மாவட்டத்துக்கு ஒரு கடல்நீரை குடிநீராக்கும் நிலையம்


மாவட்டத்துக்கு ஒரு கடல்நீரை குடிநீராக்கும் நிலையம்
x
தினத்தந்தி 11 Aug 2017 9:30 PM GMT (Updated: 11 Aug 2017 1:34 PM GMT)

மறைந்த முதல்–அமைச்சர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா இந்த ஆண்டு கொண்டாடப்பட்டு வருகிறது.

றைந்த முதல்–அமைச்சர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா இந்த ஆண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி அரசின் சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா நடந்து வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்த மாவட்டத்துக்கு பயனளிக்கும் திட்டங்களை முதல்– அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து வருகிறார். அந்தவகையில் கடந்த புதன்கிழமை விழுப்புரம் மாவட்டத்தில் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா நடந்தது. இந்த விழாவில், அந்த மாவட்ட மக்களுக்கு பயன் அளிக்கும் ஒரு நல்ல திட்டத்தை அறிவித்தார். விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் உள்ள நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் வழியோர ஊரக குடியிருப்புகளுக்காக நாளொன்றுக்கு 10 கோடி லிட்டர் திறன்கொண்ட கடல்நீரை நன்னீராக்கும் கூட்டு குடிநீர் திட்டம் ரூ.1,000 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும். ஏற்கனவே கொள்ளிடம் ஆற்றை நீர் ஆதாரமாகக் கொண்டு அறிவிக்கப்பட்ட திட்டத்தில், தற்போது 140 ஆண்டுகளில் இல்லாத கடும் வறட்சியால் நீர் ஆதாரம் குறைந்துவிட்டதால் விழுப்புரம் மாவட்ட மக்களின் குடிநீர் தேவையை முழுமையாக நிறைவேற்றும் வகையில், நிரந்தர தீர்வு காணும் பொருட்டு மாற்று ஏற்பாடாக இந்தத்திட்டம் நிறைவேற்றப்படுகிறது என்று அவர் அறிவித்தது, அந்த மாவட்ட மக்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சியை அளித்துள்ளது. அந்த அறிவிப்பு காற்றிலே கலந்த கீதமாக போய்விடாமல், உடனடியாக தேவையான நிதி ஒதுக்கப்பட்டு இந்த ஆண்டே பணிகள் தொடங்கப்படவேண்டும்.

கடல்நீரை குடிநீராக்கும் நிலையங்கள் இப்போது சென்னையில் மட்டும் இருக்கின்றன. சென்னை நகர மக்களின் குடிநீர் தேவை ஒரு நாளைக்கு 85 கோடி லிட்டர் ஆகும். இதில் மீஞ்சூர், நெம்மேலி ஆகிய இரு இடங்களிலும் நாள் ஒன்றுக்கு தலா 10 கோடி லிட்டர் உற்பத்தித்திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையங்கள் இருக் கின்றன. இதுதவிர, போரூரில் ஒரு நாளைக்கு 15 கோடி லிட்டர் கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் அமைக்க ஒப்பந்தப்புள்ளிகள் பத்திரிகைகளில் வெளியிடப் பட்டுள்ளன. ஒரு மாதத்தில் இது இறுதி செய்யப்பட இருக்கிறது. இதுமட்டுமல்லாமல், மேலும் 40 கோடி லிட்டர் உற்பத்தித்திறன் கொண்ட ஒரு நிலையம் அமைக்கவும் பரிசீலனை நடந்துவருகிறது. இந்த திட்டங்களெல்லாம் நிறைவேற்றப்பட்டால், சென்னை நகரின் குடிநீர் பற்றாக் குறையை எளிதில் பூர்த்தி செய்துவிடமுடியும்.

தமிழ்நாட்டில் கடுமையான வறட்சி நிலவுகிறது. இப்போதெல்லாம் தொடர்ந்து மழை பொய்த்துப்போகும் நிலை இருப்பதால், மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி விடுகிறார்கள். இயற்கை தந்த அருட்கொடையாக தமிழ் நாட்டில் 1,076 கிலோமீட்டர் நீளமுள்ள கடற்கரை இருக் கிறது. சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக் கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 13 மாவட்டங்கள் கடலோர மாவட்டங் களாக இருக்கின்றன. இந்த மாவட்டங்களில் உடனடியாக கடல்நீரை குடிநீராக்கும் நிலையங்களை அமைப்பதையே தமிழக அரசு தலையாய பணியாகக் கொள்ளவேண்டும். அதுதான் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா பரிசாக தமிழக மக்களுக்கு இருக்கும். இதற்காக மத்திய அரசாங்க உதவி, உலக வங்கி, ஆசிய வங்கி, ஜப்பான் நாட்டு நிதி உதவிகளை பெறுவதற்கு முழுமுயற்சி எடுத்துக்கொள்ள வேண்டும். இதுமட்டுமல்லாமல், கடந்த மாதம் பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரேல் நாட்டுக்கு சென்றிருந்தபோது பார்த்த

20 ஆயிரம் லிட்டர் கடல்நீரை குடிநீராக்கும் ‘டேங்கர் லாரிகளை’ தமிழ்நாட்டுக்கு வாங்கித்தரவேண்டும் என்று மத்திய அரசாங்கத்தை வலியுறுத்தவேண்டும். எப்படி பல்வேறு மின்சார திட்டங்களால் மின்சார வெட்டு இல்லாத நிலையில், உபரியாக மின்சாரம் இருக்கிறதோ அதுபோல, இத்தகைய திட்டங்களால் குடிநீர் தட்டுப்பாடு இல்லாத நிலையை தமிழ்நாட்டில் உருவாக்கிவிடலாம்.

Next Story