதிலும் தமிழக அரசு கடைசி இடத்தில் இருப்பதாகவும், தொழில் தொடங்க உகந்தநிலை தமிழ்நாட்டில் இல்லாத ஒரு சூழ்நிலை நிலவுவதாகவும் கூறியதாக ஒரு பகிரங்க குற்றச்சாட்டை கூறினார். இதற்கு பதில் அளித்த மின்துறை அமைச்சர் தங்கமணி, ‘இன்றளவும் தமிழ்நாடுதான் வளர்ச்சி அடைந்த மாநிலம். தொழில்துறையில் தமிழ்நாடுதான் முதல் இடத்தில் இருக்கிறது. கடந்த 6 ஆண்டுகளில் 1 லட்சத்து 3 ஆயிரம் அன்னிய முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. தொழில் முனைவோரை ஈர்ப்பதில் தமிழகம்தான் முதல் இடத்தில் இருக்கிறது’ என்று பதில் அளித்தார்.

ஆனால், அன்னியநாட்டு நேரடி முதலீடு இந்தியாவுக்குள் மேற்கொள்வது பற்றிய வர்த்தகம் மற்றும் மேம்பாட்டு தொடர்பான ஐக்கியநாடுகள் மாநாடு, தொழில்கொள்கை மற்றும் வளர்ச்சித்துறை, வர்த்தக அமைச்சகம் ஆகியவை தந்துள்ள தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வு அறிக்கையில் தரப்பட்டிருக்கும் தகவல்கள் மிகவும் அதிர்ச்சி அளிக்கத்தக்கதாக இருக்கிறது. கடந்த 2016–ம் ஆண்டு ஏறத்தாழ ரூ.2 லட்சத்து 80 ஆயிரம் கோடிக்கு இந்தியாவில் அன்னியநாட்டு நேரடி முதலீடுகள் செய்யப்பட்டுள்ளன. இதில் தமிழ்நாட்டில் மிகக்குறைவான அளவு அதாவது, மொத்த முதலீடுகளில் 2.9 சதவீத அளவுக்குத்தான் அன்னியநாட்டு நேரடி முதலீடுகள் நடந்திருக்கின்றன. ஏறத்தாழ ரூ.8,500 கோடிக்கு கடந்த ஆண்டு அன்னிய நாட்டு முதலீடுகள் தமிழ்நாட்டில் செய்யப்பட்டுள்ளன. கடந்த 3 ஆண்டுகள் கணக்கை எடுத்துக்கொண்டால், 2016–ல் தான் குறைந்த அளவு அன்னியநாட்டு முதலீடுகள் செய்யப்பட்டுள்ளன. வளர்ந்த மாநிலங்களில் தமிழ்நாடு 18–வது இடத்தில் இருக்கிறது. 6 இடங்கள் கீழே போய்விட்டன. மராட்டியம், டெல்லி, குஜராத், கர்நாடகம், ஆந்திரா போன்ற மாநிலங்களில் தமிழ்நாட்டைவிட அதிகமாக அன்னியநாட்டு முதலீடுகள் செய்யப்பட்டுள்ளன. இதன்மூலம் அங்கு நிச்சயமாக தொழில்வளர்ச்சி பெருகும். தொழிற்சாலைகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். அந்த மாநிலங்களின் வளம் பெருகும். அதேநேரத்தில் தமிழ்நாட்டில் உற்பத்தி வளர்ச்சி குறிப்பிடும்படி இல்லை. இது ஒருபக்கம் கவலை அளிக்கிறது என்றால், மற்றொருபக்கம் கடந்த ஒரு ஆண்டில் தமிழ்நாட்டில் மொத்த வேலைவாய்ப்புகள் 12 சதவீதம் குறைந்திருப்பதாக மற்றொரு ஆய்வு தெரிவிக்கிறது.

கொல்கத்தாவில் 40 சதவீதமும், ஆமதாபாத்தில் 20 சதவீதமும், மும்பையில் 15 சதவீதமும், ஐதராபாத்தில் 5 சதவீதமும், பெங்களூருவில் 3 சதவீதமும் வேலைவாய்ப்பு அதிகரித்துக்கொண்டிருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் ஏற்கனவே இருந்த வேலைவாய்ப்புகளைவிட 12 சதவீதம் குறைந்துவிட்டது என்று அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது. அரசு சார்பில் இந்த ஆய்வுகள் எல்லாம் தவறு, நாம் முன்னேறி இருக்கிறோம் என்று சொன்னாலும், அண்டை மாநிலங்களை நோக்கி பல தொழிற்சாலைகள் செல்வதை யாராலும் மறுத்துவிட முடியாது. காரணங்கள் ஆயிரம் சொல்லலாம், ஆனால், மற்ற மாநிலங்களில் தொழில் வளர்ச்சியும், வேலைவாய்ப்பும் அதிகரித்துக் கொண்டிருக்கும் சூழ்நிலையில், தமிழ்நாட்டில் குறைந்துபோக இனியும் அனுமதிக்கக் கூடாது. என்னென்ன காரணங்கள் தொழில் வளர்ச்சிக்கும், வேலைவாய்ப்பு பெருக்கத்திற்கும் தடையாக இருக்கிறதோ? அதை புரிந்து கொண்டு, அவற்றையெல்லாம் களைவதுதான் முதல் வேலை. மற்றவையெல்லாம் தேவையில்லை என்ற குறிக்கோளோடு அரசு செயல்பட வேண்டும்.


Next Story