இனி ‘நீட்’ தான்; வேறு வழியில்லை


இனி  ‘நீட்’  தான்; வேறு வழியில்லை
x
தினத்தந்தி 23 Aug 2017 8:44 PM GMT (Updated: 2017-08-24T02:14:48+05:30)

‘நீட்’ தேர்வுக்கு விலக்கு இதோ கிடைத்துவிடும், அதோ கிடைத்துவிடும் என்று பல வாக்குறுதிகள் கொடுக் கப்பட்டன. ஆனால், எந்த முயற்சியும் பலனளிக்காமல் நீட் தேர்வுக்கு விலக்கு கிடைக்கவில்லை.

‘நீட்’ தேர்வுக்கு விலக்கு இதோ கிடைத்துவிடும், அதோ கிடைத்து விடும் என்று பல வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டன. ஆனால், எந்த முயற்சியும் பலனளிக்காமல் நீட் தேர்வுக்கு விலக்கு கிடைக்கவில்லை. இந்த காலதாமதத்தால் மாணவர்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர். யதார்த்த நிலைமையை உணராமல், இதிலும் அரசியல் புகுந்து விளையாடியதுதான் இவ்வளவு குழப்பத்துக்கும் காரணம். அறிவுசார்ந்த ஆன்றோர் பலர் தொடக்கத்திலேயே நிச்சயம் நீட் தேர்வுக்கு விலக்கு கிடைக்காது என்று பேசியும் வந்தனர், எழுதியும் வந்தனர். ஆனால், அரசியல் என்ற மேகம் அவர்களின் கருத்துகள் எல்லாம் எடுபடசெய்யாமல் மூடிமறைத்து விட்டது. உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி, 2016–ம் ஆண்டுக்கு மட்டும்தான் நீட் தேர்வுக்கு விலக்கு கிடைத்ததே தவிர, 2017–ம் ஆண்டு முதல் நீட் தேர்வு நடத்தவேண்டியது கட்டாயம் என்றுதான் இருந்தது.

இந்தநிலையில், தமிழகம் முழுவதும், தமிழக மாணவர்கள் மாநில கல்வித்திட்டத்தின் கீழ் படிக்கிறார்கள், கிராமப்புறங்களில் உள்ள ஏழை–எளிய மாணவர்களுக்கு நீட் தேர்வு எழுதுவதற்கான பயிற்சி இல்லை. மேலும், நீட் தேர்வுக்கான கேள்விகள் மத்திய சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தின் கீழ்தான் கேட்கப்படுகின்றன. எனவே, தமிழக மாணவர்களால் நீட் தேர்வு எழுதி வெற்றிபெற முடியாது என்ற காரணங்களுக்காக, சட்டசபையிலும் நீட் தேர்விலிருந்து விலக்கு கேட்டு 2 மசோதாக்கள் நிறை வேற்றப்பட்டன. இந்த மசோதாக்கள், ஜனாதிபதியின் ஒப்புதலை பெறவேண்டிய கட்டாயத்தில் இருந்த நிலையில், மத்திய அரசாங்கத்தின் மனிதவள மேம்பாட்டுத்துறை, சுகாதாரத்துறை ஆகிய துறைகள் அதற்கான பரிந்துரை களை செய்யவில்லை. இருந்தாலும், நீட் தேர்வு எழுதியவர் களில் 15 சதவீத ஒதுக்கீடு அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு கொடுத்தபிறகு, மீதியில் மாநில கல்வித்திட்டத்தின்கீழ் எழுதியவர்களுக்கு 85 சதவீதம் உள்ஒதுக்கீடும், 15 சதவீதம் சி.பி.எஸ்.இ.யில் படித்தவர்களுக்கும் தமிழக அரசு ஒதுக்கி உத்தரவிட்டது. ஆனால், இந்த உத்தரவுகளும் நீதி மன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டன. இந்த ஒரு ஆண்டுக்காவது ‘நீட்’ தேர்வில் இருந்து விலக்கு பெற்று விடலாம் என்ற நம்பிக்கையில் அவசர சட்ட வரைவு தயாரிக்கப்பட்டு மத்திய அரசாங் கத்துக்கு அனுப்பப்பட்டது. அதுவும் சுப்ரீம் கோர்ட்டில் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. தொடக்கத்திலேயே இதற்கு ஒப்புதல் கிடைக்கவில்லை என்ற நிலையிலேயே, சரி கிடைப்பதற்கு சந்தேகம்தான் என்று யதார்த்த உண்மைகளை புரிந்து கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வேண்டும்.

இப்போது எல்லோரும் கேட்கும் கேள்வி, சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தின் கீழ்தான் கேட்கிறார்கள் என்றால், நமது பாடத்திட்டத்தையும் அதற்கு இணையாக உயர்தரத்தில் வகுக்கப்படாமல் வைத்ததற்கு யார் காரணம்?. தமிழ்நாட்டை தவிர, இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் மாணவர்கள் நீட் தேர்வை எழுதும் வகையில்தான் பாடத்திட்டம் இருக்கிறது. அந்த மாணவர்களால் எழுத முடிகிறது என்றால், தமிழக மாணவர்களால் ஏன் எழுதமுடியாது?. அவர்களுக்கு எல்லாம் நுழைவுத்தேர்வு எழுதி பழக்கமிருக்கிறது. நமது மாணவர்களுக்கு பழக்க மில்லை என்று ஒரு கருத்து கூறப்படுகிறது. நுழைவுத்தேர்வு இல்லையென்றாலும், அதை எழுதி தேர்வு பெறுவதற்கான தகுதியை மாணவர்களுக்கு உருவாக்காமல் இருந்தது, தவறு என்பதை யாரும் மறுக்கமுடியாது. போனது போகட்டும், இனிமேலாவது உடனடியாக 1–ம் வகுப்பு முதல் 12–ம் வகுப்புவரை மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்துவதற்கான நடவடிக்கையை, கற்பித்தலை மேம்படுத்துவதற்கான நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும். சி.பி.எஸ்.இ.க்கு இணையான பாடத்திட்டங்கள் உருவாக்கப்படவேண்டும். இப்போது 11, 12–ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு நீட் தேர்வை எதிர்கொள்வதற்கான சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படவேண்டும். அதை நடத்துவதற்கு ஏற்றவகையில், ஆசிரியர்களின் திறமையையும், உள்கட்டமைப்பு வசதிகளும் மேம்படுத்தப் படவேண்டும். ஆக, இனி மாணவர்களின் எதிர்காலம், தமிழக கல்வித்துறையிடம்தான் இருக்கிறது என்பதை புரிந்துகொண்டு உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

Next Story