கப்பல் பயண சுற்றுலா


கப்பல் பயண சுற்றுலா
x
தினத்தந்தி 22 Aug 2017 11:30 PM GMT (Updated: 2017-08-22T23:55:09+05:30)

இந்தியா ஒரு தீபகற்ப நாடு. மூன்று புறமும் கடலால் சூழப்பட்ட இந்த நாட்டில், 7 ஆயிரத்து 500 கிலோமீட்டர் நீள கடற்கரை இருக்கிறது.

தமிழ்நாட்டில் ஆயிரத்து 76 கிலோமீட்டர் நீள கடற்கரை உள்ளது. இது இந்த மாநிலத்தின் பெருமையை பறைசாற்றுகிறது.

அதிலும் தமிழ்நாட்டில் உள்ள கடல் மிகவும் பாதுகாப்பானது. இங்குள்ள படகு பயணம்கூட ஆபத்தை விளைவிக்காத பயணமாக இருக்கும். தமிழ்நாட்டில் கடல்வழி பயண போக்குவரத்தை முழுமையாக பயன்படுத்தவில்லை என்ற குறை காலம்காலமாக இருக்கிறது. இப்போதெல்லாம் வெளிநாடுகளில் விடுமுறையைக் கழிக்க சொகுசு கப்பல் பயணம், சாதாரண கப்பல் பயணம் என்று கடல்வழி சுற்றுலாவை பெரிதும் விரும்புகிறார்கள். கடலில் ஒருநாள் என்று கூறப்படும் சுற்றுலாத்திட்டங்கள் பல நாடுகளில் சுற்றுலா பயணிகளிடம் இருந்து பெரும் வருமானத்தை ஈட்டித்தருகிறது.

துபாயில் கூட, சிறிய சிறிய சொகுசு கப்பல்கள் ஒருசில மணிநேரம் கடலுக்குள் சுற்றுலா பயணிகளை அழைத்துச்செல்கின்றன. கடலிலேயே உணவு, நடனம் போன்ற பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் என்று துபாய்க்கு செல்லும் சுற்றுலா பயணிகள், கண்டிப்பாக செல்லவேண்டிய ஒரு பயணமாக இந்த கப்பல் பயணங்கள் இருக்கின்றன. இப்போது மத்திய அரசாங்கம் இதுபோல பொழுதுபோக்கு மற்றும் விடுமுறைக்கால கப்பல் பயணங்களை ஊக்குவிக்க தீவிர நடவடிக்கை எடுத்துவருகிறது.

மத்திய சாலைபோக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் கப்பல் துறை மந்திரி நிதின் கட்காரி ஒரு நல்ல அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்தியாவில் மும்பை, கோவா, மங்களூரு, சென்னை, கொச்சி ஆகிய துறைமுகங்களை சொகுசு கப்பல் சுற்றுலா துறைமுகங்களாக அறிவித்துள்ளார். தற்போது இந்தியாவுக்கு வெளிநாடுகளில் இருந்து ஆண்டுக்கு 158 விடுமுறை சுற்றுலா கப்பல்கள் வருகின்றன. இந்த எண்ணிக்கையை 955 ஆக உயர்த்துவதற்கு மத்திய அரசாங்கம் திட்டம் தீட்டி உள்ளது.

இதன்மூலம் இப்போது கிடைக்கும் வருவாய் ஒரு ஆண்டுக்கு ரூ.700 கோடி. 5 ஆண்டுகளில் ரூ.33 ஆயிரத்து 500 கோடியாக உயரும் என்று மத்திய அரசாங்கம் எதிர்பார்க்கிறது. இத்தகைய சுற்றுப்பயணங்களுக்கு சரக்கு மற்றும் சேவைவரியிலிருந்து விலக்கு அளிக்கவும், நிதின் கட்காரி கோரிக்கை விடுத்துள்ளார். இப்போதைய கணக்கின்படி, இந்தியாவில் இருந்து 1 லட்சத்து 20 ஆயிரம் பேர் இதுபோன்ற கப்பல்களில் ஒவ்வொரு ஆண்டும் பயணத்தை மேற்கொள்கிறார்கள். இதில், 90 சதவீதம்பேர் சிங்கப்பூருக்கு உல்லாச பயணமாக செல்கிறார்கள்.

மத்திய அரசாங்கம் சென்னை துறைமுகத்திலிருந்து இதுபோன்ற திட்டங்களை நிறைவேற்றுவது வரவேற்கத்தக்கது என்றாலும், தமிழக அரசு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஈர்க்க இதுபோன்று சிறிய மற்றும் பெரிய உல்லாச கப்பல்களை விடுவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். சென்னையிலிருந்து புறப்பட்டால் மாமல்லபுரம், புதுச்சேரி, நாகப்பட்டினம், ராமேசுவரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி போன்ற இடங்களுக்கு ஆன்மிக சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்யலாம். பொழுதுபோக்குக்காகவும் சுற்றுலாவை ஏற்பாடு செய்யலாம்.

அ.தி.மு.க. அரசு மறைந்த முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை கொண்டாடி கொண்டிருக்கிறது. அவர் உயிருடன் இருக்கும்போது மிகவும் ஆசைப்பட்டது, சென்னையில் இருந்து கன்னியாகுமரிக்கு ‘ஹைட்ரோபாயில்’ என்று கூறப்படும் “பறக்கும் படகு” பயணிகள் போக்குவரத்தை தொடங்கவேண்டும் என்பதுதான். அவருடைய இந்த நிறைவேறாத ஆசையை இப்போது விடுமுறைக்கால மற்றும் பொழுதுபோக்கு சுற்றுலா கப்பல்களை விடுவதன் மூலம் நிறைவேற்ற முடியும். அரசுக்கு வருமானமும் கிடைக்கும், சுற்றுலா பயணிகளையும் ஈர்க்க முடியும். ஓரளவுக்கு வேலைவாய்ப்பும் அதிகரிக்கும். எனவே, மத்திய அரசாங்கத்தின் இந்த திட்டத்தோடு இணைந்து, தமிழக அரசும் நிறைவேற்ற முயற்சி எடுக்கவேண்டும்.


Next Story