ரஜினிகாந்தா?, கமல்ஹாசனா? யார் முந்தப்போகிறார்கள்?


ரஜினிகாந்தா?, கமல்ஹாசனா? யார்  முந்தப்போகிறார்கள்?
x
தினத்தந்தி 20 July 2017 9:30 PM GMT (Updated: 2017-07-20T23:00:59+05:30)

இந்த ஆண்டு தமிழக அரசு மானியக் கோரிக்கைகளுக்கான சட்டசபை கூட்டத்தொடர் 24 நாட்கள் நடந்துமுடிந்தன. சட்டசபை கூட்டம் மக்கள் மனதில் பெரியதாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

ந்த ஆண்டு தமிழக அரசு மானியக் கோரிக்கைகளுக்கான சட்டசபை கூட்டத்தொடர் 24 நாட்கள் நடந்துமுடிந்தன. சட்டசபை கூட்டம் மக்கள் மனதில் பெரியதாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஆனால், சட்டசபைக்கு வெளியே அரசியல் களம் அனல் பறக்கத்தொடங்கிவிட்டது. ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், அ.தி.மு.க. 3 அணிகளாக பிரிந்துள்ளநிலையில், அ.தி.மு.க. தொண்டர்களிடையே ஒரு குழப்பமான நிலையே நிலவிவருகிறது. இந்த சூழ்நிலையை பயன்படுத்திக்கொண்டு அரசியலுக்குள் நுழைய ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் தீவிரமாக யோசித்து வருகிறார்கள். மேலும் முடிவுக்கு வருவதை எட்டிவிட்டார்கள் என்பது சமீபகாலங்களாக அவர்களின் பேச்சில் இருந்தே தெரிகிறது. சினிமா துறையில் இருந்து இதுவரையில் எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன், டி.ராஜேந்தர், பாக்யராஜ், சரத்குமார், விஜயகாந்த், கார்த்திக் என்று நடிகர்கள் அரசியல் கட்சிகளை தொடங்கினாலும் எல்லோராலும் ஜொலிக்க முடியவில்லை. சிலர் தொடங்கிய கட்சிகள் முளையிலேயே பட்டுப்போய்விட்டன.

1996–ம் ஆண்டிலிருந்தே இதோ வருகிறார்!, அதோ வருகிறார்! என்று நடிகர் ரஜினிகாந்த் பற்றி பேச்சு வந்தது. ஆனால், இதுகுறித்து திட்டவட்டமாக எந்தக்கருத்தையும் சொல்லாவிட்டாலும், கடந்த மே மாதம் ரசிகர்களுடன் போட்டோ எடுக்கும் நிகழ்ச்சியில் முதல் முதலாவதாக, ‘நான் ஒருவேளை அரசியலுக்கு வரவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால், பணம் சம்பாதிக்கும் நோக்கில் இருக்கும் ஆட்களை பக்கத்தில் சேர்க்கவேமாட்டேன்’ என்று முதல்நாளும், அதற்கு அடுத்தநாள் ‘போர் வரும்போது பார்த்துக்கொள்வோம்’ என்றும் கூறினார். ரஜினிகாந்த் அரசியலுக்குள் நுழைவார் என்று இருவேறு கருத்துகள் இருந்தநிலையில், ஏற்கனவே ரஜினிகாந்த் அந்தக்கூட்டத்தில் ‘சிஸ்டம் கெட்டுப்போய்விட்டது, ஜனநாயகம் கெட்டுப்போயிருக்கிறது. ஒரு மாற்றத்தை கொண்டுவரவேண்டும்’ என்று கூறினார். இப்போது ஒரு பேட்டியில் கமல்ஹாசன் திடீரென, ‘சிஸ்டம் கெட்டுப்போய்விட்டது என்று நான் முன்பே சொல்லியிருக்கிறேன். அரசின் அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்துவிட்டது’ என்று வெளிப்படையாகவே சொன்னபிறகு, எல்லோருடைய பார்வையும் கமல்ஹாசன் பக்கம் திரும்பியது. கமல்ஹாசன் கருத்துக்கு அ.தி.மு.க. தரப்பிலும், பா.ஜ.க. தரப்பிலும் மிகக்கடுமையான எதிர்க்கருத்துகள் கூறப்பட்டன.

கமல்ஹாசன் தகவல் தொழில்நுட்பத்தை, அதிலும் குறிப்பாக டுவிட்டரை அதிகம் பயன்படுத்துகிறார். கடந்த 18–ந்தேதி அன்று இரவு ‘‘தோற்றிருந்தால் போராளி, முடிவெடுத்தால் யாம் முதல்வர்’’ என்று வெளிப்படையாகவே எழுதிவிட்டார். ஆக, ‘முடிவெடுத்தால் நான் முதல்வர்’ என்பதை கூறிய கமல்ஹாசன் முடிவெடுத்துவிட்டார் என்பதை அடுத்தநாள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருக்கிறார். தன் ரசிகர்களுக்கு டுவிட்டர் மூலம் மீண்டும் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ‘ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல், காசுக்கு விலைபோகாத வாக்காளர்களும் என்று கூறி, அரசுத்துறைகளில் உள்ள ஊழல் ஆதாரங்களை இணையதளம் மூலம் அரசுக்கு அனுப்பும்படி கேட்டிருக்கிறார்’. ஆக, அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. முதல்–அமைச்சரே கமல்ஹாசனுக்கு பதில் சொல்லி கருத்துகளை தெரிவித்திருக்கிறார். மொத்தத்தில், ரஜினிகாந்தா?, கமல்ஹாசனா?, யார் முதலில் அரசியலுக்கு வரப்போகிறார்கள்? என்பதுதான் இன்றைய சூழ்நிலையில் மக்களிடையே ஒரு பெரிய பரபரப்பான எதிர்பார்ப்பாக இருக்கிறது. அரசியல் அரங்கில் இப்போது அனைத்து அரசியல் கட்சிகளும், கமல்ஹாசனின் அரசியல் பிரவேசம் பற்றியே விமர்சனம் செய்துவருகிறார்கள். தற்போது கமல்ஹாசனின் குரல்தான் ஓங்கி ஒலிப்பதாலும், அவருடைய ஒவ்வொரு கருத்துக்கும் அ.தி.மு.க., பா.ஜ.க. உள்பட பல கட்சிகளின் எதிர்க்கருத்துகள் மாறிமாறி மின்னல் வேகத்தில் வருவதாலும், இந்த அரசியல் பந்தயத்தில் புதிதாக கட்சித்தொடங்க நினைப்போரின் பந்தயத்தில் முதல் குதிரையாக நிற்பது கமல்ஹாசன்தான். இனி, நிச்சயமாக அரசியல் அரங்கில் ஒவ்வொருநாளும் கமல்ஹாசனின் தீப்பொறி கிளம்பும் அறிக்கைகளும், எதிர் அணிகளிலிருந்து தாக்குதல் அறிக்கைகளும் நிச்சயம் வரும்.

Next Story