கலப்புத் திருமணம் செய்தவர்களை காப்பாற்ற தனிப்பிரிவு


கலப்புத் திருமணம் செய்தவர்களை காப்பாற்ற தனிப்பிரிவு
x
தினத்தந்தி 17 Aug 2017 9:30 PM GMT (Updated: 2017-08-17T18:43:54+05:30)

மதுரை மாவட்டத்தில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த ஒரு பையனை திருமணம் செய்துகொண்டாள் என்ற ஒரே காரணத்திற்காக, ஒரு பெண் கவுரவ கொலை செய்யப்பட்ட சம்பவம் சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.

‘‘சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்
நீதி வழுவா நெறிமுறையின் – மேதினியில்
இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர்
பட்டாங்கில் உள்ள படி’’


- என்பது அவ்வை பாட்டி இந்த உலகுக்குத் தந்த நன்னெறியாகும். ஆனால், இன்னமும் பல இடங்களில், தங்களை உயர்சாதி என்று சொல்லிக் கொள்பவர்களும், தாழ்த்தப்பட்ட வகுப்பினர்களும் இணைந்து திருமணம் செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாத நிலை நிலவுகிறது. வேற்று சாதியை சேர்ந்த ஒரு பையனை திருமணம் செய்தது, தன் மகள் என்றாலும் அதைப்பொறுத்துக்கொள்ள முடியாமல், அந்தப்பையனை மட்டுமல்லாமல், ‘எங்கள் கவுரவமே போய்விட்டது. மானமே போய்விட்டது’ என்றுசொல்லி, தாங்கள் தவமிருந்து பெற்ற பெண்ணையும் கொலைசெய்யும் கவுரவ கொலைகளும் தமிழ்நாட்டில் அதுவும் பெரியார் பிறந்த இந்தப்பூமியில் இன்னமும் நடக்கிறது.

மதுரை மாவட்டத்தில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த ஒரு பையனை திருமணம் செய்துகொண்டாள் என்ற ஒரே காரணத்திற்காக, ஒரு பெண் கவுரவ கொலை செய்யப்பட்ட சம்பவம் சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை தற்போது ஆந்திர மாநில  ஐகோர்ட்டு  நீதிபதியாக  இருக்கும்  நீதியரசர் வி.ராமசுப்பிரமணியன் விசாரித்து தொடக்கம் முதல் அந்த தம்பதிக்கு பாதுகாப்பு கொடுக்க தவறிய போலீஸ் அதிகாரிகள் மீது கடுமையான கண்டனத்தை தெரிவித்து நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரை செய்தார். அதன்பிறகு இனிமேலும் இதுபோன்ற கவுரவ கொலைகள் நடக்காமல் இருப்பதை தடுக்கும் வகையில், 9 உத்தரவுகளை அடுக்கடுக்காக பிறப்பித்தார். அதில் ஒன்று, ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, மாவட்ட சமூகநல அதிகாரி மற்றும் மாவட்ட ஆதிதிராவிடர் நலஅதிகாரி கொண்ட சிறப்பு தனிப்பிரிவு அமைக்கப்பட வேண்டும். இந்தப்பிரிவு, கலப்புத்திருமணம் செய்த தம்பதிகளுக்கு வரும் அச்சுறுத்தல், துன்புறுத்தல் தொடர்பான மனுக்கள் புகார்களை வாங்கவேண்டும். இதுபோன்ற புகார்களை பெறவும், அவர்களுக்கு தேவையான உதவிகள், ஆலோசனைகள் வழங்கவும் 24 மணிநேர அவசர உதவி டெலிபோன் எண்களை கொடுக்க வேண்டும். இந்த தம்பதிகள் இருக்கும் இடத்திலுள்ள போலீஸ் நிலைய அதிகாரி அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கவேண்டும். ஏதாவது அசம்பாவித சம்பவங்கள் நடந்தால், அந்த சிறப்புக்குழு அந்த கலப்புத்திருமண தம்பதிகளுக்கு பாதுகாப்பு அளிக்கத்தவறிய அதிகாரிகளை பொறுப்பேற்க செய்யவேண்டும். இத்தகைய சிறப்பு தனிப்பிரிவுகளை தமிழ்நாடு முழுவதும் 3 மாதத்திற்குள்ளாக அமைக்கவேண்டும் என்று 13.4.2016 அன்று வெளியிட்ட உத்தரவில் நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் கூறியிருந்தார்.

நீதிபதி உத்தரவிற்கேற்ப, 3 மாதங்களுக்குள் இந்த சிறப்பு தனிப்பிரிவுகளை அரசு அமைக்கவில்லை. நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மீண்டும் தொடரப்பட்டது. உடனடியாக அவசர, அவசரமாக மதுரையில் இதுபோன்ற சிறப்பு தனிப்பிரிவு அமைக்கவும், சமூகத்தில் கலப்பு திருமணத்தினால் பாதிக்கப்பட்ட நபர்களிடமிருந்து புகாரை பெறுவதற்கு, மதுரை மாநகர் காவல் ஆணையர் வளாகத்திலுள்ள குற்றத்தடுப்பு பிரிவும் இந்தப்புகாரை விசாரிக்க குற்றப்பிரிவு காவல் ஆய்வாளரும் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல, ஒரு சிறப்பு தனிப்பிரிவு சேலம் மாவட்டத்திலும் அமைக்கப்பட்டுள்ளது. கலப்புத்திருமணத்தை பொறுத்தமட்டில், இப்போது தானாக பல குடும்பங்களில் நடந்து கொண்டிருக்கின்றன. பெரும்பான்மையான குடும்பங்களில் இத்தகைய கலப்பு திருமணங்களை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டு, மணமக்களை வாழ்த்துகிறார்கள். கலப்புத்திருமணங்கள் சர்வசாதாரணமாகிவிட்டது. ஒருசில இடங்களில் மட்டும் இவ்வாறு கவுரவ கொலைகள் நடக்கின்றன. எனவே, உயர்நீதிமன்ற தீர்ப்புப்படி, உடனடியாக இதுபோன்ற சிறப்பு தனிப்பிரிவை தமிழக அரசு அனைத்து மாவட்டங்களிலும் அமைக்கவேண்டும். 18 வயதிற்கு குறைந்த பெண்ணையோ, 21 வயதிற்கு குறைந்த ஆணையோ கலப்புத்திருமணம் என்ற பெயரில் திருமணம் செய்துவைக்கும் நடவடிக்கைகளை மட்டும் நிச்சயமாக ஊக்குவிக்கக் கூடாது.

Next Story