தகுதி இல்லாதவர்களுக்கு கட்டாய ஓய்வு


தகுதி இல்லாதவர்களுக்கு கட்டாய  ஓய்வு
x
தினத்தந்தி 4 Aug 2017 9:30 PM GMT (Updated: 2017-08-04T18:02:06+05:30)

இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே பா.ஜ.க.வுக்கு பல்வேறு தேர்தல்களில் வெற்றி மீது வெற்றி என்று தொடர்ந்து வெற்றி கிடைத்து வந்திருக்கிறது.

ந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே பா.ஜ.க.வுக்கு பல்வேறு தேர்தல்களில் வெற்றி மீது வெற்றி என்று தொடர்ந்து வெற்றி கிடைத்து வந்திருக்கிறது. இதில், உத்தரபிரதேச மாநிலத்தில் கிடைத்த வெற்றிதான் மிகப் பெரிய வெற்றியாக கருதப்படுகிறது. 403 சட்டமன்ற உறுப்பினர்களை கொண்ட இந்த மாநிலத்துக்கான தேர்தல் 7 கட்டங்களாக கடந்த பிப்ரவரி 11–ந்தேதி முதல் மார்ச் 8–ந்தேதிவரை நடந்தது. உத்தரபிரதேச மாநில தேர்தலை ஒரு பெரிய சவாலாக நரேந்திர மோடி மேற்கொண்டு தீவிரமாக பிரசாரம் செய்தார். யாரும் எதிர்பார்க்காத வகையில், மொத்தமுள்ள 403 தொகுதிகளில் பா.ஜ.க. 312 இடங்களையும், அதன் கூட்டணி கட்சிகள்

13 இடங்களையும் கைப்பற்றின. யார் முதல்–மந்திரியாக வரப்போகிறார்? என்று எல்லோரும் எதிர்பார்த்த நேரத்தில், யாருமே எதிர்பார்க்காத பாராளுமன்ற உறுப்பினர் யோகி ஆதித்யநாத் முதல்–மந்திரியாக அறிவிக்கப்பட்டு, அவரும் பதவியேற்றார்.

யோகி ஆதித்யநாத் பதவியேற்ற முதல் நாளன்றே அதிரடியாக பல அறிவிப்புகளை வெளியிட்டார்.

ரூ.36 ஆயிரம் கோடி அளவுக்கு விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்தார். அதாவது, ரூ.1 லட்சம் வரையுள்ள சிறு, குறு விவசாயிகளின் கடன்களை ரத்து செய்தார். கோதுமையின் குறைந்தபட்ச ஆதாரவிலையை குவிண் டாலுக்கு ரூ.10 அதிகரித்து அறிவிப்பு வெளியிட்டார். பெண்களை ஈவ்டீசிங்கில் இருந்து பாதுகாக்க தனி போலீஸ் படை அமைத்தார். அரசு அலுவலகங்களில் பான்மசாலா, புகையிலை சுவைப்பதை முழுமையாக தடைசெய்தார். அரசு அலுவலகங்களில் ஊழியர்களின் வருகையை பதிவுசெய்ய ‘பயோ மெட்ரிக்’ முறையை அறிமுகப்படுத்தி னார். ஒருவாரத்திலேயே 50 அறிவிப்பு களை வெளியிட்டு தொடங்கிய அவர், தொடர்ந்து பல்வேறு அதிரடி அறிவிப்பு களை வெளியிட்டு வருகிறார். அதன் தொடர்ச்சியாக, இப்போது திறமையில்லாமல் செயல்படும் 50 வயதுக்கு மேற்பட்ட அரசு ஊழியர்களை பணியிலிருந்து வீட்டுக்கு அனுப்பும் வகையில் கட்டாய ஓய்வுத்திட்டத்தை நடை முறைபடுத்த தீவிரமாக பரிசீலித்து வருகிறார். இதுகுறித்து அனைத்துத்துறை தலைவர்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில், 50 வயதுக்கு மேற்பட்ட அரசு ஊழியர்களின் செயல்பாடுகள் எப்படி இருக்கிறது? என்பதை கண்காணித்து அனுப்பும்படி கேட்டுக்கொண்டி ருக்கிறார். யோகி ஆதித்ய நாத் உயர் அதிகாரிகளையும் விட்டுவைக்கவில்லை. சமீபத்தில் உயர் அதிகாரிகளோடு அவர் நடத்திய வீடியோ கான்பரன்சிங் கூட்டத்தில், அரசு நிர்வாகத்தை சீர்படுத்த திறமையாக செயல்படாத அதி காரிகள் போய்விடவேண்டும். யார் திறமையானவர்கள், யார் திறமையற்றவர்கள் என்பதெல்லாம் அரசுக்கு தெரியும் என்று கூறியிருக்கிறார். தற்போது உத்தரபிரதேசத்தில் ஏறத்தாழ ஒரு லட்சம் அரசு ஊழியர்களின் பணித்திறமை மதிப்பிடப்பட்டுக்கொண்டு இருக்கிறது.

இந்தத்திட்டத்தில், பல சாதகங்களும் இருக்கின்றன. பாதகங்களும் இருக்கின்றன. 50 வயதுக்குமேல் பணித் திறமை இல்லை என்று கட்டாய ஓய்வு கொடுத்துவிட்டால், அந்த ஊழியர்களின் வாழ்க்கையே அதன்பிறகு நிலை குலைந்துவிடும். குடும்பத்தில் முக்கிய செலவுகள் எல்லாம் 50 வயதுக்கு மேல்தான் அவர்களுக்கு வரும். அந்த வயதுக்குமேல் அவர்களால் வேறெங்கும்போய் வேலைத் தேடவும் முடியாது. உயர் அதிகாரிகளின் விருப்புவெறுப்பில் தான் பணித்திறமை மதிப்பீடு இருக்கும். அதேநேரத்தில் நமது பணி சிறக்கவில்லையென்றால் வீட்டுக்கு அனுப்பப் படுவது நிச்சயம் என்றவகையில் பணியாளர்கள் திறமை யாக செயல்படுவார்கள். அவர்களுடைய அன்றாட பணிகளில் ஒருகுறையும் இருக்காது. ஒட்டுமொத்த நிர்வாகமும் உயரிய நிலைக்கு வந்துவிடும். ஊழல் தலை யெடுக்காது. இப்படி நிறைகளும், குறைகளும் உள்ள இந்தத்திட்டம், எப்படி விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதை உத்தரபிரதேச மாநிலத்தில்தான் பார்க்க வேண்டும். அதன்பிறகுதான் மற்ற மத்திய–மாநில அரசுகள் இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்தலாமா?, செயல் படுத்தக்கூடாதா? என்பது குறித்து நிபுணர்களின் பரிந்துரைகள் கிடைப்பதற்கு ஏதுவாக இருக்கும்.


Next Story