நகராட்சிக்குள் ‘டாஸ்மாக்’ கடைகள்


நகராட்சிக்குள்  ‘டாஸ்மாக்’  கடைகள்
x
தினத்தந்தி 24 Aug 2017 8:28 PM GMT (Updated: 24 Aug 2017 8:28 PM GMT)

கடந்த மார்ச் மாதம் சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த ஒரு உத்தரவு, நாடு முழுவதும் ஒரு பெரிய குழப்பத்தை ஏற்படுத்திவிட்டது.

டந்த மார்ச் மாதம் சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த ஒரு உத்தரவு, நாடு முழுவதும் ஒரு பெரிய குழப்பத்தை ஏற்படுத்தி விட்டது. தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாநில நெடுஞ்சாலைகளிலிருந்து 500 மீட்டர் தூரத்திற்குள் உள்ள அனைத்து மதுக்கடைகளும் மூடப்படவேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு ஒரு உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த உத்தரவால், ‘கிளப்’கள், ஓட்டல்களில் உள்ள பார்கள் உள்பட ஏராளமான டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. எந்த ஓட்டல் என்றாலும் அல்லது டாஸ்மாக் கடைகள் என்றாலும், சாலை ஓரமாகத்தான் அமைப்பார்களே தவிர, 500 மீட்டரைத்தாண்டி யாரும் அமைப்பதில்லை. இந்த உத்தரவு மாநிலங்களின் வருவாயில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. தமிழக அரசின் வருவாயில் ஒரு கணிசமான அளவு டாஸ்மாக், பார்களில் விற்கப்படும் மதுவகைகள் மீது போடப்படும் வரி வருவாயால்தான் கிடைத்து வந்தது. தமிழ்நாட்டை எடுத்துக்கொண்டால், 2015–16–ம் ஆண்டுகளில் 6 ஆயிரத்து 856 கடைகள் இருந்தன. மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் உத்தரவின் பேரில், இருமுறை தலா 500 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. மீதமுள்ள 5 ஆயிரத்து 856 கடைகளில், சுப்ரீம் கோர்ட்டு முந்தைய உத்தரவால் 3,321 கடைகள் மூடப்பட்டு, அதில் 1,183 கடைகள் வேறு இடங்களில் திறக்கப்பட்டன.

சுற்றுலா பயணிகளும், தமிழ்நாட்டில் சில நாட்கள் நட்சத்திர ஓட்டல்களில் தங்கி சுற்றிப்பார்க்க வேண்டும் என்ற உணர்வை விட்டுவிடும் நிலைமை ஏற்பட்டது. சுற்றுலா தொழில் பெரும் பாதிப்புக்குள்ளாகியது. சர்வதேச கருத்தரங்குகள், தேசிய அளவிலான கருத்தரங்குகள் தமிழ்நாட்டில் நடத்தப்படாமல் அண்டை மாநிலங்களுக்கும், புதுச்சேரிக்கும் செல்லும் நிலைமை ஏற்பட்டுள்ளது. ஒருபக்கம் மாநில வருவாய் குறையும் நிலையில், மற்றொரு பக்கம் ஆயிரக்கணக்கானோர் வேலையை இழக்கும்நிலை ஏற்பட்டது. இந்தநிலையில், சுப்ரீம் கோர்ட்டு மீண்டும் நகர்ப்புறங்களுக்குத் தான் 500 மீட்டர் தூரம், 20 ஆயிரம் மக்கள்தொகைக்கும் குறைவாக கொண்ட ஊர்களில் உள்ள மதுக்கடைகளுக்கு 220 மீட்டர் தூரம் என்று மாற்றி அமைத்தார்கள். பல மாநிலங்களில் தேசிய நெடுஞ்சாலைகளை, மாநில நெடுஞ்சாலை, உள்ளாட்சி சாலைகளாக மாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையும் எதிர்த்து மாநில ஐகோர்ட்டுகளிலும், சுப்ரீம் கோர்ட்டிலும் வழக்குகள் தொடரப்பட்டன. இப்போது இந்த வழக்குகளில் சுப்ரீம் கோர்ட்டு ஒரு நல்ல விளக்கத்தை தந்துள்ளது. தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலைகளிலிருந்து 500 மீட்டர் தூரத்திற்குள் பார்களோ, மதுக்கடைகளையோ அமைக்கக்கூடாது என்ற உத்தரவு ஊருக்கு வெளியே உள்ள சாலைகளுக்குத்தான் பொருந்துமே தவிர, நகரசபை பகுதிகளிலுள்ள சாலைகளுக்கும், நெடுஞ்சாலைகளுக்கும் பொருந்தாது என்று விளக்கம் அளித்துள்ளது. இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு கடந்த ஜூலை மாதம் 11–ந் தேதி பிறப்பித்த உத்தரவு, இப்போது சுப்ரீம் கோர்ட்டு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவு நிச்சயமாக வரவேற்கத்தக்கது.

இந்தநிலையில், ஐகோர்ட்டுகளில் தொடரப்பட்ட வழக்குகள் எல்லாம், சுப்ரீம் கோர்ட்டு இந்த விளக்கத்தை கொடுத்துள்ளநிலையில் பயன் அளிக்காததாக போய்விடும்.  சுப்ரீம் கோர்ட்டின் முந்தைய உத்தரவின் முக்கியநோக்கமே, குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களால் ஏற்படும் விபத்துகளின் எண்ணிக்கையை தவிர்க்கவேண்டும், குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதை தடுக்கவேண்டும் என்றால், அது போலீசார் நடத்தும் தீவிர சோதனையில்தான் இருக்கிறது. அதற்கான தண்டனைகளை கடுமைப்படுத்தலாம். அதை தீவிரப்படுத்தவேண்டுமே தவிர, அதை விட்டுவிட்டு சாலை ஓரம் மதுக்கடைகளை மூட வேண்டும் என்று உத்தரவிடுவதில் மட்டும் நிச்சயமாக பலன் கிடைத்துவிடாது. எனவே, நகரசபை பகுதிகளில் மட்டுமல்லாமல், இந்த விதிவிலக்கு எல்லா இடங்களிலும் உள்ள கடைகள், பார்களுக்கும் பொருந்தும் வகையில் அளிக்கவேண்டும்.

Next Story