ரெயிலில் தரமான உணவு


ரெயிலில்  தரமான  உணவு
x
தினத்தந்தி 13 Aug 2017 9:30 PM GMT (Updated: 13 Aug 2017 11:18 AM GMT)

இந்தியாவின் ஒட்டு மொத்த போக்குவரத்தில் ரெயில்வேதான் பெரும்பங்கு வகிக்கிறது. தினமும் 2 கோடியே 30 லட்சம் பயணிகள், 12,617 ரெயில்களில் பயணம் செய்கிறார்கள்.

ந்தியாவின் ஒட்டு மொத்த போக்குவரத்தில் ரெயில்வேதான் பெரும்பங்கு வகிக்கிறது. தினமும் 2 கோடியே 30 லட்சம் பயணிகள், 12,617 ரெயில்களில் பயணம் செய்கிறார்கள். இதில், தொலைதூர ரெயில்களில் பயணம் செய்பவர்கள் ஒரு கணிசமான அளவில் இருக்கிறார்கள். இவர்களுக்கு தகுந்த உணவு, குடிநீர் வசதி செய்து தருவதுடன், கூடுதல் கட்டணம் செலுத்தி உயர் வகுப்புகளில் பயணம் செய்பவர்களுக்கு படுக்கை வசதி போன்றவற்றை அளிப்பது ரெயில்வேயின் கட்டாய கடமையாகும். ஆனால், சமீபகாலங்களாக ரெயில்வேயின் தரமற்ற உணவு, சுத்தமில்லாத தண்ணீர், அழுக்கடைந்த படுக்கை விரிப்புகள் என்பது அன்றாட வாடிக்கையாகிவிட்டது. டுவிட்டரில், மத்திய ரெயில்வே மந்திரி சுரேஷ் பிரபு இருக்கிறார். ரெயில்வே அமைச்சகமும் பதிவு செய்திருக்கிறார்கள். பொதுமக்கள் அனுப்பும் பல தகவல்கள் இந்த மூன்று குறைபாடுகளையும் சுற்றியே இருக்கிறது. ரெயில்வே அமைச்சகமும், மத்திய மந்திரியும் உடனுக்குடன் பதில் அளிப்பது வரவேற்புக்குரியது. இதே குறைபாடுகளை இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கைத்துறை தலைவரின் அறிக்கை தற்போது பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட சூழ்நிலையிலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ரெயில்வே துறை அதிகாரிகளோடு இணைந்து இந்தத்துறை அதிகாரிகள் 74 ரெயில்நிலையங்கள், 80 ரெயில்களில் 4 மாதங்கள் தீவிரமாக அதிரடி சோதனை நடத்தியிருக்கிறார்கள்.

இந்த சோதனையில், ரெயிலில் வழங்கப்படும் உணவு மிகவும் தரமற்றதும், மக்கள் சாப்பிடுவதற்கு லாயக்கற்றதுமாக இருக்கிறது என்ற அதிர்ச்சியான தகவலை தந்துள்ளனர். சில ரெயில்களில் உள்ள உணவு தயாரித்து வழங்கும் பெட்டிகளில் கரப்பான்பூச்சிகள், எலிகள், பூச்சிகள் மட்டுமல்லாமல், குப்பைகளும் குவிந்து கிடப்பதை கண்டிருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல், பொதுமக்களுக்கு வழங்கப்படும் குடிநீரும் சுத்தமில்லாமல் இருக்கிறது என்பதை அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர். இதுபோல, அழுக்கான கம்பளிகள், கிழிந்த போர்வைகள் மற்றும் தலையணைகள் நீண்ட நாட்களாக சலவை செய்யப்படாமலும் வழங்கப்படுவதை சுட்டிக்காட்டியுள்ளனர். ரெயில் பயணிகள் பெரும்பாலானோருக்கு மனதில் இருந்த இந்தகுறை கணக்காய்வு மற்றும் தணிக்கைத்துறை தலைவரின் அறிக்கையில் எதிரொலித்துள்ளது. இந்த அறிக்கையைப்பற்றி விவாதங்கள் நடந்து கொண்டிருக்கும்போதே, ஒரு ரெயில் பயணி வாங்கிய சைவ பிரியாணியில் பல்லியும், மற்றொரு பயணி வாங்கிய கட்லெட்டில் ஆணியும் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக, ரெயில்வே வாரியத்தலைவர் ஏ.கே.மிட்டல், ஓடும் ரெயிலில் உணவு வழங்கும் ரெயில் பெட்டியில் தயாரித்து வழங்கப்படும் உணவை சார்ந்திருக்காமல், வீட்டில் தயாரிக்கப்பட்ட உணவுகளையே ரெயில் பயணிகள் கொண்டு வந்தால் நல்லது. அதற்கு ஈடு இணையே இல்லையே என்று ஆலோசனை வழங்கியிருக்கிறார். போர்வைகள், கம்பளி, தலையணைகள் சலவை செய்து சுத்தமாக வழங்குவதற்கு பதிலாக, கம்பளி வழங்குவதை நிறுத்துவதற்கும், குளுமை வசதி செய்யப்பட்ட ரெயில் பெட்டியில் 19 டிகிரி செல்சியஸ்க்கு பதிலாக, வெப்பநிலையை 24 டிகிரிக்கு உயர்த்தி படுக்கை விரிப்பு வசதிகளையே முழுமையாக எடுத்து விடுவதற்கும் திட்டம் தீட்டிக் கொண்டிருக்கிறார்கள். இது, இல்லாத ஊருக்கு போகாத வழியை காட்டுவது போலாகும். குளுமை வசதி செய்யப்பட்ட ரெயில்பெட்டியில் பயணம் செய்வதற்காகத்தான் கூடுதலாக பணம் கொடுத்து டிக்கெட் வாங்குகிறார்கள். அவர்கள் எதிர்பார்க்கும் 19 டிகிரி செல்சியஸ் குளுமை வசதி அளிக்கவேண்டுமே தவிர, அதை 24 டிகிரி செல்சியஸ்க்கு உயர்த்தினால், அந்த ரெயில் பெட்டியில் பயணம் செய்வதற்கான அர்த்தமே இல்லாமல் போய்விடும். தரமான உணவும், சுத்தமான குடிநீரும், சலவை செய்யப்பட்ட படுக்கை விரிப்புகளும் கண்டிப்பாக வழங்க வேண்டுமே தவிர, ரத்து செய்யும் முயற்சியில் ரெயில்வே துறை இறங்கக்கூடாது. ரெயில் பயணம் என்பது மகிழ்ச்சியான பயணமாக இருக்கவேண்டுமே தவிர, திருப்தியற்ற பயணமாக இருந்து விடக்கூடாது.

Next Story