வருமான வரி வேண்டாம்


வருமான  வரி  வேண்டாம்
x
தினத்தந்தி 23 July 2017 10:52 PM GMT (Updated: 2017-07-24T04:22:36+05:30)

நாட்டின் பொருளாதார சீர்திருத்தத்தை மேம்படுத்த, வரி சீர்திருத்தத்தை கொண்டு வருவதில் பிரதமர் நரேந்திரமோடி தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.

நாட்டின் பொருளாதார சீர்திருத்தத்தை மேம்படுத்த, வரி சீர்திருத்தத்தை கொண்டு வருவதில் பிரதமர் நரேந்திரமோடி தீவிரமாக ஈடுபட்டுள்ளார். பல ஆண்டுகளாக பேசப்பட்டும், முயற்சி செய்யப்பட்டும் வந்த சரக்கு சேவைவரி, (ஜி.எஸ்.டி.) ஜூலை 1–ந்தேதி முதல் அமலுக்கு வந்துவிட்டது. ஆண்டுக்கு ரூ.20 லட்சத்துக்கு குறைவாக விற்பனை செய்யும் வணிக நிறுவனங்கள் சரக்கு சேவை வரிகட்டுவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதுபோல, ரூ.75 லட்சம் வரை விற்பனை செய்யும் வியாபாரிகள், உற்பத்தியாளர்கள், ஓட்டல் அதிபர்கள் முறையே 1, 2, 5 சதவீதம் வரிக்கட்டவேண்டிய நிலையில் இருக்கிறார்கள். மற்றவர்களை பொறுத்தமட்டில், 0, 5, 12, 18, 28 என்ற விகிதத்தில் வரிகட்டும் நிலையில் இருக்கிறார்கள். இந்த சரக்கு சேவைவரியினால் காலப்போக்கில் மத்திய–மாநில அரசுகளின் வருவாய் கணிசமாக உயரும் என்றும், வரிகட்டாமல் இனி யாரும் தப்பமுடியாத ஒரு பெரிய வலைதான் சரக்கு சேவைவரி என்றும் கருதப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.1½ கோடிவரை விற்பனை செய்யும் நிறுவனங்கள் பொதுமக்களிடமிருந்து வசூலிக்கும் சரக்கு சேவைவரியில் 90 சதவீதம் மாநில அரசின் கஜானாவிற்கும், 10 சதவீதம் மத்திய அரசாங்க கஜானாவிற்கும் செல்லும். ரூ.1½ கோடிக்குமேல் வர்த்தகம் நடக்கும் நிறுவனங்களில் வசூலிக்கப்படும் சரக்கு சேவைவரியில் 50 சதவீதம் மத்திய அரசாங்கத்திற்கும், 50 சதவீதம் மாநில அரசாங்கத்திற்கும் ஒதுக்கீடு செய்யப்படும்.

இந்த சரக்கு சேவைவரியை அமலுக்கு கொண்டுவருவதற்கு மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி தலைமையில், மாநில அமைச்சர்களை கொண்ட சரக்கு சேவைவரி கவுன்சில் 18 முறைகளும், அதிகாரிகள் 175 கூட்டங்களை கூட்டியும், சரக்கு சேவைவரி விகிதம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அடுத்து பிரதமர், ஆடிட்டர்கள் கூட்டத்தில் பேசும்போது, ‘வருமானவரி’ பற்றி குறிப்பிட்டிருக்கிறார். கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள ஆடம்பர பங்களாக்களை பெரிய நகரங்களில் வைத்திருப்பவர்கள் நிறையபேர் வருமானவரி கட்டுவதில்லை. இதுபோல, 8 லட்சம் டாக்டர்கள், 8 லட்சம் கணக்காளர்கள், 2 கோடி என்ஜினீயர்கள் மற்றும் வர்த்தக படிப்பு படித்தவர்கள் மற்றும் 2.18 கோடி பொதுமக்கள் என்று ஏராளமானவர்கள் கடந்த ஆண்டு விடுமுறையை கழிக்க வெளிநாடுகளுக்கு சென்றிருக்கிறார்கள். ஆனால், 125 கோடி மக்கள் தொகை கொண்ட நமது நாட்டில், ஆண்டு வருமானம் ரூ.10 லட்சத்திற்கும் மேல் உள்ளவர்கள் 32 லட்சம் பேர்தான். இதை யாராலும் நம்பமுடியுமா?. இதுதான் கசப்பான உண்மை.

இந்த 32 லட்சம் பேரில், பெரும்பாலும் அரசு அல்லது தனியார் நிறுவனங்களில் மாதசம்பளம் வாங்குபவர்கள்தான் என்று பேசியிருக்கிறார். புகழ்வாய்ந்த விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டின் சொன்ன ஒரு கருத்தை சரக்கு சேவைவரியை அறிமுகப்படுத்திய நாளில் வெளியிட்டார். உலகிலேயே புரிந்துகொள்வதற்கு மிகவும் கடினமான ஒன்று என்றால், அது வருமான வரிதான் என்று அவர் பேசியதை குறிப்பிட்டு, இப்போது அவர் உயிரோடு இருந்தால் முழுமையான பலன்தராத இந்த வரிகளைப்பார்த்து என்ன சொல்லியிருப்பார்? என்று குறிப்பிட்டிருக்கிறார். ஆக, இவ்வளவு ஆண்டுகள் ஆகியும் வருமானவரி கட்டவேண்டியவர்கள் அனைவரையும் அந்த வளையத்திற்குள் கொண்டுவர முடியவில்லை. எனவே, வருமானவரி நிச்சயமாக எதிர்பார்க்கும் பலன் தராது. சரக்கு சேவைவரியில் முழுமையான வெற்றிக்கிடைத்துவிட்டது. வருமானவரியால் மக்கள் மீது மேலும் சுமையை ஏற்றவேண்டாம். ஏற்கனவே கடந்த பாராளுமன்ற தேர்தலின்போது சில பா.ஜ.க. தலைவர்கள் கூறியதுபோல, வருமானவரியை முழுமையாக ரத்து செய்துவிட்டு, அதற்கு பதிலாக பரிமாற்ற வரியை கொண்டுவந்தால் சரக்கு சேவை வரிபோல முழுமையான வெற்றி கிடைக்கும். இப்போது நேரடி வரிகளை திருத்தியமைக்கும் முயற்சியை தொடங்கப்போகும் மத்திய அரசாங்கம் வருமான வரியை கைவிட்டுவிட்டு, ஏமாற்ற முடியாத வருமானம் தரும் மற்ற வரிகளில் கவனம் செலுத்தலாம்.

Next Story