வேலைவாய்ப்புதான் எல்லா வளர்ச்சிகளுக்கும் அடிப்படை


வேலைவாய்ப்புதான்  எல்லா வளர்ச்சிகளுக்கும்  அடிப்படை
x
தினத்தந்தி 28 Aug 2017 9:30 PM GMT (Updated: 2017-08-28T20:00:47+05:30)

ஒரு மாநிலம் எல்லா வளர்ச்சிகளையும் பெற்றிருக்கிறது என்பதற்கான அடையாளம் அங்குள்ள வேலைவாய்ப்புகளின் பெருக்கம்தான்.

ரு மாநிலம் எல்லா வளர்ச்சிகளையும் பெற்றிருக்கிறது என்பதற்கான அடையாளம் அங்குள்ள வேலைவாய்ப்புகளின் பெருக்கம்தான். வேலைவாய்ப்பு இருந்தால் நிச்சயமாக அங்கு உற்பத்தி வளர்ச்சி இருக்கும். அதாவது, விவசாயமும், தொழிற்சாலைகளின் உருவாக்கமும் அதிகமாக இருக்கும். தமிழ்நாட்டை பொறுத்தமட்டில், தற்போது விவசாயம் லாபகரமாக இல்லாததாலும், பருவமழை தொடர்ந்து பொய்த்துவருவதாலும், விவசாயத்துறையில் வேலைவாய்ப்புகள் வெகுவாக குறைந்து கொண்டு வருகின்றன. கிராமப்புறங்களில் வேலைவாய்ப்புகள் இல்லாதவர்கள், வேலைதேடி நகர்ப்புறங்களுக்கு வந்தால் இங்கேயும் வேலைவாய்ப்புகள் இல்லை. நகர்ப்புறங்களில் கட்டிடத்தொழில்தான் பெரும் வேலைவாய்ப்புகளை அளித்து வந்தது. ஆனால், கட்டிடத் தொழிலிலும் இப்போது பெரியதேக்கம் ஏற்பட்டுள்ளது. கோடிக்கணக்கில் முதலீடுசெய்து அடுக்குமாடி வீடுகளை கட்டி வைத்திருப்பவர்கள், இப்போதுள்ள காலக்கட்டத்தில் வீடுகள் விற்கப்படாமல் அப்படியே கிடப்பதால், ‘‘எங்கள் முதலீடுகள் எல்லாம் முடங்கிப்போய்விட்டன. எங்களால் புதிய கட்டுமானப்பணிகளை தொடங்க முடியவில்லை’’ என்று சோர்ந்துபோய் இருக்கிறார்கள். அதற்கு அவர்கள் கூறும் காரணம், வேலைவாய்ப்புகள் அதிகமாக இருந்தால்தான், குறிப்பாக படித்த இளைஞர்கள் அதிகமான வேலைவாய்ப்புகளை பெற்றால்தான், தங்கள் முதலீடாக வீடு வாங்க முன் வருவார்கள். இப்போது இளைஞர்கள் மத்தியில் வேலைவாய்ப்புகள் இல்லை, குறிப்பாக தகவல் தொழில்நுட்பத்துறையில் போதிய அளவில் வேலைவாய்ப்பும் இல்லை. வீடு வாங்கும் அளவிற்கு அவர்களுக்கு ஊதியமும் இல்லை என்ற காரணத்தால், ரியல் எஸ்டேட் தொழில் அப்படியே முடங்கிப்போய்விட்டது என்கிறார்கள்.

இதுமட்டுமல்லாமல், 1,000, 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு வந்தபிறகும், சரக்குசேவைவரி அமலுக்கு வந்தபிறகும், வேலைவாய்ப்புகள் முடங்கிப்போய்விட்ட நிலையிலும், கட்டுமான தொழில் உள்பட அனைத்து தொழில்களும், வீட்டு நுகர்வோர் பொருட்கள் விற்பனையும் பெரிதும் பாதிப்புக்குள்ளாகிவிட்டது. சில ஆண்டுகளுக்கு முன்பு பொறியியல் படித்து முடித்தவுடன் கையிலே வேலை, பை நிறைய சம்பளம் என்றநிலை இருந்தது. ஆனால், இப்போது வேலைவாய்ப்பு இல்லாத நிலையில், பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கை முடிவுகளைப் பார்த்தால் மிகவும் அதிர்ச்சிகரமாக இருக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள 517 பொறியியல் கல்லூரிகளில் 2,61,692 இடங்கள் இருக்கின்றன. இந்த ஆண்டு கவுன்சிலிங் வந்த மாணவர்களின் எண்ணிக்கையோ 1,35,552 பேர்கள்தான். இதிலும் தகுதியுள்ள 86,355 மாணவர்களுக்கு மட்டுமே இடம் கிடைத்துள்ளது. உடனடியாக வேலைவாய்ப்பு இல்லை என்பதுதான் இவ்வளவு மந்தமான நிலைக்கு காரணமாகும். என்ஜினீயரிங் படித்தவர்கள் தங்கள் படிப்புக்கு சம்பந்தமில்லாத வேலைக்கு செல்லவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சியில் துப்புரவு தொழிலாளர்களாக பணிபுரிந்து மரணமடைந்த தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு அதேவேலை வழங்கப்பட்டுள்ளது. இதில், 2 பேர் பி.இ. படித்தவர்கள். ஒருவர் எம்.இ. படித்தவர். ஒருவர் எம்.பி.ஏ. படித்தவர். ஒரு பெண் பி.எஸ்சி., பி.எட். படித்தவர். மேலும், இருவர் பட்டப்படிப்பு படித்தவர்கள் என்றால், வேலைவாய்ப்பு நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருக்கிறது என்பது ஆணித்தரமாக தெரிகிறது. தற்சமயம் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை 81,77,472 ஆகும். ஆக, வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் அரசு உடனடியாக கவனம் செலுத்தவேண்டும். பிரதமர் நரேந்திரமோடி சமீபத்தில் தனியார் முதலீடுகளை ஊக்குவிக்கவும், வேலைவாய்ப்புகளை பெருக்கவும், பல்வேறு நிறுவனங்களில் உள்ள 200 இளம் தலைமை செயல் அதிகாரிகளை சந்தித்து பேசியிருக்கிறார். இதில், இந்தியாவில் தயாரிப்போம் திட்டம், 2022–ல் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் திட்டம், வேலைவாய்ப்பு பெருக்கம், எளிதாக தொழில் தொடங்குவதற்கான வழிமுறைகள் உள்பட பல ஆக்கப்பூர்வமான வி‌ஷயங்கள் பேசப்பட்டிருக்கின்றன. தமிழ்நாட்டிலும் விவசாயத்திலும், தொழிலிலும் வேலைவாய்ப்புகளை பெருக்க, பிரதமர் நரேந்திரமோடி பாணியை பின்பற்றி தமிழக முதல்–அமைச்சரும் செயல்படவேண்டும். உடனடியாக வேலைவாய்ப்பு பெருக்கம் என்பதையே முதல் குறிக்கோளாகக்கொண்டு வேகமாக அரசு செயல்பட வேண்டும்.

Next Story