பதவி இழந்த பாகிஸ்தான் பிரதமர்


பதவி  இழந்த  பாகிஸ்தான்  பிரதமர்
x
தினத்தந்தி 30 July 2017 9:30 PM GMT (Updated: 30 July 2017 12:19 PM GMT)

1947–ம் ஆண்டு முதல் பாகிஸ்தான், இந்தியாவை தன் சகோதர நாடாக ஒருபோதும் நினைத்தது இல்லை. காஷ்மீர் பிரச்சினையில் தேவையில்லாமல் தலையிடுவது, எல்லைப்புறங்களில் தீவிரவாதிகளை ஊடுருவவைப்பது என்று இந்தியாவுக்கு பல தொல்லைகள் கொடுத்தனர்.

1947–ம் ஆண்டு முதல் பாகிஸ்தான், இந்தியாவை தன் சகோதர நாடாக ஒருபோதும் நினைத்தது இல்லை. காஷ்மீர் பிரச்சினையில் தேவையில்லாமல் தலையிடுவது, எல்லைப்புறங்களில் தீவிரவாதிகளை ஊடுருவவைப்பது என்று இந்தியாவுக்கு பல தொல்லைகள் கொடுத்தனர். அங்கு ஜனநாயகம் இருந்தாலும், ராணுவத்தின் கைதான் ஓங்கி இருக்கிறது. இதுவரையில், பாகிஸ்தானில் 17 பிரதமர்கள் ஆட்சியில் இருந்திருக்கிறார்கள். ஆனால், ஒருவர்கூட 5 ஆண்டுகளை நிறைவு செய்ததில்லை. பூட்டோ பிரதமராக இருந்தபோது 5 ஆண்டுகள் நிறைவு செய்துவிடுவார் என்று எல்லோரும் எதிர்பார்த்தநிலையில், அவர் பாராளுமன்றத்தை கலைத்துவிட்டு முன்கூட்டியே தேர்தல் நடத்த வழிவகுத்தார். அடுத்து தற்போது பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீப் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் தேர்தல் நடக்க இருக்கும் நிலையில், நான்கு ஆண்டுகளை நிறைவு செய்துவிட்டார். இனி நிச்சயமாக 5 ஆண்டுகளை நிறைவுசெய்து மூன்று முறை பிரதமராக இருந்தவர், இந்தமுறை ஐந்து ஆண்டுகளும் பதவியில் இருந்துவிட்டார் என்றவகையில், இதுவரையில் எந்த பிரதமருக்கும் இல்லாத ஒரு சாதனையை படைப்பார் என்று எல்லோராலும் எதிர்பார்த்தநிலையில், பாகிஸ்தானின் உச்சநீதிமன்றத்தில் நீதிபதி ஆசிப் சயிது கோசா தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட பெஞ்ச், ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான தீர்ப்பில் அவர் பதவி இழப்பது மட்டுமல்ல, இனி அவர் வாழ்நாள் முழுவதும் தேர்தலில் போட்டியிட முடியாது என்று ஒரு அதிரடி தீர்ப்பையும் வழங்கியது, உலகம் முழுவதுமே பாகிஸ்தானை ஆச்சரியமாக பார்க்க வைத்துவிட்டது.

வடஅமெரிக்காவுக்கும், தென்அமெரிக்காவுக்கும் இடையே இருக்கும் நாடு பனாமா. இந்த நாட்டில் உள்ள மோசாக் பொன்சேகா என்ற சட்டநிறுவனத்தில் சர்வதேச புலனாய்வு பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஒரு ஊழல் பட்டியலை கசிய வைத்தது. இதுதான் உலகம் முழுவதும் ‘பனாமா லீக்’ என்ற பெயரை பெற்றது. அதில், நவாஸ் ஷெரீப் மீது நேரடியாக குற்றம் சுமத்தாவிட்டாலும், அவரது மகன்களான ஹசன், உசைன், மகள் மரியம் ஆகியோர் மீது வெர்ஜின் தீவுகளில் மூன்று வெளிநாட்டு கம்பெனிகள் தொடங்கியிருக்கிறார்கள். இதுபோல, லண்டனில் நான்கு அடுக்குமாடி குடியிருப்புகளை வாங்கியிருக்கிறார்கள் என்பதுபோன்ற ஊழலை அம்பலப்படுத்தியது. இதையொட்டி, பாகிஸ்தான் தெஹ்ரீக்–இ–இன்சாத் கட்சியின் தலைவரான கிரிக்கெட் வீரர் இம்ரான்கான் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில்தான் நீதிபதிகள் இந்த தீர்ப்பை வழங்கினர். மின்னல் வேகத்தில் தேர்தல் ஆணையமும், அவரை தகுதி இழக்க செய்து அறிவிப்பு வெளியிட்டது.

இதுவரையில் கோர்ட்டு தீர்ப்புப்படி, பதவி விலகியவர் என்றால், பாகிஸ்தான் மக்கள் கட்சி பிரதமராக இருந்த யூசுப் ராசா கிலானியும், நவாஸ் ஷெரீப்பும் தான். மற்றவர்கள் எல்லோரும் ராணுவ புரட்சியால் தூக்கி எறியப்பட்டிருக்கிறார்கள். பாகிஸ்தானில் இதுபோன்ற சூழ்நிலையில் உடனடியாக ராணுவம் ஆட்சியை கைப்பற்றும். ஆனால், இந்த முறை அடுத்த பிரதமர் பதவி ஏற்க வழிவகை செய்யும் வகையில் ஜனநாயகம் அப்படியே இருப்பதுதான் ஆச்சரியம் அளிக்கிறது. ஊழல் வழக்கில் ஒரு பிரதமரை பதவி நீக்கம் செய்ய வைத்த பாகிஸ்தான் உச்சநீதிமன்றம், இதுபோல தீவிரவாதிகள் வி‌ஷயத்திலும் வேகமாக செயல்பட்டு தண்டனை வழங்கவேண்டும் என்பதே நடுநிலையாளர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. இந்தியாவை பொறுத்தமட்டில், பாகிஸ்தான் எத்தகைய நல்லுறவை கொண்டிருக்கப்போகிறது என்பதை யாராலும் அறுதியிட்டு சொல்ல முடியாது. ஏனெனில், அங்கு ஜனநாயகம் தழைக்கிறது என்று சொன்னாலும், ராணுவத்தின் கைதான் மேலோங்கி இருக்கிறது. பாகிஸ்தானின் உள்நாட்டு விவகாரம் என்றவகையில், இந்தியா இதில் தலையிடாமல், உடனடியாக கருத்து சொல்லாமல் இருப்பது நிச்சயமாக பாராட்டுக்குரியது.


Next Story