பாரத மாதாவுக்கு இன்று 71 வயது


பாரத  மாதாவுக்கு  இன்று  71  வயது
x
தினத்தந்தி 14 Aug 2017 9:30 PM GMT (Updated: 2017-08-14T19:35:18+05:30)

இந்தியா விடுதலை அடைந்து இன்றோடு 70 ஆண்டுகள் முடிந்து, 71–வது ஆண்டு பிறக்கிறது. பாரத மாதாவின் 71–வது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.

ந்தியா விடுதலை அடைந்து இன்றோடு 70 ஆண்டுகள் முடிந்து, 71–வது ஆண்டு பிறக்கிறது. பாரத மாதாவின் 71–வது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. ஆண்டாண்டு காலமாக ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டுக்கொண்டிருந்த இந்தியாவை அடிமைத்தளையிலிருந்து மீட்க, தியாகிகளான நமது முன்னோர்கள் சாதி, மத, இன வேறுபாடுகளை களைந்து ஒரேஅணியில் நின்று, இந்த நாடு சுதந்திரம்பெறவேண்டும் என்பதையே தங்கள் உயிர்மூச்சாகக்கொண்டு போராடி இந்த விடுதலையை பெற்றுத் தந்தார்கள். பிரதமர் நரேந்திரமோடி கூறியபடி, ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு மாதம் என்பது பல்வேறு புரட்சிகளை நினைவுபடுத்தும் மாதமாகும். ‘ஒத்துழையாமை இயக்கம்’ 1920–ம் ஆண்டு ஆகஸ்டு 1–ந்தேதி தொடங்கப்பட்டது. அதன்பின் 1942–ம் ஆண்டு ஆகஸ்டு 9–ந்தேதி ‘வெள்ளையனே வெளியேறு இயக்கம்’ தொடங்கியது. இந்த புரட்சிகளின் பலனாகத்தான் 1947–ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 15–ந்தேதி இந்தியா சுதந்திரம் அடைந்தது. இந்த ஆண்டு சுதந்திரதினத்தின் 70–வது ஆண்டு நிறைவு என்றாலும், வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் 75–வது ஆண்டு நிறைவு ஆகும். இந்த சுதந்திரத்தை நமக்கு பெற்றுத்தருவதற்காக இந்திய நாட்டின் மூலை முடுக்கிலுள்ள கிராமங்கள், நகரங்களிலிருந்து ஏழை–பணக்காரர், படித்தவர்–படிக்காதவர், பாட்டாளி மக்கள் எல்லோரும் ஒன்றாக சேர்ந்து, காந்தியடிகளின் அறைகூவலான ‘செய் அல்லது செத்துமடி’ என்பதை நெஞ்சில் ஏற்றிக்கொண்டு தங்களைப்பற்றியோ, தங்கள் குடும்பத்தைப் பற்றியோ நினைக்காமல், இந்த நாட்டுக்காக பல்வேறு தியாகங்களை செய்து, ஏன் எண்ணற்றவர்கள் உயிர்த்தியாகம் செய்து இந்த சுதந்திரத்தை பெற்றுத்தந்தார்கள்.

இந்த நல்லநாளில் அதே ஒற்றுமை உணர்வு நாட்டில் நிலவவேண்டும். நமக்குள் சாதிபேதமில்லை, மதபேதமில்லை, இனபேதமில்லை, மொழிபேதமில்லை, உயர்ந்தவர்–தாழ்ந்தவர் என்ற பேதமில்லை, ஆண்–பெண் என்ற பேதமில்லை என்ற உறுதிப்பாட்டை ஒவ்வொரு இந்தியரும் எடுத்துக்கொள்ளவேண்டிய நாள் இது. அத்தகைய உறுதிப்பாட்டை இந்தநாளில் நாம் கொண்டாடும் சுதந்திரத்தை பெற்றுத்தர நமது முன்னோர்கள் எப்படி ஒற்றுமையாக பாடுபட்டார்களோ?, அதேவழியில் நின்று நாட்டின் வளர்ச்சிக்கு வித்திட்டால் நிச்சயமாக நாடு முன்னேறும் என்பதில் சந்தேகம் இல்லை. இந்தியா இந்த 70 ஆண்டுகளில் முன்னேறியிருக்கிறது என்பதில் சந்தேகமே இல்லை. நாடு சுதந்திரம் அடையும்போது, 83 சதவீதம் பேர் படிப்பறிவு இல்லாதவர்களாக இருந்தார்கள். அப்போது சராசரியாக இந்தியாவில் மனிதனின் ஆயுட்காலம் 32 வயதாக இருந்தது. தனிநபர் வருமானம் ரூ.247 தான். ஆனால், இந்த 70 ஆண்டுகளில் இப்போது மனிதனின் ஆயுட்காலம் 68.34 ஆண்டுகளாகவும், தனிநபர் வருமானம் ஆண்டுக்கு சராசரியாக ரூ.1,03,219 ஆகவும், படிப்பறிவு விகிதம் 73 சதவீதமாகவும் உயர்ந்துள்ளது.

அந்தக்காலங்களில் உணவு தானியம் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யவேண்டிய காலக்கட்டாயத்தில் இருந்தது. ஆனால், இன்றோ தானிய வகைகளில் தன்னிறைவு பெற்றதோடு மட்டுமல்லாமல், உலகிலேயே பழங்கள், காய்கறிகள், பால் போன்ற உற்பத்தியில் முன்னணியில் நிற்கும் நாடுகளில் ஒன்றாக இருக்கிறது. விண்வெளிக்கு ராக்கெட்டுகளை செலுத்தும் அளவில் முன்னேறி இருக்கிறோம். இணையதள உலகில், இன்றைய இளைஞர்களின் சக்தி என்பது மிகப்பெரிய சக்தியாக இருக்கிறது. இந்த சக்தியை சரியாக பயன்படுத்த வேண்டுமென்றால், அவர்களுக்கு வேலைவாய்ப்புகளை பெருக்கவேண்டியது அவசர அவசியமாகும். வேலைவாய்ப்புகளை பொறுத்தமட்டில், எதிர்பார்க்கும் வேகத்தில் இந்தியா இல்லை. அதுபோல, ஊழலுக்கு எதிரான போராட்டத்திலும் இன்னும் தீவிரமாக மத்திய–மாநில அரசுகள் செயல்படவேண்டும். இந்தநாளில் எல்லைப் புறங்களில் அச்சுறுத்தல் இருக்கிறது என்பதை யாரும் மறுத்துவிட முடியாது. எனவே, உள்நாட்டிலுள்ள பொருளாதார போரையும், வெளிநாட்டு அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்ள வேண்டுமென்றால், ‘நாட்டு மக்கள் அனைவரும் இந்தியாவை காப்போம்’ என்ற முழக்கத்தில் ஒற்றுமையாக இருக்க வேண்டும். அதற்கேற்றவகையில், உள்நாட்டில் முன்னேற்றங்களை காணவேண்டும்.

Next Story