கூவத்தூரான பெங்களூரு


கூவத்தூரான பெங்களூரு
x
தினத்தந்தி 6 Aug 2017 9:30 PM GMT (Updated: 2017-08-06T22:44:06+05:30)

தமிழ்நாட்டில் 6 மாதங்களுக்கு முன்பு நடந்த ‘‘கூவத்தூர் அரசியல்’’ இந்தியா முழுவதிலும் இன்றும் பேசப்பட்டு வருகிறது.

மிழ்நாட்டில் 6 மாதங்களுக்கு முன்பு நடந்த ‘‘கூவத்தூர் அரசியல்’’ இந்தியா முழுவதிலும் இன்றும் பேசப்பட்டு வருகிறது. அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூவத்தூரிலுள்ள சொகுசு விடுதியில் தங்கவைக்கப்பட்டு, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு மீது நம்பிக்கை தெரிவிப்பதற்கு சட்டசபைக்கு அழைத்து கொண்டுவரப்பட்டனர். அந்த பாணியை பின்பற்றித்தான் இப்போது குஜராத் மாநிலத்தில் இருந்து 44 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பெங்களூருவுக்கு கடந்த 28–ந் தேதி நள்ளிரவில் விமானம் மூலம் அழைத்து வரப்பட்டு, அங்கிருந்து நேராக ராம்நகர் மாவட்டம் பிடதியில் உள்ள ஈகிள்டன் சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பாராளுமன்ற மேல்–சபைக்கான 3 உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நாளை குஜராத் மாநிலத்தில் நடக்கிறது.

மேல்–சபைக்கு குஜராத் மாநிலத்தில் உள்ள 182 மொத்த  எம்.எல்.ஏ.க்களும்  ஓட்டளிக்க  வேண்டும். பா.ஜ.க.விற்கு 121 எம்.எல்.ஏ.க்களும், காங்கிரசுக்கு 57 எம்.எல்.ஏ.க்களும்,      தேசியவாத    காங்கிரசுக்கு   2  எம்.எல்.ஏ.க்களும்,   ஐக்கிய   ஜனதா   தளத்திற்கு  1 எம்.எல்.ஏ.யும், சுயேச்சையாக 1 எம்.எல்.ஏ.யும் இருந்தனர். ஒரு மேல்–சபை எம்.பி.யை தேர்ந்தெடுக்க வேண்டுமென்றால், 45 எம்.எல்.ஏ.க்கள் ஓட்டளிக்கவேண்டும். இந்த நிலையில், பா.ஜ.க. வேட்பாளர்களாக பா.ஜ.க.வின் தேசிய தலைவர் அமித் ஷாவும், மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானியும் போட்டியிடுகிறார்கள். காங்கிரஸ் கட்சி சார்பில் ஏற்கனவே 4 முறை டெல்லி மேல்–சபை உறுப்பினராக இருந்தவரும், சோனியா காந்தி குடும்பத்திற்கு மிகவும் நம்பிக்கைக்குரியவருமான அகமது பட்டேல் போட்டியிடுகிறார். ஆனால், காங்கிரஸ் கட்சியிலிருந்து முதலில் 3 எம்.எல்.ஏ.க்களும், தொடர்ந்து மேலும் 3 எம்.எல்.ஏ.க்களும் ராஜினாமா செய்தனர். இதனால் காங்கிரசின் பலம் 51 ஆக குறைந்தது. காங்கிரசில் இருந்து விலகிய பல்வந்த் ராஜ்புத் என்பவர் பா.ஜ.க.வில் இணைந்ததற்கு பிறகு அவரும் ஒரு வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். அவரும் இந்த தேர்தலில் போட்டியிடுகிறார். 3 வேட்பாளர்கள் மட்டுமே வெற்றிபெற முடியும் என்றநிலையில் 4 பேர் களத்தில் இறங்கியுள்ளனர். மேலும், காங்கிரசில் இருந்து விலகி சிலர் பா.ஜ.க.வில் சேரக்கூடும் என்ற பரபரப்பான தகவல் வெளியானது. இருப்பவர்களை கையில் வைத்துக்கொள்ளவேண்டும் என்ற நோக்கில், 44 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும் இப்போது சொகுசு விடுதியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மேலும், சிலர் கட்சிமாறி ஓட்டுபோடக்கூடும் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

இதுமட்டுமல்லாமல், போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஓட்டுப்போட விருப்பம் இல்லாதவர்கள், நோட்டாவுக்கு வாக்களிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றமும் இதை உறுதிப்படுத்திவிட்டது. தற்போது குஜராத் மாநிலத்தில் கனமழை பெய்து வருகிறது. 2 மாவட்டங்கள் பேரிடரால் பாதிக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. தங்கள் தொகுதியில் களத்தில் இறங்கி வெள்ள சேதத்தை பார்வையிட்டு, நிவாரண உதவிகளுக்கு ஏற்பாடு செய்யவேண்டிய எம்.எல்.ஏ.க்கள், இப்படி அங்கு இல்லாமல் சொகுசு விடுதியில் இருப்பது நிச்சயமாக ஏற்புடையதல்ல. ராகுல்காந்தி குஜராத்தில் பாதிக்கப்பட்ட    இடங்களுக்கு    சென்றார்.   ஆனால், எம்.எல்.ஏ.க்கள் போகவில்லை. இந்த நிலையில், காங்கிரஸ் வேட்பாளரான அகமது பட்டேலுக்கு 45 ஓட்டுகள் கிடைத்து அவர் வெற்றி பெறுவாரா?, அல்லது தேசியவாத காங்கிரஸ், ஐக்கிய ஜனதாதளம், சுயேச்சையின் உதவியோடு ஓட்டுகள் கிடைத்தாலும், காங்கிரசில் இருந்து மேலும் எம்.எல்.ஏ.க்கள் கட்சி தாவுகிறவர்கள் அதிகம் இருந்தால் தோற்கப்போகிறாரா? என்பது நாளை தெரிந்துவிடும். பா.ஜ.க.வுக்கும், காங்கிரசுக்கும் இது கவுரவ பிரச்சினை. குஜராத்தில் காங்கிரசை சுத்தமாக துடைத்துப்போட வேண்டும் என்பது பா.ஜ.க.வின் எண்ணம். காங்கிரசுக்கோ அகமது பட்டேல் எப்படியாவது வெற்றிபெற வேண்டும் என்பது குறிக்கோள். இதில் யார் வெற்றி பெற்றாலும், பொதுமக்களை பொறுத்தமட்டில், கூவத்தூரான பெங்களூருவில் ‘‘ஜனநாயகம் இந்த பாடுபடுகிறது’’ என்பதுதான் கருத்தாக இருக்கிறது.

Next Story