டாஸ்மாக்குக்கு அனுமதி, ‘கள்’ளுக்கு இல்லையா?


டாஸ்மாக்குக்கு அனுமதி, ‘கள்’ளுக்கு இல்லையா?
x
தினத்தந்தி 21 July 2017 9:30 PM GMT (Updated: 2017-07-21T19:16:48+05:30)

தமிழ்நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கடுமையான வறட்சியின் காரணமாக, பனைமரங்கள் பெருமளவு அழிக்கப்பட்டு வருகின்றன.

மிழ்நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கடுமையான வறட்சியின் காரணமாக, பனைமரங்கள் பெருமளவு அழிக்கப்பட்டு வருகின்றன. செங்கல் சூளைகளுக்காக பனைமரத்தை வெட்டிக்கொடுத்தால் கையில் உடனடியாக சில நூறு ரூபாய்கள் கிடைக்கும் என்ற காரணத்தினாலும் கிராமப்புறங்களில் ஏராளமான பனைமரங்கள் வெட்டப் படுகின்றன. இப்போது பனைமரத்தில் இருந்து பெருமளவில் வருமானம் ஈட்டமுடியாத நிலையில், கருகிப் போய்க் கொண்டிருக்கும் மரங்களுக்கு பணம் செலவழித்து தண்ணீர்விட்டு உயிரூட்டும் முயற்சியிலும் யாரும் ஈடுபடவில்லை.

பனைமரங்கள் அழிவதை தடுக்க சிறப்பு திட்டங்கள் நிறைவேற்றப்பட வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தன், பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஆகியோர் நீண்ட நெடுநாட்களாக குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். சென்னை நகர மேயராக சைதை துரைசாமி இருந்தபோது, சென்னையில் கூவம், பக்கிங்காம் கால்வாய்களின் ஓரங்கள் உள்பட பல இடங்களில் 25 லட்சம் பனை மரங்கள் நடுவதற்கு ஒரு மாபெரும் திட்டம் தீட்டி நிதியும் ஒதுக்கினார். ஆனால், இப்போது அந்த திட்டத்தில் பெரிய தொய்வு ஏற்பட்டுள்ளது. இதுபோல,

3 அடி வளர்ந்த பனைமர கன்றுகளையும் நடுவதற்கு திட்டம் தீட்டினார். அதுவும் இப்போது செயல்படுத்தப்படவில்லை. 50 ஆண்டுகளுக்கு முன்பு 30 கோடி பனைமரங்கள் இருந்த தமிழ்நாட்டில், தற்போது 5 கோடி பனைமரங்கள் மட்டுமே உள்ளன என்று கணக்கிடப்பட்டுள்ளது. இப்போதுள்ள வறட்சியில் இந்த எண்ணிக்கையும் நிச்சயமாக குறைந் திருக்கும். வேர் முதல் நுனி வரை பனையின் ஒவ்வொரு பகுதியும் மக்களுக்கு பயன்தருவதாகும். இதனால்தான், கேட்டதை கொடுக்கும் தேவலோக மரமான ‘கற்பகத் தரு’வுக்கு ஒப்பிட்டு, பனைமரத்தை ‘‘பூலோகத்து கற்பகத்தரு’’ என்றும் முன்னோர்கள் வர்ணித்தார்கள். செலவு இல்லாமல் வருமானத்தை மட்டுமே தொடர்ந்து வாரிவழங்கும் அற்புத மரம்தான் பனைமரம். பனைமரத்தில் இருந்து முழு வருமானத்தையும் இன்னமும் தமிழ்நாட்டில் பெறவில்லை.

பனைமரத்தில் இருந்து அதிக வருமானம் விவசாயி களுக்கு கிடைக்க வேண்டும் என்றால், ‘கள்’ இறக்க அனுமதிக்கொடுத்தால் மட்டுமே முடியும். அண்டை மாநிலங்களில் எல்லாம் ‘கள்’ இறக்க, விற்க அனுமதி இருக்கிறது. தமிழ்நாட்டில் உள்நாட்டில் தயாராகும் அயல் நாட்டு மதுபானங்களான விஸ்கி, பிராந்தி, ரம், பீர், ஒயின் போன்றவற்றை டாஸ்மாக் கடைகள் மூலம் விற்க அனுமதி அளிக்கப்படுகிறது. ஆனால், உள்நாட்டில் விவசாயிகளுக்கு வருமானம் தரும் கள்ளுக்கு மட்டும் அனுமதி இல்லை. மதுபான வகைகளில் ஆல்கஹால் அளவு எவ்வளவு இருக்கிறது என்று பார்த்தால், விஸ்கியில் 40 முதல்

50 சதவீதமும், பிராந்தியில் 40 முதல் 45 சதவீதமும், ஒயினில் 11 முதல் 13 சதவீதமும், ரம்மில் 42.8 சதவீதமும், பீர் என்ற மதுபானத்தில் 4 முதல் 6 சதவீதமும் இருக்கிறது. ஆனால், கள்ளில் 4.5 சதவீதம் மட்டுமே இருக்கிறது. இந்த பாரபட்சம் தேவையே இல்லை. எனவே, அதிக போதைதராத பல்வேறு சத்துகள் அடங்கிய ‘கள்’ளுக்கு அனுமதி அளித்தால், பனைமரம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு வருமானம் கிடைக்கும். பனை ஏறும் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பும், வருமானமும் பெருகும். மேலும், விஸ்கி, பிராந்தியைவிட, ‘கள்’ குடிப்பதற்கு குறைந்த செலவுதான் ஆகும். பீகாரில் பூரண மதுவிலக்கு கொண்டுவந்த நேரத்தில் கூட, கள்ளுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டது. இப்படி பல கணக்குகளை கூட்டிக்கழித்து பார்த்தால், ஒன்று பூரண மதுவிலக்கு கொண்டுவரவேண்டும். இல்லை யென்றால் பிராந்தி, விஸ்கிக்கு மட்டும் அனுமதி கொடுத்து விட்டு, கள்ளுக்கு மட்டும் அனுமதி மறுப்பது சரியல்ல. கள்ளுக்கும் அனுமதி கொடுத்துவிடலாம். அழிந்து வரும் பனைமர வளத்தை பாதுகாக்க அதுதான் சிறந்த வழி.

Next Story