மீனவர் பிரச்சினைக்கு பிரதமர் காட்டிய தீர்வு


மீனவர் பிரச்சினைக்கு  பிரதமர்  காட்டிய  தீர்வு
x
தினத்தந்தி 28 July 2017 9:30 PM GMT (Updated: 28 July 2017 2:27 PM GMT)

தமிழக மீனவர் பிரச்சினை தீர்க்கப்படாமலேயே இருக்கிறது. சர்வதேச எல்லைத்தாண்டி சற்றுதூரம் சென்றாலே இலங்கை கடற்படை பிடித்துக்கொண்டு போய்விடுகிறது.

மிழக மீனவர் பிரச்சினை தீர்க்கப்படாமலேயே இருக்கிறது. சர்வதேச எல்லைத்தாண்டி சற்றுதூரம் சென்றாலே இலங்கை கடற்படை பிடித்துக்கொண்டு போய்விடுகிறது. இந்த நிலையைப்போக்க வேண்டு மென்றால், தமிழக மீனவர்கள் இலங்கை கடற்பகுதிக்குள் மீன்பிடிக்க செல்லாமல் அந்தமான், நிக்கோபார், லட்சத்தீவு போன்ற பகுதிகளுக்குச்சென்று சில நாட்கள் தங்கியிருந்து ஆழ்கடலில் மீன்பிடிக்க செல்வதற்கான வசதிகளை, அதற்குரிய படகுகளை அவர்களுக்கு வழங்கவேண்டும் என்பதுதான் சரியான தீர்வாக இருக்கும். ஏனெனில், ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மாவட்ட மீனவர்கள்தான் அடிக்கடி இவ்வாறு சர்வதேச கடல் எல்லையைத்தாண்டி மீன்பிடிக்கும்நிலை ஏற்பட்டு விடுகிறது.

தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் பல நாட்கள் தொலைதூரம் சென்று ஆழ்கடலில் மீன்பிடித்து விட்டு வருவதால், அவர்கள் எந்தப்பிரச்சினைகளுக்கும் ஆட்படாமல் இருக்கிறார்கள். இதுபோன்ற நிலை மற்ற மீனவர்களுக்கும் ஏற்படாமல் இருக்கவேண்டுமென்றால், அவர்களுக்கு தொலை தூரம் சென்று ஆழ்கடலில் மீன்பிடிக்கும் வகையில் புதிய படகுகள் கட்டுவதற்கும், மீன்பிடி சாதனங்கள் வழங்குவதற்கும் நிதி உதவிகள் செய்து அதற்குரிய பயிற்சிகள் அளிக்கப்படவேண்டும் என்று பல ஆண்டுகளாகவே தமிழக அரசு சார்பில் வற்புறுத்தப்பட்டு வந்தது. ஏறத்தாழ ரூ.1,500 கோடி நிதி உதவியை மத்திய அரசாங்கத்திடம் தமிழக அரசு கோரிக்கொண்டே இருக்கிறது. இவ்வளவு நாளும் ரப்பராக இழுத்துக்கொண்டிருந்த கோரிக்கைக்கு அப்துல் கலாம் தேசிய நினைவகத்தை திறந்து வைப்பதற்காக ராமேசுவரம் வந்த பிரதமர் நரேந்திரமோடி ஒரு தீர்வு கண்டிருக்கிறார். அனைவருடைய மனமும் மகிழும் வண்ணம் ‘நீலப்புரட்சி’ திட்டத்தின்கீழ் மீனவர்களுக்கு ஆழ்கடல் மீன்பிடித்திட்டத்தை தொடங்கிவைத்து வெறும் பேச்சளவில் நிற்காமல், சில மீனவர்களுக்கு அதற்குரிய ஒப்புதல் கடிதங்களையும் வழங்கினார். இந்த திட்டத்தின்கீழ் செதில் வலையோடு கூடிய 2 ஆயிரம் ஆழ்கடல் டியூனா மீன்பிடி படகுகள் வழங்கப்படும். இந்தத்திட்டம் 3 ஆண்டுகளில் நிறை வேற்றப்பட இருக்கிறது. முதல்கட்டமாக இந்த ஆண்டு 500 மீனவர்களுக்கு இவ்வாறு ஆழ்கடல் மீன்பிடி படகு தொழிலில் ஈடுபடுவதற்காக உதவித்தொகை வழங்க மத்திய அரசாங்கம் ரூ.200 கோடியும், தமிழக அரசு ரூ.86 கோடியும் ஒதுக்கியுள்ளது. ஒவ்வொரு படகும் கட்டுவதற்கு ரூ.80 லட்சம் செலவாகும். இதில், மத்திய அரசாங்கம் ரூ.40 லட்சம் மானியமாக வழங்கும். ரூ.16 லட்சம் மாநில அரசாங்கம் மானியமாக வழங்கும். மற்றொரு ரூ.16 லட்சம் வங்கிக்கடன் வாங்க அரசு உதவிசெய்யும். மீதமுள்ள ரூ.8 லட்சம் மட்டுமே மீனவர்களின் பங்களிப்பாக இருக்கும்.

இப்போது இலங்கை கடற்படையால் பிடித்துவைக்கப் பட்டிருக்கும் படகுகளின் உரிமையாளர்களுக்கு முன்னுரிமை கொடுத்து, படகுகள் கட்டும் பணி அடுத்த மாதம் தொடங்கப்பட இருக்கிறது. மீனவர்களுக்கான கடன் உதவியை நாங்கள் தருகிறோம் என்று பாண்டியன் கிராம வங்கி முன்வந்துள்ளது. இந்த மீனவர்களுக்கான பயிற்சிக் காக தூத்துக்குடியில் உள்ள மீன்வள கல்லூரி, கன்னியா குமரியில் ஒரு பயிற்சி மையத்தை தொடங்குகிறோம் என்று சொல்லி இருக்கிறது. ஆக, கடந்த 8 ஆண்டுகளாக தீர்க்கப்படாத பிரச்சினையை பிரதமர் தீர்த்துவிட்டார். ராமேசுவரத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்டவுடன் நேற்றே சிறையில் வாடும் 77 தமிழக மீனவர்களை விடுதலை செய்ய இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவிட்டது. முழுமையாக பிரதமர் அறிவித்த இந்தத் திட்டம் நிறைவேற 3 ஆண்டுகளாகும். அதுவரையில், இலங்கை அரசாங்கம் இப்போதுபோல கெடுபிடிகாட்டாமல், மென்மையான போக்கை கையாளவேண்டும். அத்தகைய நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கமும், இலங்கை கடற்படையும் மேற்கொள்ளவும், பறிமுதல் செய்யப் பட்டுள்ள படகுகளை திருப்பித்தரவும் இலங்கை அரசாங்கத் தோடு தூதரக உறவை பயன்படுத்தி மத்திய அரசாங்கம் வலியுறுத்தவேண்டும்.

Next Story