ஜெயலலிதாவின் சொத்துக்கள்


ஜெயலலிதாவின்  சொத்துக்கள்
x
தினத்தந்தி 20 Aug 2017 9:30 PM GMT (Updated: 2017-08-20T17:32:18+05:30)

பொதுவாக தமிழக அரசியலில் தாங்கள் ஏற்றுக்கொள்ளும் தலைவரை மனதில் வைத்து, எப்போதும் போற்றுவது தொண்டர்களின் வழக்கமாக இருக்கிறது.

பொதுவாக தமிழக அரசியலில் தாங்கள் ஏற்றுக் கொள்ளும் தலைவரை மனதில் வைத்து, எப்போதும் போற்றுவது தொண்டர்களின் வழக்கமாக இருக்கிறது. அந்த வகையில் தான், மறைந்த பெருந்தலைவர் காமராஜர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, தெய்வத்திருமகன்  முத்துராமலிங்க  தேவர்,  புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித்தலைவி ஜெயலலிதா போன்றோரை, அவர்களை பின்பற்றும் தொண்டர்கள், தன்னிகரற்ற தலைவர்களாக மனதில் ஏற்று, ஒவ்வொருவரையும், ஒவ்வொரு அடைமொழிகளுடன் அழைக்கிறார்கள். அவர்களைப்பற்றி பேசுகிறார்கள். இதேபோல், அ.தி.மு.க. தொண்டர்கள் அனைவரும் ஜெயலலிதாவை ‘அம்மா’ என்றுதான் அழைப்பார்கள். அதற்கு அடுத்த வார்த்தை எப்போதுமே கிடையாது. தங்களின் மதிப்புமிகு அம்மா பெங்களூரு தனிக்கோர்ட்டில் விசாரணைக்கு சென்ற போதும், அங்கு அவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட போதும் துடிதுடித்து போய் விட்டார்கள். பலர் துக்கம் தாளாமல் தற்கொலை செய்து கொண்டனர். மீண்டும் கர்நாடக மாநில ஐகோர்ட்டில் நீதிபதி குமாரசாமி அவரை விடுதலை செய்தபோது மகிழ்ச்சியின் எல்லைக்கே போய்விட்டனர். ஆனால், இந்த மகிழ்ச்சி வெகுநாட்கள் நீடிக்கவில்லை.

கடந்த ஆண்டு டிசம்பர் 5–ந்தேதி அவர் இயற்கை எய்தியவுடன், அதன்பிறகு, அ.தி.மு.க.வில் பல மாற்றங்கள் ஏற்பட்டன. எடப்பாடி பழனிசாமி அணி, ஓ.பன்னீர்செல்வம் அணி, டி.டி.வி.தினகரன் அணி என்று அ.தி.மு.க. 3 அணிகளாக பிரிந்தது. எடப்பாடி பழனிசாமி அணியும், ஓ.பன்னீர்செல்வம் அணியும் ஒன்றாக இணைந்தால்தான் ஆட்சி சக்கரம் எளிதில் சுழலமுடியும் என்ற நிலையில் பல பேச்சுவார்த்தைகள் நிகழ்ந்தன. வெளிப்படையாகவும், ரகசியமாகவும் நடந்த பேச்சுவார்த்தைகளில் 2 முக்கிய கோரிக்கைகள் ஓ.பன்னீர்செல்வத்தால் வைக்கப்பட்டன. ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும். சசிகலா குடும்பத்தை அ.தி.மு.க.வில் இருந்து அடியோடு ஒதுக்கி வைக்கவேண்டும் என்பதுதான் அந்த 2 நிபந்தனைகள். இப்போது, இந்த 2 நிபந்தனைகளையும் நிறைவேற்றியதோடு மட்டுமல்லாமல், ஜெயலலிதா வசித்த போயஸ்கார்டனில் உள்ள ‘வேதா நிலையம்’ இல்லம் நினைவிடமாக மாற்றப்பட்டு, பொதுமக்கள் பார்வைக்கு அனுமதிக்கப்படும் என்று மேலும் ஒரு அறிவிப்பையும் எடப்பாடி பழனிசாமி அறிவித்து விட்டார். இதற்கு ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபாவும், மகனான தீபக்கும் எதிர்ப்பு தெரிவித்து, ‘வேதா நிலையம்’ எங்களுக்குத்தான் சொந்தம் என்று கூறி வருகிறார்கள்.

ஜெயலலிதா தன் சொத்துக்கள் குறித்து உயில் எதுவும் எழுதி வைக்கவில்லை என்பதே பரவலாக பேசப்படுகிறது. ஆனால், தன் சொத்துக்கள் எல்லாமே மக்களுக்குத்தான் என்பதை பெங்களூரு தனிக்கோர்ட்டு விசாரணையின்போது வெளிப்படையாகவே அவர் தெரிவித்திருந்தார். 2014–ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் தனிக்கோர்ட்டு விசாரணையின்போது நீதிபதி மைக்கேல் குன்ஹா முன்னிலையில், ‘‘நான் அரசியலுக்கு வருவதற்கு முன்னரே வசதியாக இருந்தவள். செல்வசெழிப்புமிக்க குடும்பத்தில் பிறந்து, அந்தக் காலத்திலேயே திரைப்படங்களில் நடித்து பலகோடி ரூபாய்களை சம்பளமாக பெற்றவள். எனக்கென்று எந்த குடும்பமும் இல்லை. எந்த குடும்பத்துக்கும் சொத்து சேர்க்க வேண்டிய அவசியம் எனக்கில்லை. எனக்குள்ள ஒரே சொத்து தமிழக மக்கள்தான். நான் உழைத்து சம்பாதித்த சொத்துக்கள் அனைத்தும் தமிழக மக்களுக்கே. மக்கள் மன்றத்தில் என்னை சந்தித்து பகைதீர்க்க முடியாத அரசியல்வாதிகள், இந்த வழக்கின் மூலம் என்னை பழி தீர்த்துக் கொண்டிருக்கின்றனர். ‘‘தட்ஸ் ஆல்’’ என்று கூறினார். நீதிமன்றத்தில் ஜெயலலிதா இவ்வாறு கூறியிருப்பது எந்தளவுக்கு சட்டப்பூர்வமாக செல்லுபடியாகும் என்று தெரியவில்லை. ஆனால், அவருடைய சொத்துக்கள் பல உச்சநீதிமன்ற தீர்ப்புப்படி முடக்கி வைக்கப்பட்டுள்ளன. அவரது அண்ணன் மகளும், மகனும் நாங்கள்தான் வேதா நிலையத்தின் வாரிசு என்கிறார்கள். இந்தநிலையில், சட்டம் என்ன சொல்கிறதோ?, அந்தவகையில்தான் வேதா நிலையத்தை அரசுடமையாக்குவது பற்றி கூற முடியும். சட்டம் எந்தப் பக்கத்துக்கு சாதகமாக இருக்கிறது? என்பது அதைக் கொண்டு ஆராயும் போது தான் தெரியும்.

Next Story