இடத்தை தேர்வு செய்வதற்கு இவ்வளவு தாமதமா?


இடத்தை தேர்வு செய்வதற்கு இவ்வளவு தாமதமா?
x
தினத்தந்தி 31 July 2017 8:30 PM GMT (Updated: 31 July 2017 1:29 PM GMT)

தமிழ்நாட்டிலும் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை தொடங்கப்பட வேண்டும் என்பது நீண்ட நெடுநாட்களாக மக்கள் மத்தியில் இருக்கும் ஒரு கோரிக்கையாகும்.

மிழ்நாட்டிலும் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை தொடங்கப்பட வேண்டும் என்பது நீண்ட நெடுநாட்களாக மக்கள் மத்தியில் இருக்கும் ஒரு கோரிக்கையாகும். அகில இந்திய மருத்துவ அறிவியல் நிலையம் என்று அழைக்கப்படும் எய்ம்ஸ் மருத்துவமனையில் மிகவும் உயர்தர மருத்துவ வசதிகள், மருத்துவக்கல்வி உண்டு. மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது கூட, எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து மருத்துவ நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர்.

தமிழ்நாட்டிலும் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை தொடங்கப்படும் என்ற அறிவிப்பு 2014–15–ம் ஆண்டு மத்திய அரசு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து 2014–ம் ஆண்டு ஜூன் 19–ந்தேதி தமிழக அரசிடம் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை அமைக்க மூன்று அல்லது நான்கு தகுதியான இடங்கள் தேர்வு செய்து அனுப்ப வேண்டும் என்று மத்திய அரசு கேட்டுக் கொண்டது. எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்பட வேண்டுமென்றால், தமிழக அரசு 200 ஏக்கர் நிலத்தை இலவசமாக தரவேண்டும், அங்கு போதிய மின்சார வசதி, தண்ணீர் வசதி, ரெயில் போக்குவரத்து, சாலைபோக்குவரத்து, விமான போக்குவரத்து வசதிகள் இருக்கவேண்டும் என்பதுபோல சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தன. சரியாக ஒருமாதத்தில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா, பிரதமருக்கு ஒரு கடிதம் எழுதினார். அந்த கடிதத்தில், காஞ்சீபுரம் மாவட்டம் செங்கல்பட்டு, புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுகோட்டை நகரம், தஞ்சாவூர் மாவட்டத்தில் செங்கிப்பட்டி, ஈரோடு மாவட்டத்தில் பெருந்துறை, மதுரை மாவட்டத்தில் தோப்பூர் ஆகிய இடங்களில் மத்திய அரசு கூறும் அனைத்து வசதிகளும் இருக்கின்றன. எனவே, ஏதாவது ஒரு இடத்தில் தொடங்கலாம் என்று எழுதியிருந்தார். அதன்பிறகு, 2015–ம் ஆண்டு ஏப்ரல் 22–ந்தேதி முதல் 25–ந் தேதிவரை மத்திய குழு தமிழ்நாட்டுக்கு வந்து இந்த 5 இடங்களையும் நேரில் பார்த்து ஆய்வு செய்தது. ஆனால், தொடர்ந்து இங்கும் அங்கும் கடிதப் போக்குவரத்துகளும், கோரிக்கைகள் எழுப்புவதும், பதில் வருவதுமாக, இன்னும் முடிவு எடுக்கப்படாத சூழ்நிலை நிலவுகிறது.

இந்தநிலையில், ஜெயலலிதா மறைவுக்குப்பிறகு, 5 இடங்களிலுமே எங்கள் ஊரில்தான் இந்த மருத்துவமனை தொடங்க வேண்டும் என்று போராட்டங்கள் வலுத்தன. மதுரை மாவட்டத்தில் எங்கள் ஊரில் அமைக்காவிட்டால் பதவியை ராஜினாமா செய்து விடுவேன் என்று அமைச்சர் உதயகுமாரும், சில எம்.எல்.ஏ.க்களும் அறிவித்தனர். ஆக, எந்த ஊரில் எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்கப்படும் என்று முடிவெடுக்க காலம் தாழ்த்தப்பட்டு வந்தநிலையில், சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை  அமைச்சக  சார்பு  செயலாளர் கே.வினோத்குமார் தாக்கல் செய்த மனுவில், ‘மாநில அரசாங்கம்தான் ஒரு இடத்தை தேர்வு செய்து அனுப்பவேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கில் நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆகியோர் வழங்கிய தீர்ப்பில், ‘இன்று தமிழக அரசு மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பாக தமிழக அரசின் நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும்’ என்று திட்டவட்டமாக கூறியது. எந்த இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது என்பதை மத்திய அரசாங்கம் தான் முடிவெடுத்து அறிவிக்கவேண்டும் என்பது தமிழக அரசின் நிலைப்பாடு. யார் அறிவிப்பது? என்று இல்லாமல், மத்திய அரசாங்கமோ, மாநில அரசோ உடனடியாக இடத்தை தேர்வு செய்து அறிவிக்கவேண்டும். எந்த இடத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை வந்தாலும், அது தமிழகத்திற்கு நலம் பயக்கும் என்ற வகையில், மற்ற மாவட்டத்து மக்கள் அதை பெருந்தன்மையோடு ஏற்றுக் கொண்டு, தங்கள் மாவட்டத்தில் சென்னையில் உள்ள பல்நோக்கு மருத்துவமனை போன்ற ஒரு மருத்துவமனை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக அரசுக்கு விடலாம். எந்தவொரு திட்டம் என்றாலும், இனி இதுபோல தாமதம் ஏற்படக்கூடாது.

Next Story