‘வந்தே மாதரம்’ பாடவேண்டுமா?


‘வந்தே  மாதரம்’ பாடவேண்டுமா?
x
தினத்தந்தி 26 July 2017 9:30 PM GMT (Updated: 26 July 2017 1:08 PM GMT)

பொதுவாக தேசபக்தியோ, மொழி உணர்வோ, அதை திணிப்பதால் மட்டும் யாருக்கும் வளர்ந்துவிடாது. இத்தகைய உணர்வுகளை தட்டியெழுப்பினால்தான், தானாக ஒவ்வொருவர் உள்ளத்திலும் தோன்றும்.

பொதுவாக தேசபக்தியோ, மொழி உணர்வோ, அதை திணிப்பதால் மட்டும் யாருக்கும் வளர்ந்துவிடாது. இத்தகைய உணர்வுகளை தட்டியெழுப்பினால்தான், தானாக ஒவ்வொருவர் உள்ளத்திலும் தோன்றும். அந்தவகையில்தான் சில மாதங்களுக்கு முன்பு, அனைத்து சினிமா திரையரங்குகளிலும் படம் தொடங்குவதற்கு முன்பு தேசியகீதம் இசைக்கப்படவேண்டும் என்று உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு இன்றளவும் விமர்சனங்களுக்கு உள்ளாகியிருக்கிறது. பல சினிமா திரையரங்குகளில் தேசியகீதம் இசைக்கப்படும்போது எழுந்து நிற்கவேண்டும். அமைதியாக நிற்கவேண்டும் என்பது கூட தெரியாமல், பலர் உட்கார்ந்துகொண்டும், பேசிக்கொண்டுமிருப்பதை பார்க்கும்போது மனம் கொதிக்கிறது. நல்லவேளையாக தமிழ்நாட்டில் எந்த நிகழ்ச்சிகள் என்றாலும், பள்ளிக்கூடங்கள் மற்றும் கல்லூரிகளில் நடக்கும் விழாக்கள் என்றாலும், தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது எல்லோரும் எழுந்துநின்று மரியாதை செலுத்துவது தமிழ்த்தாயின் புகழுக்கு மேலும் மகுடம் சூட்டுவதுபோல் இருக்கிறது. ஆக, தற்போது முக்கியமான நிகழ்ச்சிகள் என்றால் தொடக்கத்தில் ‘தமிழ்த்தாய் வாழ்த்து’, இறுதியில் தேசிய கீதம் இசைக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது.

இந்தநிலையில், கூடுதலாக ஒருபாடல் அதாவது ‘வந்தே மாதரம்’ பாடலை அனைத்து பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் உள்ள கல்விநிறுவனங்களில் வாரம் ஒருமுறை திங்கள் அல்லது வெள்ளிக்கிழமையன்று பாடவேண்டும் என்றும், அனைத்து அரசு அலுவலகங்கள், நிறுவனங்கள், தனியார் அலுவலகங்கள், தொழிற்சாலைகள் போன்றவற்றில் மாதம் ஒருமுறை பாடவேண்டும் என்றும், சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி எம்.வி.முரளிதரன் பிறப்பித்த உத்தரவு பெரிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. சுதந்திரம் அடைவதற்கு முன்பு மேற்கு வங்காளத்தை சேர்ந்த பக்கிம் சந்திரா சட்டோபாத்யாயா என்ற கவிஞர், வங்காளமொழியில் 1882–ம் ஆண்டு எழுதிய ‘ஆனந்த மடம்’ என்ற நாவலில் ‘வந்தே மாதரம்’ பாடலை எழுதினார். இந்தப்பாடல் சுதந்திர தாகத்தை ஊட்டிவிடும் வகையில் அமைந்துள்ள பாடலாகும். பின்பு இந்தப்பாடல் சமஸ்கிருதத்தில் மொழிபெயர்க்கப்பட்டது. அதன்பிறகு பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது. 1950–ல் மத்திய அரசாங்கம் இந்த பாடலின் முதல் 2 பத்திகளை தேசிய பாடலாக அங்கீகரித்தது. இந்தப்பாடலை ஆங்கிலம் மற்றும் தமிழில் மொழியாக்கத்தை அரசு இணையதளங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் வெளியிடவேண்டும். இதுகுறித்து தலைமைச் செயலாளர் தனியாக ஒரு உத்தரவை பிறப்பிக்கவேண்டும் என்றும் நீதிபதி தனது ஆணையில் குறிப்பிட்டுள்ளார்.

இந்தப்பாடலில் இந்து சமய கடவுள்களை குறிப்பிட்டு வணங்குகிறோம் என்றவகையில் வரிகள் இருப்பதால், பிற மதத்தினரும், பகுத்தறிவாளர்களும் இந்தப்பாடலை பாடமுடியாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர். சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கும், தமிழ்நாட்டில் சில எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. இந்தப்பாடலின் தமிழ்மொழியாக்கத்தைப் பார்த்தால் நிச்சயமாக யார் மனதிலும் நிற்பதுபோல் இல்லை. மேலும், ‘வந்தே மாதரம்’ என்றால், காங்கிரஸ் கட்சி கூட்டங்கள் தொடங்கும்போது முதலில் சொல்வது ‘வந்தே மாதரம்’ என்பதுதான். இந்தளவில்தான் ‘வந்தே மாதரம்’ என்ற வார்த்தை பலருக்கு தெரியும். இந்தத்தீர்ப்பில் ஏதாவது தனிநபரோ?, நிறுவனமோ? இந்தப்பாடலை பாடுவதற்கோ, இசைப்பதற்கோ முடியாத பட்சத்தில், தகுதியான காரணங்கள் இருந்தால் அவர்களை கட்டாயப்படுத்தவோ, நிர்ப்பந்தப்படுத்தவோ கூடாது என்று நீதிபதி கூறியிருக்கிறார். ஆக, ஒரு இடத்தில் இந்தப்பாடலை விரும்பாதவர்கள் இருந்தால் அவர்கள் மட்டும் உட்கார்ந்து, மற்றவர்கள் பாடிக்கொண்டிருப்பது என்பது அவ்வளவு சரியாக இருக்காது. மேலும், ஏற்கனவே தமிழ்த்தாய் வாழ்த்து பாடிக்கொண்டிருக்கும்போது, கூடுதலாக இந்தப்பாட்டையும் பாடவேண்டும் என்றால், அது பல்வேறு சர்ச்சைகளை கிளப்பும். இதையெல்லாம் கருத்தில்கொண்டு, தமிழக அரசு நீதிமன்றத்தை மீண்டும் அணுகி கட்டாயம் என்பதல்ல, விரும்புகிறவர்கள் மட்டும் ‘வந்தே மாதரம்’ பாடலை பாடிக்கொள்ளலாம் என்றவகையில் ஒரு தெளிவான விளக்கத்தை நீதிமன்றத்திடம் இருந்து பெறவேண்டும் என்பதுதான் எல்லோருடைய எதிர்பார்ப்பாக இருக்கிறது.

Next Story