ஒரே நாளில் விவாகரத்தும், மறுமணமும்


ஒரே நாளில்  விவாகரத்தும்,  மறுமணமும்
x
தினத்தந்தி 27 July 2017 9:30 PM GMT (Updated: 27 July 2017 1:30 PM GMT)

இப்போதெல்லாம் தலைவர்கள் ‘டுவிட்டரில்’ செய்தி களை அனுப்புவது, ‘‘அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா’’ என்ற நிலைக்கு ஆளாகியுள்ளது.

ப்போதெல்லாம் தலைவர்கள் ‘டுவிட்டரில்’ செய்தி களை அனுப்புவது, ‘‘அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா’’ என்ற நிலைக்கு ஆளாகியுள்ளது. அந்த வகையில், நேற்று பீகார் முதல்–மந்திரி நிதிஷ்குமார் தனது அமைச்சரவையோடு சேர்த்து தானும் ராஜினாமா செய்தவுடன், பிரதமர் நரேந்திரமோடி சில நிமிடங்களில் ‘டுவிட்டரில்’ ஒரு செய்தி அனுப்பியிருந்தார். ‘‘ஊழலுக்கு எதிரான போரில் சேர்ந்துள்ள நிதிஷ்குமாருக்கு வாழ்த் துகள்!. 125 கோடி மக்களும் இதை வரவேற்று, இந்த நாட்டின் ஒளிமயமான எதிர்காலத்திற்காக அவரது நேர்மைக்கும், குறிப்பாக பீகாருக்கும் ஆதரவு தெரிவிக் கிறார்கள். அரசியல் வேறுபாடுகளை மறந்து, ஒன்றாக எழுந்துநின்று ஊழலுக்கு எதிராக போர் நடத்தும் நேரம் இது’’ என்று ‘டுவிட்டரில்’ தெரிவித்திருந்தார். நடந்த தேர்தல்களில் வடமாநிலங்கள் எல்லாவற்றிலும் பா.ஜ.க. கால் பதித்திருந்தது. 2015–ம் ஆண்டு பீகாரில் நடந்த சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க.வினால் ஆட்சியை பிடிக்க முடியவில்லை. 1996–ம் ஆண்டு முதல் 2013–ம் ஆண்டுவரை பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்திருந்தவர் நிதிஷ்குமார். 2013–ம் ஆண்டு நரேந்திரமோடிதான் பா.ஜ.க.வின் பிரதம வேட்பாளர் என்று அறிவிக்கப்பட்டவுடன், முதல் முதலில் எதிர்ப்பு குரல் கொடுத்தவர் நிதிஷ்குமார். அந்த ஆண்டு ஐக்கிய ஜனதாதளம், பா.ஜ.க.வுடன் தன்கட்சிக்கு உள்ள உறவை முறித்துக்கொண்டது.

2015–ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலின்போது, காங்கிரஸ், லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரீய ஜனதாதளம் மற்றும் பல கட்சிகளோடு சேர்ந்து ஒரு மெகா கூட்டணி அமைத்து ஐக்கிய ஜனதாதளம் போட்டியிட்டது. தேர்தலுக் குப்பின் நிதிஷ்குமார் முதல்–மந்திரியாகவும், லாலு பிரசாத்தின் மகன் தேஜஸ்வி யாதவ் துணை முதல்–மந்திரி யாகவும், மற்றொரு மகன் தேஜ்பிரதாப் சுகாதாரத்துறை மந்திரியாகவும் பொறுப்பேற்று அமைச்சரவை அமைக் கப்பட்டது. இந்தநிலையில், லாலு பிரசாத் யாதவ் ரெயில்வே மந்திரியாக இருந்தபோது, ரெயில்வே துறைக்கு சொந்தமான சில ஓட்டல்களை குத்தகைக்கு விட்டதில் முறைகேடு நடந்ததாக அவர் மீதும், அவரது மகள் மிசா பாரதி, துணை முதல்–மந்திரி தேஜஸ்வி ஆகியோர் மீதும் சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது. தேஜஸ்வி துணை முதல்–மந்திரி பதவியில் இருந்து விலகவேண்டும் என்றும், அவரிடம் இதுகுறித்து விளக்கமும் கேட்டதையொட்டி, இருகட்சிகளுக்கும் இடையே பெரிய புகைச்சல் ஏற்பட்டது. தேஜஸ்வி ராஜினாமா செய்ய மறுத்ததைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் மாலை நிதிஷ்குமார் ராஜினாமா செய்தார்.

ஆனால், அவர் ராஜினாமா செய்த ஒருசில நிமிடங்களில் பிரதமர் ‘டுவிட்டரில்’ செய்தி அனுப்பியதும், பா.ஜ.க.வின் மாநிலத்தலைவர் நித்தியானந்தா ராய், இப்போது துணை முதல்–மந்திரியாக பொறுப்பேற்றிருக்கும் சுஷில்குமார் மோடி ஆகியோர் கவர்னர் மாளிகைக்கு சென்று நிதிஷ்குமாருக்கு ஆதரவு தெரிவித்து கடிதத்தை கொடுத்தனர். 1,000, 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று திடீரென்று அறிவிக்கப்பட்டவுடன் அப்போதே நிதிஷ்குமார் பாராட்டினார். அடுத்து ஜனாதிபதி தேர்தல் நடந்த நேரத்தில், பீகாரின் கவர்னராக இருந்த ராம்நாத் கோவிந்தை ஆதரித்தார். ஏற்கனவே இப்படி பல கணக்கு களை கூட்டிக்கழித்து பார்க்கும்போது, நிதிஷ்குமார் ராஜினாமா செய்ததும், 24 மணி நேரத்துக்குள் பா.ஜ.க.வின் ஆதரவோடு மீண்டும் முதல்–மந்திரியானதும், ஏற்கனவே திட்டமிட்ட நாடகம் அரங்கேறியுள்ளது என்று அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். பீகாரிலும் பா.ஜ.க. மீண்டும் தடம்பதித்துவிட்டது. 24 மணி நேரத்துக்குள் ‘விவாகரத்து –மறுமணம்’ என்பதெல்லாம் ஏற்கனவே திட்டமிட்டு இருக்கப்படாவிட்டால், நிச்சயமாக சாத்தியமில்லை என்பது நடுநிலையாளர்களின் கருத்தாகும். ‘மகாகத் பந்தன்’ என்ற பெயரில் பா.ஜ.க.வுக்கு எதிரான கட்சிகள் கூட்டணி அமைத்து, 2019–ல் நடக்கும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடநினைக்கும் நிலையில், இது காங்கிரசுக்கு கிடைத்த சறுக்கல்தான்.

Next Story