கல்வி வளர்ச்சியை பாதிக்கும் முடிவு


கல்வி வளர்ச்சியை பாதிக்கும் முடிவு
x
தினத்தந்தி 18 Aug 2017 9:30 PM GMT (Updated: 18 Aug 2017 1:26 PM GMT)

உலகில் எல்லா செல்வங்களுக்கும் மேலான செல்வம் கல்வி செல்வம் தான் என்பதை காலம்காலமாக, ஏன் திருவள்ளுவர் முதல் எல்லோரும் கூறியிருக்கிறார்கள்.

லகில் எல்லா செல்வங்களுக்கும் மேலான செல்வம் கல்வி செல்வம் தான் என்பதை காலம்காலமாக, ஏன் திருவள்ளுவர் முதல் எல்லோரும் கூறியிருக்கிறார்கள். அதனால்தான், பெருந்தலைவர் காமராஜர் ஊர்தோறும் பள்ளிக்கூடங்கள் இல்லாதநிலை இருக்கக் கூடாது என்று ஓராசிரியர் பள்ளியாவது இருக்கவேண்டும் என்ற நோக்கில் பள்ளிக்கூடங்களை திறந்துவைத்தார். அதனால்தான் இன்றும் சமுதாயம் அவரை ‘கல்விக்கண் திறந்த காமராஜர்’ என்று போற்றிப் புகழ்கிறது. 6 முதல் 14 வயதுவரை உள்ள குழந்தைகள் யாரும் பள்ளிக்கூடத்திற்கு செல்லாமல் இருக்கக் கூடாது என்ற வகையில், இலவச மற்றும் கட்டாய கல்விச்சட்டம் 2009–ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, 26–ந்தேதி ஜனாதிபதியின் ஒப்புதல் பெற்று, அடுத்த நாளான 27–ந்தேதி அரசிதழிலும் வெளியிடப்பட்டது. இந்த சட்டத்தின்படி, 6 வயது முதல் 14–வயது வரை எல்லா குழந்தைகளும் பள்ளிக்கூடங்களில் இலவச கல்விபெறவேண்டும், 1–ம் வகுப்பு முதல் 8–வது வகுப்புவரை எந்த மாணவனையோ, அல்லது மாணவியையோ பெயிலாக்கி விடக் கூடாது என்பதுதான் இந்த சட்டத்தின் முக்கிய நோக்கமாகும். ஆனால், இவ்வாறு தேர்வு இல்லாமல் மாணவர்களை பாஸ் ஆக்குவதால், அவர்கள் நாம் எப்படியும் தேர்ச்சி பெற்று விடுவோம், பெயிலாக்கமாட்டார்கள் என்ற அசட்டுத் தைரியத்தால் பாடங்களை முறையாக படிப்பதில்லை. வீட்டிலும் பெற்றோர்கள் எப்படியும் பாஸ் ஆகிவிடுவார்கள் என்ற நினைப்பில் மாணவர்களின் கல்வியில் அக்கறை காட்டுவதில்லை என்று பல்வேறு புகார்கள் கூறப்பட்டன.

இப்போது மத்திய அரசாங்கத்தின் மனிதவள மேம்பாட்டுதுறை இந்த சட்டத்தில் ஒரு திருத்தம் கொண்டுவர முடிவெடுத்துள்ளது. இதன்படி, 8–வது வகுப்புவரை எல்லா மாணவர்களும் பாஸ் செய்யப்பட்டு விடுவார்கள் என்ற அந்த சட்டப்பிரிவு திருத்தப்பட்டு, இனி அவ்வாறு இல்லை 5–வது வகுப்பிலும், 8–வது வகுப்பிலும் கண்டிப்பாக தேர்வு எழுதி பாஸ் ஆகவேண்டும். ஒருவேளை மார்ச் மாதத்தில் நடக்கும் தேர்வில் மாணவர்கள் யாராவது பெயிலானால், அவர்களுக்கு மீண்டும் நல்லபயிற்சி அளித்து, மே மாதத்தில் மீண்டும் ஒரு தேர்வு வைக்கப்படும். அதிலும் பெயிலாகும் மாணவர்கள்தான் அந்த வகுப்பிலேயே மீண்டும் ஒரு ஆண்டு படிக்க வைக்கப்படுவார்கள் என்பது தான் அந்த சட்டத் திருத்தம். இதற்கு அமைச்சரவையும் ஒப்புதல் கொடுத்துவிட்டது. ஆக, எந்த நேரத்திலும் பாராளுமன்றத்தில் இந்த சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும் சூழ்நிலையில் இருக்கிறது. இந்த சட்டத்திருத்தம் இப்போது தேவையில்லை. ஏனெனில், இப்போதுதான் மாணவர்கள் தொடக்கக்கல்வியில் இடைநிற்றல் சதவீதம் வெகுவாக குறைந்து 4 சதவீதத்திற்கு வந்திருக்கிறது.

பொதுவாக, இந்த வயதிலுள்ள பிஞ்சு குழந்தைகளை ஒரு வகுப்பில் பெயிலாக்கினால், தன்னுடன் படித்த மாணவர்கள் எல்லாம் அடுத்த வகுப்பிற்கு சென்றுவிட்டநிலையில், அவர்கள் மனம் வெகுவாக பாதிக்கப்பட்டு கல்வியில் ஆர்வம் இல்லாமல் போய்விடும். ஏழை குடும்பங்களிலும் இப்போது இலவச கல்வி என்றநிலையில் பிள்ளைகளை படிக்க அனுப்புகிறார்கள். ஆனால், ஏதாவது வகுப்பில் அவர்கள் வீட்டு குழந்தைகள் பெயிலாகிவிட்டால், படித்ததுபோதும் ஏதாவது ஒரு வேலைக்குப்போய் நீயும் சம்பாதித்தால் குடும்பச் செலவுக்கு உதவும் என்றவகையில் படிப்பை நிறுத்தி விடுவார்கள். குறிப்பாக பெண் குழந்தைகள் படிப்பை இடையில்விடுவது கிராமப் புறங்களில் அதிகரித்து விடும். இந்த வயதில் ஏதாவது வகுப்பில் பெயிலானால் பிள்ளைகளுக்கு தாழ்வு மனப்பான்மை தானாக வந்துவிடும். எனவே, இந்த முடிவை அரசு கைவிடவேண்டும். தமிழக அரசு இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். மாணவர்கள் பெயிலானால் அதற்கு அவர்கள் மட்டும் காரணமல்ல. ஆசிரியர்கள் ஊக்கத்தோடு பணியாற்றி கல்வி புகட்டவும், காலத்திற்கேற்ற உள்கட்டமைப்பு வசதிகளை பள்ளிக்கூடங்களில் ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுத்துதான் கல்வியை வளர்க்க வேண்டுமே தவிர, இவ்வாறு இடையில் பெயிலாக்குவது என்பது நிச்சயமாக ஏற்புடையதல்ல.

Next Story