இணைப்பு தூரத்தில் இல்லை


இணைப்பு தூரத்தில் இல்லை
x
தினத்தந்தி 10 Aug 2017 9:30 PM GMT (Updated: 2017-08-10T19:08:31+05:30)

அரசியல் இயக்கங்களில் பிளவுகள் ஏற்படுவது இயற்கைதான். ஆனால், பல நேரங்களில் பிளவு ஏற்பட்டபிறகு, மீண்டும் ஒன்றாக இணைந்ததில்லை.

ரசியல் இயக்கங்களில் பிளவுகள் ஏற்படுவது இயற்கைதான். ஆனால், பல நேரங்களில் பிளவு ஏற்பட்டபிறகு, மீண்டும் ஒன்றாக இணைந்ததில்லை. கம்யூனிஸ்டு கட்சி ஒன்றாக இருந்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு என்று இரண்டு கட்சியாக பிரிந்தது. இரு கட்சிகளுக்கும் ஒரே கொள்கை, பல்வேறு பிரச்சினைகளில் ஒரே நிலைப்பாடு, நல்ல நட்பு என்றிருந்தாலும், இதுவரையில் அந்த கட்சிகள் ஒன்றாக இணைந்ததில்லை. திராவிட இயக்கத்தை பொறுத்தமட்டில், திராவிட கழகத்திலிருந்து அண்ணா தலைமையில் பிரிந்தவர்கள் தி.மு.க.வை தொடங்கினார்கள். இன்றும் தாய் கட்சி என்று சொன்னாலும்கூட, திராவிடக் கழகமும், தி.மு.க.வும் ஒன்றாக இணைந்ததில்லை. இதுபோல, தி.மு.க.வில் இருந்து எம்.ஜி.ஆர். தலைமையில் அ.தி.மு.க. தனியாக பிரிந்தது. 1972–ல் பிரிந்த இந்த கட்சி, அதன்பிறகு ஒன்றாக சேரவில்லை. ஆனால், எம்.ஜி.ஆர். மறைவுக்குப்பிறகு, ஜானகி அணி, ஜெயலலிதா அணி என்று பிரிந்த கட்சிகள், மீண்டும் ஒன்றாக இணைந்தன.

இதேபோல, இப்போது ஜெயலலிதா மறைவுக்குப்பிறகு, ஓ.பன்னீர்செல்வம் அணி, சசிகலா அணி என்று இரண்டாக பிரிந்தன. சசிகலா அணி மீண்டும் எடப்பாடி அணி என்றும், டி.டி.வி.தினகரன் அணி என்றும் இரண்டாக பிரிந்திருந்தது. ஆர்.கே.நகர் தொகுதி தேர்தலின்போது, ஓ.பன்னீர்செல்வம் அணி அ.தி.மு.க. (புரட்சித்தலைவி அம்மா), எடப்பாடி பழனிசாமி அணி அ.தி.மு.க. (அம்மா) என்றும் தங்களை பதிவு செய்து கொண்டனர். ஓ.பன்னீர்செல்வம் அணியையும், எடப்பாடி பழனிசாமி அணியையும் ஒன்றாக சேர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட நேரத்தில், ஓ.பன்னீர்செல்வம் அணி பகிரங்கமாக நிபந்தனைகள் விதித்தது. முதல் நிபந்தனையாக, ஜெயலலிதா மரணம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்றும், 2–வது நிபந்தனையாக சசிகலா குடும்பத்தினரை கட்சியிலிருந்து நீக்கவேண்டும் என்றும் கூறி, அந்த 2 நிபந்தனைகளிலும் இன்றுவரை உறுதியாக இருக்கிறார்கள்.

இந்தநிலையில், இந்த பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது என்ற நிலையை நேற்று நடந்த எடப்பாடி பழனிசாமி அணியின் ஆலோசனைக் கூட்டம் தெள்ளத் தெளிவாக தெரிவித்து விட்டது. இந்தக்கூட்டம் முடிவுகள், பத்திரிகையாளர்களுக்கு செய்திகுறிப்பாக 7 பக்கங்களில் வழங்கப்பட்டுள்ளது. இதில், 2½ பக்கம்தான் கூட்ட முடிவுகள் பற்றிய செய்தி. மீதிபக்கங்களில் இந்த தீர்மானத்தை எடுத்த தலைமைக் கழக நிர்வாகிகள், எடப்பாடி பழனிசாமி உள்பட 27 பெயர்கள் போடப்பட்டு, அவர்களது கையெழுத்துகள் பெறப்பட்டுள்ளன. சசிகலாவால் அவைத்தலைவராக நியமிக்கப்பட்ட செங்கோட்டையன் பெயரும், பொருளாளராக நியமிக்கப்பட்ட திண்டுக்கல் சீனிவாசன் பெயரும் இந்த அறிக்கையில் இடம்பெறவும் இல்லை, அவர்களது கையெழுத்து பெறப்படவும் இல்லை. அந்த அறிக்கையின் தலைப்பில் ‘அம்மா அணி’ என்று குறிப்பிடப்படவில்லை. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது. சசிகலா பொதுச்செயலாளர் பதவியில் இல்லை என்று குறிப்பிடும் வகையில், நமது கழகத்தின் நிரந்தர பொதுச்செயலாளராக கழக பணியாற்றிய மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் இடத்தில் வேறு எவரையும் கழகதொண்டர்கள் அமர்த்தி அழகு பார்க்க விரும்பமாட்டார்கள் என்றும், ஜெயலலிதாவால் நியமனம் செய்யப்பட்ட தலைமைக்கழக நிர்வாகிகள் ஒன்று கூடி, அ.தி.மு.க.வை அதன் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு வழிநடத்துகிறோம் என்றும், டி.டி.வி.தினகரன் நியமனம் செல்லாது, அவரால் வழங்கப்படும் அறிவிப்புகளும் செல்லாது, அவரால் அறிவிக்கப்பட்டவர்களின் நியமனங்களும் செல்லாது என்றும் அறிவித்துவிட்டார்கள். ஆக, இணைப்பு என்பது பக்கத்தில் வந்துவிட்டது. இன்று டெல்லியில் இரு அணியினரும் பிரதமரை சந்திக்கின்றனர். பிரதமரிடம் தெரிவித்துவிட்டு, இரு அணிகளும் விரைவில் இணைந்துவிடும். பொதுக்குழு கூட்டப்பட்டு, முடிவுகள் அதிகாரபூர்வமாக எடுக்கப்படும் என்று அ.தி.மு.க. உயர்மட்டத்தில் பேசப்படுகிறது.

Next Story