குழந்தை திருமணங்கள் தடுப்பு


குழந்தை திருமணங்கள் தடுப்பு
x
தினத்தந்தி 29 Aug 2017 9:30 PM GMT (Updated: 29 Aug 2017 1:12 PM GMT)

ஒவ்வொரு மாவட்ட நிர்வாகமும், அந்த மாவட்ட கலெக்டரின் துடிப்பான செயல்பாட்டின் அடிப்படையில்தான் இருக்கிறது.

வ்வொரு மாவட்ட நிர்வாகமும், அந்த மாவட்ட கலெக்டரின் துடிப்பான செயல்பாட்டின் அடிப்படையில்தான் இருக்கிறது. அதனால்தான், சமீபத்தில் பிரதமர் நரேந்திரமோடி, இந்தியாவில் உள்ள அனைத்து மாவட்ட கலெக்டர்களுடனும், ‘வீடியோ கான்பரன்சிங்’ மூலம் உரையாற்றியபோது, அவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக, ஊக்கப்படுத்தும் விதமாக, ‘‘மாவட்டங்களில் பெரிய மாற்றம் வரும்வகையில் சீர்திருத்த நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டும்’’ என்றார்.

அந்த வகையில், நெல்லை மாவட்ட கலெக்டராக பொறுப்பேற்றுள்ள சந்தீப் நந்தூரி, சமீபத்தில் செயல்படுத்திய இரு திட்டங்கள் மிகவும் வரவேற்புக்குரியதாக இருக்கிறது. கலெக்டர் அலுவலகத்திற்கு முன்பு, ‘அன்பு சுவர்’ என்று ஒரு சுவருக்கு பெயரிட்டு, ‘அங்கு மக்கள் தாங்கள் பயன்படுத்திய அல்லது பயன்படுத்தாத பொருட்களை கொண்டுவந்து வைத்துவிடலாம். தேவையுள்ளவர்கள் அங்கு வந்து இதை எடுத்துச்செல்லலாம்’ என்று கூறி, இந்த திட்டத்தை தொடங்கிவைத்தார். ஏராளமானவர்கள் துணிமணிகள், பாத்திரங்கள், விளையாட்டு பொருட்கள், பொம்மைகள் என்று பலவிதமான பொருட்களை கொண்டுவந்து வைக்கிறார்கள். அந்தப்பொருட்களை தேவைப்படும் ஏழைகள் எடுத்துச்சென்று கொண்டிருக்கிறார்கள். பொருட்களை கொண்டுவந்து வைப்பதற்கும், விரும்பிய பொருட்களை எடுத்து செல்வதற்கும் எந்த அனுமதியும் தேவையில்லை.

இதுபோல, இந்த மாவட்டத்தில் குழந்தைகள் திருமணத்தை அறவே ஒழிக்கும் நடவடிக்கைகளிலும் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். 2006–ம் ஆண்டு குழந்தைகள் திருமண தடைசட்டத்தின் கீழ், 18 வயதுக்கு கீழ் உள்ள பெண்களுக்கும், 21 வயதுக்கு குறைவாக உள்ள ஆண்களுக்கும் நடைபெற இருக்கும் திருமணம், ‘குழந்தை திருமணம்’ ஆகும். எவ்வளவோ படிப்பறிவு உயர்ந்து கொண்டிருக்கும் நேரத்தில், இன்னமும் பல இடங்களில் படிப்பறிவு இல்லாதவர்கள் வீடுகளில், ஏழைகளின் வீடுகளில், பணக்காரர்கள் வீடுகளில், 18 வயதுக்கு குறைவான பெண் குழந்தைகளின் திருமணங்கள், அவர்களின் விருப்பங்களுக்கு எதிராக, படிப்பை தடுக்கும் வகையில் நடந்து கொண்டிருக்கின்றன. பல நேரங்களில், இதுகுறித்து புகார் கொடுக்க எங்கே செல்வது? என்று தெரியாதநிலை இருக்கிறது. இதை தடுக்கும் வகையில், மத்திய அரசாங்கத்தின் ‘பெண் குழந்தைகளை பாதுகாப்போம், பெண் குழந்தைகளுக்கு கல்வி அளிப்போம்’ என்ற திட்டத்தின்கீழ், நெல்லை மாவட்ட கலெக்டர், அந்த மாவட்டத்தில் உள்ள 333 உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிக்கூடங்களில் படிக்கும் ஒரு லட்சத்து 29 ஆயிரத்து 786 மாணவிகளுக்கு, கலெக்டரின் முகவரியிட்ட தபால் கார்டுகளை வழங்கிக் கொண்டு வருகிறார். இவர்களில், 34 ஆயிரத்து 432 மாணவிகள் 9–வது வகுப்பு மாணவிகள். 34 ஆயிரத்து 550 மாணவிகள் 10–வது வகுப்பு மாணவிகள். 29 ஆயிரத்து 404 மாணவிகள் 11–வது வகுப்பு மாணவிகள். 31 ஆயிரத்து 400 மாணவிகள் 12–வது வகுப்பு படிக்கிறார்கள்.

இந்த மாணவிகள் எல்லோரும் தங்களுக்கோ, தங்களுக்கு தெரிந்தவர்களுக்கோ, அல்லது தங்கள் பகுதியில் உள்ள யாருக்கோ குழந்தை திருமணம் நடப்பதுபற்றி தெரிந்தால், அந்த தபால் கார்டில் விவரங்களை எழுதி அனுப்பி விட்டால் போதும். ‘மாவட்ட கலெக்டர் உடனடியாக சமூகநலத்துறை மூலமாக நடவடிக்கை எடுப்பார். குழந்தை திருமணத்தை தடுப்பார்’ என்ற உறுதிமொழி அளிக்கப்பட்டுள்ளது. சட்டத்தின்படி, குழந்தை திருமணம் செய்து வைத்தால், 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1 லட்சம் வரை அபராதமும் விதிக்க வகை இருக்கிறது. நெல்லை மாவட்ட கலெக்டர் இத்தகைய நடவடிக்கைகளை எடுத்துள்ளது நிச்சயம் பாராட்டுக்குரியதாகும். அவர் எடுத்துள்ள இந்த முயற்சியைபோல, எல்லா மாவட்ட கலெக்டர்களும், ‘அன்பு சுவர்’ திட்டத்தையும், பள்ளிக்கூட மாணவிகளுக்கு ‘தபால் கார்டு’ வழங்கும் திட்டத்தையும் அமல்படுத்தினால், நிச்சயமாக குழந்தை திருமணத்தை தமிழ்நாட்டில் தடுக்கவும் முடியும், கொடுப்பதில் மகிழ்வையும், இல்லாதோர் பெறுவதையும் ஊக்குவிக்கவும் முடியும்.

Next Story