கையைவிட்டு போகும் தொழிற்சாலைகள்


கையைவிட்டு போகும் தொழிற்சாலைகள்
x
தினத்தந்தி 15 Aug 2017 9:00 PM GMT (Updated: 15 Aug 2017 7:24 PM GMT)

முதலீட்டாளர்கள் தமிழ்நாட்டுக்கு வராமல், பிறமாநிலங்களுக்கு ஏன் செல்கிறார்கள்? என்று ஆராயவேண்டும், உற்பத்தித்துறையில் வேகம் குறைந்துவிட்டது என்று சென்னையில் ஒரு விழாவில் பேசும்போது மத்திய வர்த்தகத்துறை ராஜாங்க மந்திரி நிர்மலா சீதாராமன் கூறியிருக்கிறார்.

ற்பத்தித்துறை வளர்ச்சி அடைந்தால்தான், பொருளாதார வளர்ச்சியும், வேலைவாய்ப்பும் பெருகும். தமிழ்நாட்டில் மிகவும் கவலைக்கிடமான சூழ்நிலை தொழில்வளர்ச்சியில் ஏற்பட்டுள்ளது. புதிய தொழிற்சாலைகள் வருவதில்லை என்ற குறை ஒருபக்கம் இருக்கிறது. அதேநேரத்தில் ஏற்கனவே இருக்கும் தொழிற்சாலைகளும், விரிவாக்கங்களும் அண்டை மாநிலமான ஆந்திராவுக்கும், மற்ற மாநிலங்களுக்கும் சென்றுகொண்டிருக்கிறது என்று கவலைப்பட்டு கொண்டிருந்தநேரத்தில், மேலும் ஒரு தொழிற்சாலையும் மராட்டிய மாநிலத்திற்கு செல்லப்போகிறது. உலக புகழ்பெற்ற பிஸ்கெட் மற்றும் ரொட்டி கம்பெனி பிரிட்டானியா. இந்த கம்பெனி மராட்டிய மாநிலம் ரஞ்சன்காவ்னில் ரூ.1,000 கோடி முதலீட்டில் பெரிய உணவு பூங்கா ஒன்றை அமைக்கப்போகிறது. ஏற்கனவே தமிழ்நாட்டில் இந்த நிறுவனம் கிராய்சான் என்று கூறப்படும் காலை உணவுக்கான ரொட்டி தயாரிக்கும் தொழிற்சாலையை நிறுவ திட்டமிட்டு பணிகளை மேற்கொண்டு இருந்தது. 

இந்த தொழிற்சாலையையும் இப்போது மராட்டிய மாநிலத்தில் உள்ள உணவு பூங்காவுக்கு கொண்டு செல்ல இருக்கிறது. மேலும், ஒரு மாவுமில் தொடங்கவும் பரிசீலனை செய்துகொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் தொழில்வளர்ச்சியில் அரசாங்கம் கவனம் செலுத்தவேண்டும் என்பதற்கு நிச்சயமாக பிரிட்டானியா நிறுவனம் தமிழ்நாட்டை விட்டுச்செல்வது ஒரு அபாய மணி அடிப்பதுபோல் ஆகும். ஏற்கனவே இந்த ஆண்டு கொரியாவைச் சேர்ந்த மிகப்பெரிய கார் நிறுவனமான கியா மோட்டார் நிறுவனம் ரூ.6 ஆயிரத்து 400 கோடி முதலீட்டில் ஆந்திராவில் உள்ள அனந்தபூரில் ஒரு தொழிற்சாலை தொடங்க திட்டமிட்டுள்ளது. இந்த ஆலைக்கான பணிகள் அக்டோபர் மாதத்தில் தொடங்குகிறது. இந்தியாவில் மோட்டார் வாகன தொழிலில் தலைமையிடம் என்று அழைக்கப்பட்டு வந்த சென்னையை விட்டுவிட்டு, அனந்தபூர் சென்றது நிச்சயமாக தமிழக அரசு விழித்துக்கொள்ளவேண்டிய ஒரு நிகழ்வு. சென்னையில்தான் துறைமுக வசதி, விமான வசதி, ரெயில் வசதி என்று எல்லா வசதிகளும் இருக்கின்றன.

ஆனால், ஆந்திரா அரசாங்கம் கும்மிடிப்பூண்டியில் இருந்து ஏறத்தாழ 30 கி.மீ. தூரத்தில் ஸ்ரீ சிட்டி என்ற ஊரில் மிகப்பிரமாண்டமான தொழிற்பேட்டையை அமைத்து, ஏராளமான தொழில்கள் உருவாவதற்கு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. இதனால் பல தொழில் நிறுவனங்கள் தலைமை அலுவலகத்தை சென்னையில் வைத்துக்கொண்டு, தொழிற்சாலைகளை ஸ்ரீ சிட்டியில் அமைப்பதற்கான வேலைகளில் இறங்கியுள்ளன. அடுத்து தைவான் நாட்டைச் சேர்ந்த பாக்ஸ்கான் என்ற கம்பெனி மிகப்பெரிய மின்னணு கம்பெனி ஆகும். இந்தியாவில் ரூ.32 ஆயிரம் கோடி முதலீட்டில் புதிய தொழில்களை தொடங்க திட்டமிட்டுள்ளது. ஆப்பிள் ஐபோன் உள்பட பல்வேறு வகையான செல்போன்களை தயாரிக்கும் இந்த நிறுவனம், தமிழ்நாட்டில் புதிய முதலீடுகளை செய்வதற்காக உடனடியாக அந்த நிறுவனத்தோடு தொடர்புகொண்டு புரிந்துணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மேலும், புதிய தொழில் நிறுவனங்களை ஈர்ப்பதோடு மட்டுமல்லாமல், பழைய தொழில் நிறுவனங்கள் நம்மைவிட்டு போகாத வகையில், தமிழக அரசு எல்லா பணிகளையும் விரைந்து செய்யவேண்டும். ஏற்கனவே 2015–ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்த சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட பல ஒப்பந்தங்கள் இன்னும் தொடக்கத்தை காணாத நிலையை கருத்தில் கொண்டு, அடுத்த ஆண்டு மீண்டும் நடக்கும் சர்வதேச முதலீட்டாளர் மாநாடு நடக்கும் முன்பே எவ்வளவு அதிகமான தொழிற்சாலைகளை ஈர்க்க முடியுமோ, அந்தளவுக்கு சலுகைகளையும், ஊக்குவிப்புகளையும் அளித்து தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கு தமிழக அரசு பாடுபடவேண்டும்.

Next Story