மோடி விரும்பும் புதிய இந்தியா


மோடி  விரும்பும்  புதிய  இந்தியா
x
தினத்தந்தி 16 Aug 2017 9:30 PM GMT (Updated: 2017-08-16T18:28:30+05:30)

ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று டெல்லி செங்கோட்டையில் தேசியகொடி ஏற்றி வைத்து பிரதமர் உரையாற்றுவது வழக்கம்.

வ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று டெல்லி செங்கோட்டையில் தேசியகொடி ஏற்றி வைத்து பிரதமர் உரையாற்றுவது வழக்கம். பிரதமரின் இந்த உரை இந்தியா முழுவதும் மட்டுமல்லாமல், சர்வதேச அளவிலும் உன்னிப்பாக கவனிக்கப்படும். அந்தவகையில், பிரதமர் நரேந்திரமோடி நேற்றுமுன்தினம் 4–வது முறையாக, டெல்லி செங்கோட்டையில் ஆற்றிய உரை ஒரு தனித்துவமிக்கதாக இருந்தது. இந்த உரையில் பெரிய அளவில் சாதனை பட்டியலோ, புதிய அறிவிப்புகளோ இல்லை. ஆனால், லஞ்சம், ஊழலின்றி ஒரு தூய்மையான இந்தியாவை படைக்க வேண்டும் என்ற ஒரு தணியாத வேட்கை அவரது பேச்சில் ஜொலித்தது. இன்றையதினம் நாடு நேர்மையின் திருவிழாவை கொண்டாடிக் கொண்டிருக்கிறது என்று மிக உற்சாகமாக பேச்சில் பறைசாற்றினார். கடந்த கால சாதனையாக அவரது 56 நிமிட பேச்சில் அவர் தெரிவித்தது, ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்ததாலும், பினாமி சொத்துகள் சட்டத்தை கொண்டு வந்ததாலும், போலி கம்பெனிகளை மூடுவதற்கு எடுத்த நடவடிக்கையாலும், கருப்பு பணத்திற்கும், ஊழலுக்கும், வரலாறு காணாதவகையில் எத்தகைய பலத்த அடி கொடுக்கப்பட்டுள்ளது என்பதையும் விவரித்தார்.

இதை சொன்ன அவர், படைக்கப்போகும் புது இந்தியா, சாதி, மத, இன, வன்முறை, ஊழல், பாகுபாடு இல்லாத ஒரு சமுதாயமாக இருக்கவேண்டும். இந்த சமுதாயத்தை படைப்பதற்கு பொதுமக்கள் ஒவ்வொருவரும் தங்களால் ஆன உதவிகளை செய்ய வேண்டும். இந்த 21–ம் நூற்றாண்டு அதாவது, 2 ஆயிரமாண்டு தொடங்கியநேரத்தில் பிறந்தவர்களுக்கு அடுத்த ஆண்டு 18 வயதாகும். அவர்கள்தான் 2017–2022–ம் ஆண்டு புதிய இந்தியாவை படைக்கப்போவதில் பெரும் பங்காற்றுவார்கள் என்று கூறிய அவர், லஞ்ச–ஊழலுக்கு எதிரான குறிப்புகளை தன்பேச்சில் மூன்று முறை குறிப்பிட்டார். மங்கள்யான் விண்கலத்தை செவ்வாய்கிரகத்துக்கு 9 மாதங்களில் அனுப்பும் ஆற்றல் நம்மிடம் இருக்கிறது. அதே நேரத்தில், நான் ரெயில்வே திட்டங்களை ஆய்வு செய்து கொண்டிருந்த நேரத்தில், ஒரு இடத்தில் 70–72 கி.மீட்டர் தூரத்துக்கு தண்டவாளம் போடும் திட்டம் 42 ஆண்டுகளாக செயலிழந்து கிடக்கிறது என்பதையும் பார்த்தேன். இதுவரையில் சுதந்திர தினவிழாக்களில் அறிவித்த 21 திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. எஞ்சிய 50 திட்டங்கள் விரைவில் நிறைவேற்றப்படும் என்று அறிவித்தார். வரப்போகும் 5 ஆண்டுகளில், அவர் விரும்பும் புதிய இந்தியாவை படைக்க வேண்டும் என்றால், மாவட்ட கலெக்டர்களின் பங்கு பெரியபங்காக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் சுதந்திரதினத்திற்கு ஒருவாரத்திற்கு முன்பு இந்தியா முழுவதிலும் உள்ள மாவட்ட கலெக்டர்களுடன் ‘வீடியோ கான்பரன்சிங்’ மூலம் உரையாற்றினார். 707 மாவட்ட கலெக்டர்கள் இந்த வீடியோ கான்பரன்சிங்கில் பிரதமர் தங்களுடன் பேசியதை கேட்டுக்கொண்டிருந்தனர்.

மாவட்ட கலெக்டர்கள் பைல்களை மட்டும் பார்த்துக் கொண்டிருக்காமல், அதையும் தாண்டி களப்பணியில் ஈடுபட்டு மக்களுக்கு என்ன பிரச்சினையிருக்கிறது என்ற உண்மை நிலவரங்களை கண்டறிய வேண்டும் என்று கலெக்டர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் பிரதமர் பேசினார். பொதுவாக, பெரிய வி‌ஷயங்கள் பேசப்பட்டாலும், மக்களை பொறுத்தமட்டில், நடைமுறையில் பெரிய மாற்றம் இல்லை என்பதுதான் குறையாக இருக்கிறது. இதைத்தான் பிரதமரும் தன் பேச்சில் குறிப்பிட்டு இருக்கிறார். ஒரு சாதாரண குடிமகன் அரசு நிர்வாகத்தைப் பார்க்கும்போது, அது தனக்கு என்ன பலன் அளிக்கிறது? என்றுதான் பார்ப்பான் என்று கூறினார். இதுதான் யதார்த்த உண்மையாகும். ரூபாய் நோட்டு செல்லாது என்று அறிவித்த திட்டம் என்றாலும், சரக்கு சேவைவரி என்றாலும், லஞ்ச ஊழல் ஒழிப்பு என்றாலும், வேறெந்த திட்டங்கள் என்றாலும் சரி, அதனால் கடைக்கோடி மக்களுக்கும் பயன் போய்ச் சேருகிறதா? என்று உறுதிப்படுத்துவதையே முக்கிய குறிக்கோளாகக் கொள்ள வேண்டும்.

Next Story